"வைராக்கியம்..?!"
Be Strong

ஹைதராபாத் பட்டணத்தில் கால் சென்டரில் வேலை செய்கின்ற நான், இயேசு கிறிஸ்துவை அதிகம் நேசிக்கக் கற்றுக் கொண்டவன். கடவுள் காரியங்களில் எனக்கு வைராக்கியம் அதிகம் உண்டு. இந்த வைராக்கியத்திற்காக நான் பல நேரங்களில் தேவனுக்கு நன்றி செலுத்தியிருக்கிறேன்.
.
 
B.E. பட்டபடிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு மிஷனரி இயக்கத்தில் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. என் பெற்றோர் அனுமதியோடு சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அவ்வூழியத்திற்கு அதிக நேரம் கொடுத்து வந்தேன். நாங்கள் சுமார் 30 பேர் அக்குழுவில் உண்டு. நான் சிறுவர் பகுதிக்குப் பொறுப்பாய் இருந்தேன். அதிக மகிழ்ச்சியோடு அக்குழுவில் ஊழியங்களுக்குச் சென்று வருவேன். என் ஆவிக்குரிய வாழ்க்கையும் அனலாய் இருந்தது.
 
B.E. முடித்தவுடன்தான்  இந்த வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். ஆனால் இரவெல்லாம் விழித்திருக்க வேண்டும். வேலை கிடைப்பதற்கு முன்பதாக, என் மனதில் நினைத்தபடியே என் ஆலயத்திற்கு என் முதல் சம்பளத்தைப் பெற்றோர் அனுமதியோடு கொடுத்துவிட்டேன். நான் குழுவாக அதிகமாக உழைத்திடும் அந்த மிஷனரி இயக்கத்திற்கு இரண்டாவது மாத சம்பளத்தைத் தந்தேன். என் கிராமத்தில் உள்ள ஆலயத்திற்கு எனது மூன்றாவது சம்பளம். மூன்று சம்பளத்தையும் நான் அப்படியே கொடுத்து விட்டது என் பெற்றோருக்கு மகிழ்ச்சி எனக்கும் அதிக மன நிறைவு.
 
இரவெல்லாம் கண் விழித்து, பகலில் தூங்க வேண்டிய நான் சில வேளைகளில் என் போதகரோடும், குழுவாக உழைத்திடும் அந்த மிஷனரி இயக்கத்தின் அண்ணன்களோடும் கூடுதல் நேரம் கொடுத்தேன். பகலில் தூங்க வேண்டிய என் நேரம் கூட சில வேளைகளில் குறைந்துவிட்டது. பகலில் தூங்கி மாலை 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு வேலைக்குச் செல்வேன்.
 
ஒருநாள் என் போதகர் “ஜுலி, நீ இந்த ஆண்டின் விடுமுறை வேதாகமப் பள்ளியின் பொறுப்பை எடுத்து செய்தால் நன்றாக இருக்குமே!” என்று சொல்லி போய்விட்டார். எனக்கோ இஷ்டமில்லை… அதை எண்ணிப்பார்க்கக்கூடத் தைரியமில்லை. காரணம் இரவெல்லாம் கண்விழித்து, பகலில் தூங்க வேண்டிய நான் எப்படி மதியம் 1 மணி வரைக்கும் தூங்காமல் விடுமுறை வேதாகமப் பள்ளி நடத்துவது? முதலில் எனக்கு “முடியாது” என்று சொல்ல வாயில் வார்த்தை வந்தது. ஆனால் அமைதியாகச் சென்றுவிட்டேன்.
 
அன்று சனிக்கிழமை. இரவு நேரமெடுத்து ஜெபித்தபோது, தேவன் எனக்குத் தந்துள்ள சிறுபிள்ளைகள் ஊழிய தாலந்தை என் சபைக்கு எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாய்க் கண்டு கொண்டேன். திங்கட்கிழமை இரவு வேலை முடித்து செவ்வாய் காலை வீட்டிற்கு வந்தபோது என் அப்பா, அம்மாவிடம் “இதோ 5 நிமிடத்திற்குள் பாஸ்டரைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று சொல்லித் சென்றேன்.
  
