உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் கண்டவள்
திருமதி ஜேசுபாதம்
Family, Story of a Widow

மகதலேனா மரியாள்(மாற் 16:9)

இயேசுவை சிலுவையில் அறைந்த போது அவரைப் பெற்ற மரியாளுடன் நின்று அழுதுக் கொண்டிருந்தவள் இந்த மகதலேனா மரியாள். இயேசு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின் கல்லறைக்குச் சென்று சுந்தவர்க்கமிடும்படி அதிகாலை  இருட்டோடே பயப்படாமல் கல்லறைக்குச் சென்றவளும் இவளே, இயேசு உயிர்த்தெழுந்தபின் முதன்முதல் தரிசனமானதும் இவளுக்குத்தான். இயேசு இவளுக்குள் இருந்த ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார்.
 
பிசாசு பிடித்திருக்கும் போது தவறானபடி வாழ்ந்திருக்கலாம். அற்பமாய் எண்ணப்பட்டிருக்கலாம். உதாசீனப் படுத்தப்பட்டிருக்கலாம், சமுதாயத்தால் தள்ளப்பட்டிருக்கலாம். உறவினர்களால் ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கர்த்தர் அவளை வெறுக்கவும் இல்லை, ஒதுக்கவும் இல்லை. அவர் பாவிகளை நேசிக்கிறவர், அற்பமாய் எண்ணப்பட்டவர்களையும், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும் நேசிக்கிற தேவன். எந்தப் பாவியையும் (லூக் 19:7) புறம் தள்ளாதவர்.

ஆனால் இன்று நாம் எப்படி இருக்கிறோம். எல்லாரையும் உதாசீனம் பண்ணுகிறோமா?. ஜாதிப் பெருமை, குடும்பப் பெருமை, குலப்பெருமை, அந்தஸ்து பெருமை என எல்லாவற்றையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு மற்றவர்களை தாழ்வாகப் பார்க்கிறோமா?.  நாங்கள் பரிசுத்த மார்க்கத்தார், இவர்கள் எல்லாரும் பாவிகள் என்று ஒரு கூட்டம், புறமதத்தினரோடு நாங்கள் பேச மாட்டோம் என்று ஒரு கூட்டம். வேறு ஜாதிக்காரர்களுடன் பழகவே மாட்டோம் என்று ஒரு கூட்டம். இப்படி பல கூட்ட மக்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு மற்றவர்களுடன் கலவாமல் தனித்து வாழ்கின்றனர்.
 
சமாரியஸ்திரி விபச்சாரி எனத் தெரிந்தும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவள் என்று தெரிந்தும், சுவிசேஷம் சொல்வதற்காக அவளைத் தேடிப் போனார்.(யோ 4:8) நம் ஆண்டவர். அவரைப் பின்பற்றுகின்றவர்கள் என்று கூறிக் கொண்டு அவருடைய சுபாவத்திற்கு எதிரிடையாக இருக்கலாமா? அது உண்மையான பின்பற்றுதல் இல்லை. மாய்மாலம். புறஜாதிகளுக்கும் அவர்தான் தேவன்(ரோமர் 3:29) கிறிஸ்துவுக்குள் எல்லாரும் சகோதர சகோதரிகள்தான்.
 
அவர் யாரையும் ஒதுக்காதபோது நாம் எப்படி ஒதுக்கலாம். அவர் அவர்களை நேசிக்கும் போது நாம் எப்படி ஒதுக்கலாம். அவர்களை வெறுக்கும் போது ஆண்டவரின் படைப்பை வெறுக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. அவர்களும் தேவ இராஜ்ஜியத்திற்கு சுதந்திரர்கள்தான்.

பாவிகளை இரட்சிக்கத்தான் கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். (1தீமோ.1:15) எனவே பாவங்களைத்தான் வெறுக்க வேண்டுமேயொழிய பாவிகளை அல்ல. நாம் மேன்மையானவர்கள் என்ற மெத்தனத்தில் இருக்கும் போது நாம் கீழானவர்கள் என வெறுத்து ஒதுக்கியவர்கள் நமக்கு முன் பரலோகத்திற்கு சதந்திரவாளியாகிவிடுவர். சிறியரில் ஒருவரையும் அற்பமாய்(மத் 18:10) எண்ண வேண்டாம். பிந்தினோர் அநேகர் முந்தினோராயும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும் (மத். 19:30) இருப்பார்கள்.

முதல் முதலில் உயிர்த்தெழுந்த இயேசு அவளுக்குத்தான் தரிசனமானார். எவ்வளவு சந்தோஷம்! இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தவருக்கோ, அல்லது அவரைப் பெற்றவர்களுக்கோ முதலில் தரிசனமாகவில்லை. இவளுக்குத்தான் தரிசனமானார். (மாற்கு 16:9).  விடுதலையைப் பெற்றதும் கர்த்தர் மேல் முழுமையாக அன்பு கூர்ந்தாள். கர்த்தர் உயிர்த்தெழுந்ததைப் பிரஸ்ததாப்படுத்தினாள். மனம் திருந்தி வந்த பின் சிலர் அவர்களது பழைய வாழ்க்கையைச் சொல்லி ஏளனம் செய்வர். அன்று இப்படி இருந்தவள்தானே, இன்று பைபிள் எடுத்துக் கொண்டு உபதேசம் செய்கிறாள் என்பர். அப்படிப்பட்டவர்கள் தேவ கோபத்திற்கு ஆளாவார்கள்! எச்சரிக்கை! கிறிஸ்துவுக்குள் வந்ததும் பழைய வாழ்க்கை ஒழிந்து போய்விடுகிறதே! (ஏசா 38:17) அவரே அதை மறந்து விட்டபோது நாம் ஏளனம் செய்வது சரியா  மன்னிப்பதும், மறப்பதும் நம் குணமாக இல்லையென்றால் நாம் கிறிஸ்தவர்கள் அல்லவே! சிந்திப்போம். செயல்படுவோம்.

அலங்கத்தின் மதிலில் இருந்த ராகாப் வேசி, கர்த்தரை ஏற்றுக் கொண்ட பின் இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்க ஆரம்பித்தாள், மட்டுமல்ல அவள் மகனான போவாசின் சந்ததியில் தான் ஆண்டவராகிய இயேசு பிறந்தார். எனவே ஒருவரையும் அற்பமாய் எண்ண வேண்டாம்.

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்." (1 தீமோத்தேயு 1:15)
 


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.