தனிமையின் கொடுமை
திரு. ராஜாசிங்
Reaching out people

கேள்வி –பதில்

எனக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன. சிறிய ஊரில் பிறந்த நான், படிப்பு முடித்தவுடன் கோவையில் சொந்தமாக நிறுவனம் வைத்திருப்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். பற்பல கனவுகளுடன் வந்த எனக்கு, இந்த 8 மாதங்களில் வீடு மட்டும் தான் என்று தெரிந்துபோனது. அவர் எப்போதும் வேலை வேலை என்று என்னிடம் நேரம் செலவழிப்பதே இல்லை. தனிமையின் கொடுமை தாங்காமல் தினம் தினம் அழுது கொண்டிருக்கின்றேன்.

(ஆலோனைக்கு ஏங்கும் வாசகி)

 

அருமை சகோதரிக்கு,

தனிமையாய் இருந்த தங்களுக்கு பெற்றோரும், உற்றாரும் ஜெபிக்கிற பழக்கம் உள்ள அனைவரும் தங்களுக்கு வரனை கண்டு பிடித்தது எத்தனை பெரிய பாக்கியம். இன்றும் 30 வயதை தாண்டிய பலர் திருமண மாப்பிள்ளை கிடைக்காமல் ஏங்குகிறதை கண்டு குடும்ப ஊழியம் செய்கிற நாங்கள் மனம் உடைந்த நேரங்கள் உண்டு.  திருமணமான தாங்கள் தங்களுடைய திருமண வாழ்விற்காக எத்தனை மன நிறைவாயிருக்க வேண்டும். தாங்கள் கணவர் வேலைக்கு செல்பவர் என்றும், அத்துடன் வருமானத்தை கொண்டு வருபவர் என்றும், உங்கள் பொருளாதாரத்தில் குறைவு இருக்காது என்று  கணக்கிட்டு வாழ்த்துகிறோம்.

வீட்டு செல்ல பிள்ளையாக இருந்த தாங்கள், புது குடும்பத்தை உருவாக்கி ராணியாக இருக்கின்றீர்கள். பெற்றோரை விட்டு வந்த தனிமை, காலையிலே புறப்பட்டு இரவில் அதிக நேரம் கழித்து வருகின்ற  கணவர்  என்ற எண்ணங்கள் வாட்டுகிறது என்ணி நாங்கள் மனம் வருந்தவில்லை, பதிலாக மகிழ்ச்சி அடைகிறோம். காரணம் தாங்கள் பெற்றுள்ள குடும்ப வாழ்க்கையில் இத்தனை மாற்றங்களுக்கு மத்தியிலும், செய்ய வேண்டிய வேலைகள் பல உண்டு. அவைகளை தனியாக இருக்கிறோம் என்று விட்டு விட தேவையில்லையே.

* கணவரை வேலைக்கு அனுப்புமுன் காலை உணவு ஆயத்தப்படுத்தி சாப்பிட வைத்து, மதிய உணவையும் வேகமாக கட்டி கொடுத்து வாழ்த்தி அனுப்பி, மற்ற வீட்டு வேலைகளை பகலில் பார்த்து மதியம் கொஞ்சம் ஓய்வு எடுத்து மாலையில் மறுபடியும் மறுநாளுக்கான, இரவுக்கான காரியங்களையும் திட்டமிட்டு தங்களின் தனிமையின் எண்ணத்திலிருந்து அகற்றி கொள்ளலாமே.

* பெற்றோருடன் அடிக்கடி பேசலாம் பகல் வேளைகளில். உடன் பிறந்தவர்களை கூப்பிட்டு விசாரிக்கலாம். மாமனார், மாமியார் தூரத்தில் இருந்தால் அவர்களையும்  அனுதினமும் போனில் பேசி உற்சாகப்படுத்தலாம்.

* தாங்கள் வேத புத்தகங்களை நேசிப்பவராக இருந்தால், காலையில் சில அதிகாரங்களை படித்து தியானித்து விட்டு, மதிய உணவிற்கு முன் பலரது ஜெப குறிப்புகளுக்காக ஜெபம் செய்யலாம்.

* மாலையில் ஆவிக்குரிய காரியங்களில் நேரத்தை செலவு செய்யலாம்.

* தங்கள் கணவர் மிகவும் பின் தங்கி வருவார் என்றால், அவரை உற்சாக படுத்தி, இப்போதுதான் திருமணம் ஆகி இருக்கின்றது. வீட்டுக்கு எப்படியாவது 7 மணிக்குள் வந்து விடுங்கள் என்று, அன்போடு பேசி சீக்கிரம் வரவைக்கலாம்.

* தங்கள் கணவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் என்ன பொறுப்பில் இருந்தாலும், அவருக்கும் ஒரு நாளைக்கு 2,3 தடவை போன் பண்ணி சாப்பிட்டீர்களா, வேலை எப்படி இருக்கின்றது சீக்கிரம் வீட்டுக்கு வந்தால் நல்லாயிருக்கும் என்று அவரை உற்சாகப்படுத்தலாமே.

* தனிமையை போக்க தாங்கள் இன்னும் அநேக காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்தலாம்.

* இன்று நீங்கள் 2 பேர். இன்னும் சில மாதங்களில் புதிய பரிசை தேவன் உங்களுக்கு தருவாரே. அப்போது நெரமே போதாதே. அந்த செல்ல பிள்ளையை கொஞ்சுவதற்கு ஆயத்தப்படுங்கள்.

* இல்லாததை கண்டு கவலைப்படாமல் தேவன் கொடுத்த கணவருக்காக, அவருடைய வேலைக்காக, உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நேரம் என்ற பொக்கிஷத்திற்காக தங்கள் நன்றி சொல்ல வேண்டுமே அன்றி, அவைகளை எதிர் மறையாக எண்ணாதிருங்கள்.

* தங்கள் வீடு ஒரு தனி வீடு  என்று எண்ண வேண்டாம். தேவன் தங்கள் வீட்டில் வாசம் செய்கிறார். அவரோடு உறவாடுங்கள். அன்புக்குரியவர்களுக்கும் அடிக்கடி போன் பண்ணி  உற்சாகப்படுத்துங்கள். இது தற்காலிக தனிமை தான். இந்த தனிமை உங்களை தீண்ட கூடக்கூடாது. உங்கள் தைரியத்தை இழக்க செய்யக்கூடாது. இது எதிராளியான பிசாசின் கொக்கரிப்பு. மாறாக நேரம் கண்டு பிடித்து, முன்னால் சொன்னது போல இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு, வேதம் வாசிக்க, ஜெபிக்க, ஒய்வெடுக்க, கண்வரின் வரவை எதிர்பார்த்து அவருக்கு உற்சாகமான தோழமை கொடுக்க அந்த முழு நாளையும் உங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.

* துவக்க நாட்களில் இது சகஜம் தான். ஆனால் தேவன் கொடுத்த குடும்ப வாழ்க்கையின் , இது ஒரு நிறைவென்று நாங்கள் தைரியமாக சொல்லுவோம்.

உங்களுக்கு  பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.( சங்கீதம் 128:2)   

வாழ்த்துகிறோம். தேவன் உங்களை இன்னும் விரிவு படுத்துவார். விசாலமாக்குவார். ஆசீர்வதிப்பார். ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாய் காத்துகொள்ளுவார். உங்கள் கணவருக்கும் எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள்.

அன்புடன்

உங்கள் அங்கிள்.


திரு. ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.