அரிய பாடம்....?
அன்பு ஒளி
What God has in Store for you

நான் ஒரு மருத்துவர். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை, இரு ஆண் பிள்ளைகள், தமிழ் நாட்டிலிருந்து வந்த நாங்கள், லண்டன் பட்டணத்திலிருந்து சுமார் 60 மைல் தொலைதூரத்தில், ஓர் அழகிய கிராமத்தில் வசித்து வருகின்றோம்.
 
வேதத்தை அருமையாக விளக்கும் ஓர் ஆராதனையில் ஒழுங்காகப் பங்கு பெற்று வருகிறோம். என் மனைவியும் ஓர் மருத்துவர். எங்களுக்கு நல்ல வருமானம். எங்கள் இரண்டு குடும்பத்தின் பெற்றோர்களும் ஆண்டவரை அதிகம் நேசிக்கிறவர்கள்.
 
எனக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒரு நாள் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் நீண்ட வாக்குவாதம் எழுந்தது. எனக்கு வந்த கோபத்தில் நான் என் மனைவியை இரண்டு அடிகள் அடித்து, அப்படியே தள்ளிவிட்டு விட்டேன்.
 
கீழே விழுந்த என் மனைவி முகத்தில் காயம். இந்த சத்தத்தைக் கேட்ட அண்டை வீட்டுக்காரர் போலீசுக்கு உடனே போன் பண்ணிவிட்டார். அடுத்த 10 நிமிடத்தில் இரண்டு போலீசும், ஒரு பெண் போலீசும் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். கன்னத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
 
என்னைப் போலீஸ் அழைத்துச் செல்லும்போது கதறிக்கதறி அழுதாள் என் மனைவி. லண்டன் மாநகரத்தில் போலீஸ் கெடுபிடி அதிகம். போலீஸ், தங்கள் காரில் கொண்டு சென்றபோது என் பாக்கெட்டில் இருந்த செல்போன். ஐ.டி.கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் என்னுடைய பர்ஸில் இருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டனர். என் வாழ்க்கையில் முதல் தடவையாக போலீஸ் காரில் பயணம் செய்தேன். ஒரே பயம்! திகில்! அது இரவு சுமார் 10 மணி இருக்கும்! நல்லவேளை, என் பிள்ளைகள் மூன்று பேரும் அவ்வேளையில் தூங்கிவிட்டனர்.
 
போலீஸ் ஸ்டேஷனில் என்னிடம் கேட்ட கேள்வி பதில்கள் அத்தனையையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். எனக்கு இன்னும் பயம். என் வாழ்க்கையே தொலைந்தது போல எண்ணினேன். "எப்படி இந்த இடத்திலிருந்து வெளியே வருவது"? என்று எண்ண ஆரம்பித்தேன். பிறகு உணவு கொடுத்தார்கள். சாப்பிட இஷ்டமில்லை. என் அறையில் 5 பேர் இருந்தார்கள். 5 பேரும் முரடர்கள். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள்.
 
எளிய படுக்கை. வெளியே நல்ல குளிர். உள்ளே உஷ்ணப்படுத்தியிருந்தார்கள். இரவு 12 மணிக்கு எனக்கு ஜெபிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முழங்கால் போட்டேன். கதறிக் கதறி அழுதேன்.
 
அந்த அறையில் இருந்த 5 பேரும் விழித்துக் கொண்டார்கள். ஆங்கிலத்தில் "சத்தம் போடாதே" என்றார்கள்.  இப்போது என்னுடைய சத்தத்தைக் குறைத்து அதிகமான கண்ணீர் விட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். என் தவறுகள் ஒவ்வொன்றாக என் மனதில் வந்தது. தேவனிடம் அறிக்கைவிட ஆரம்பித்தேன். மனைவியை அடித்தது... தசமபாகம் தேவனுக்கு கொடுக்காதது... வேதம் வாசிக்காதது... எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக ஞாபகப்படுத்தினார். சுமார் 3 மணி நேரம் அழுது ஜெபித்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டேன்.
 
காலை 7 மணி இருக்கும்! எங்கள் அறைக்கு நல்ல சூடான டீ கொண்டு வந்தார்கள். குடித்த மறுபடியும் ஜெபித்தேன்! காலை 8 மணிக்கு காலை உணவு.. நன்றாகச் சாப்பிட்டேன். அடுத்த நாள் என்னை விசாரணை செய்தார்கள். மூன்று நாள், நான் சிறையில் இருந்தேன். ஆனால், முதல் சில மணி நேரம் தவிர மற்ற நேரத்தில் தேவன் என்னிடத்தில் நெருக்கமாக இருப்பதை உணர முடிந்தது.. என்னை தேவன் புதுப்பிக்க அர்ப்பணித்தேன். இழந்துபோன மகிழ்ச்சி எனக்குத் திரும்பவும் கிடைத்தது. ~யோனா| கதை என் வாழ்வில் நடந்து  கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
 
இதற்கிடையில், என் மனைவி இரவு பகலாக முயற்சி செய்து, போலீஸை தொடர்பு கொண்டு, மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்களாம். ஆனால், என்னை சந்திக்கவோ, பார்க்கவோ போலீஸ் அனுமதிக்கவில்லை.
 
3 நாட்களுக்குப் பிறகு என்னை கோர்ட்டிற்கு கொண்டு சென்றார்கள். "தெரிந்த யாராவது உண்டா?" என்று நோட்டமிட ஆரம்பித்தேன். தூரத்தில் என் மனைவி நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அதிக கவலையோடு இருந்தார்கள். ஆனால், என் மனதிலோ மகிழ்ச்சி.. ஜட்ஜ்க்கு முன் நின்ற போது நடந்த எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டேன்.
 
அந்நாட்டின் சட்டப்படி, ஓர் சிறிய தொகையை அபராதமாக விதித்தார்கள். உடனே அபராதத்தை என் மனைவி கட்டினார்கள்.
 
மறுபடியும் 15 நாட்களுக்குப் பிறகு வந்து பார்க்க வேண்டும். ஒரு மாதம் கழித்து இந்த கேஸை முடிப்போம்" என்று சொன்னார்கள்.
 
என் பொருட்கள் எல்லாவற்றையும் உடனே தந்து, விடுதலை செய்தார்கள். வெளியே வந்தேன். என் மனைவி, தான் எடுத்த பிரயாசம் அத்தனையையும் கண்ணீரோட சொன்னார்கள். என் மனைவியின் கரத்தைப் பிடித்து தேம்பித் தேம்பி அழுதேன். தேவன் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்களைச் சொன்னேன். என் மனைவி அமைதியாய்க் கண்ணீர் விட்டார்கள்.
 
வெளி தேசத்தில், பணத்திற்காகவே வாழ்ந்து விட்ட என்னை.. தேவன் ஒரு சிறைக்குள்ளே நிறுத்தி கற்றுக் கொடுத்த பாடம் எத்தனை புதுமையின் பாடங்கள்!
 
நண்பரே! தூரசேதத்தில் தேவனை மறந்து விட்டீர்களோ? தாங்களும் நெருக்கத்தில் இருக்கின்றீர்களோ? கடந்த நாட்களில், மறந்துவிட்ட பொருத்தனைகளை மறுபடியும் நினைவு கூறுங்கள். ஒத்துக்கொள்ளுங்கள். புதிய தீர்மானங்களை எடுங்கள். தேவன் தங்களை உயிர்ப்பிப்பார். வழி நடத்துவார். கனப்படுத்துவார். உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்.
 
"ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்". (வெளி 2;:4,5)                        

-டாக்டர். பிரேம் சிங், லண்டன்.


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'