எங்கள் பாஸ்டர் வீட்டில் இருந்தார். “சொல் ஜுலி” என்று அன்போடு கேட்டார். “ஐயா. நான் இந்த 10 நாடகளும் நமது சபையில் நடைபெறும் விடுமுறை வேதாகமப் பள்ளியில் உதவி செய்கிறேன்..." என்று சொன்னபோது, யாரோ என் முதுகில் தட்டிக்கொடுத்தது போல ஓர் உணர்வு ஏற்பட்டது.
 
விடுமுறை வேதாகமப் பள்ளிக்கான பயிற்சி முடிந்தது. முதல் நாள் விடுமுறை வேதாகமப் பள்ளி ஆரம்பித்தது. தேவன் எனக்குக் கொடுத்திருந்த அத்தனை கிருபைகளும் என் சபையில் பயன்படுத்தப்படுகிறதைக் கொண்டேன்.. சுமார் 200 பிள்ளைகள்.. இதில் 120 பிள்ளைகள் ஆலயத்திற்கே வராத, ஆண்டவரை அறியாத பிள்ளைகள். ஒவ்வொரு நாளும், தேவன் எங்கள் மத்தியில் ஆழமான கிரியைகளை நடப்பித்ததைக் கண்டோம். பிள்ளைகள் மகிழ்ச்சியோடு வசனங்களைக் கற்றுக் கொண்டார்கள். தேவன் என்னையும் என்னோடு உழைக்கிற ஆசிரியர்களையும் மிக அருமையாகப் பயன்படுத்தினார். பகலில் ஒரு மணி வரைக்கும் என் ஆலயத்தின் விடுமுறை வேதாகமப் பள்ளியில் உழைத்தேன். அதன் பின் சில மணி நேரம் மாத்திரம் தூங்கினேன். ஒவ்வொரு நாளும் தேவன் புதிய கிருபைகளையும், புதிய அனுபவங்களையும் தந்தார்.
 
ஒரு வாரம் முடிந்தவுடன்.. எனது கால் சென்டர் டீம் லீடர் என்னிடத்தில் “ஜுலி, கடந்த ஒரு வாரத்தில், 2 மாதத்தில் முடிக்க வேண்டிய டார்கெட்டை-ஐ இப்போதே ஆச்சரியமாக முடித்திருக்கிறாய். நல்வாழ்த்துக்கள். இது உன்னால் எப்படி ஆயிற்று?" என்றார்.  அவரிடம் சொல்ல எனக்குத் தைரியமில்லை.. விருப்பமுமில்லை. சிரித்துக்கொண்டே சென்று விட்டேன். சிறிது தூரம் சென்ற நான் "ஆண்டவரே இதை நீர் தான் செய்தீர். நான் 2 மாதத்தில் முடிக்க வேண்டிய பணியை நீர் எதிர்பார்த்த ஊழியத்தைச் செய்ததினால் ஒரே வாரத்தில் அந்த டார்கெட்டை-ஐ நீரே முடித்து விட்டீர்.  நன்றி. நன்றி." என்று வாய்விட்டே ஜெபித்தேன்.
 
அன்று என் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அடிக்கடி கண்ணீர் விட்டும் அழுதேன். பக்கத்தில் உள்ள என் நண்பர்கள் கண்டுவிடாதபடி உடனே துடைத்துவிடுவேன்.
 
"என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்" (1சாமு 2:30) என்ற வசனம் என் உள்ளத்தில் தொனித்துக் கொண்டே இருந்தது.
 
அன்பான வாலிப நண்பரே! சகோதரியே! நான் 2 மாதங்களில் கண்விழித்து, உழைத்து சாதிக்கக் கூடிய வேலையை தேவன் ஒரே வாரத்தில் எனக்காக செய்து முடித்துவிட்டார்.  இதை எண்ணும் போது என் உடம்பு இன்னும் புல்லரிக்கிறது.  நீங்களும் இந்த தேவனுக்காக ஏன் வைராக்கியம் பாராட்டக்ககூடாது?

-Er. Juliandoss, Hyderabad.