விழித்தெழுந்த வீராங்கனை
திருமதி ஜேசுபாதம்
Reaching out people

தெபொராள் (நியா 4:4, 5:1)
 
லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் இஸ்ரவேலிலே நியாயாதிபதியாக நியாயம் விசாரித்தாள். நியாயம் விசாரிப்பதோடு பாடல்களைப் பாடுகிறாள், இஸ்ரவேலிலே தாயாக எழும்புகிறாள், தைரியமுள்ளவளாக இருந்தாள். ஒரு பெண்ணிற்குள் எத்தனை தாலந்துகள்! கர்த்தரை அறிந்திருந்தால்தான் இத்தனை தாலந்துகள், தீர்க்கதரிசிகள் கர்த்தரின் அபிஷேகத்தைப் பெற்றவர்கள். கர்த்தரின் அபிஷேகத்தைப் பெற்றவர்களுக்குதான் தீர்க்கதரிசன வரத்தைக் கர்த்தர் கொடுப்பார்.
    
கர்த்தரில்லாமல் நாம் ஒரு காரியத்தையும் செய்ய முடியாது (யோ 15:5) அவர் தெபொராவிற்குள் இருந்ததாலேயே அவளுக்குள் இத்தனை வரங்கள். இஸ்ரவேலிலே அவள் தாயாக எழும்பும் வரை கிராமங்கள் பாழாய்ப் போயின் (நியா 5:7) தைரியமில்லாத கோழையான பாராக்கை உற்சாகப்படுத்தி, யாபீனின் சேனாதிபதியான சிசெராவை எதிர்த்து நிற்க அனுப்புவதுடன், தானும் செல்கிறாள்.
     
அவள் இதயம் உலகத்தையோ, ஆசை இச்சைகளையோ நாடாமல் தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக் கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை அவள் உள்ளம் நாடினது. (நியா 5:9) இன்று அநேகப் பெண்களின் உள்ளம் யாரை நாடுகிறது! வசதிகளையும், ஆடம்பரங்களையும், கண்ணின் காட்சிகளையும், இச்சைகளையுமல்லவா நாடுகிறது! கர்த்தரைத் தவிர வேறு எதை நோக்கினாலும் நிலையான சந்தோஷமும், சமாதானமும் கிடைக்காது. பிறர் மீதும், அவர்களின் வசதி, அந்தஸ்து, ஆடம்பரம் ஆகியவற்றில் மனம் போகிறதே தவிர கர்த்தர் மேல் போவதில்லை. மற்றவர்களைப் பார்க்கும் போது ஆவிக்குரிய வாழ்வில் விழுந்து விடுவோம். கர்த்தரை மட்டுமே பார்க்கவேண்டும்.

ஒரு பெண் நியாயாதிபதியாக எழும்பவது என்பது அதுவும் பழைய ஏற்பாட்டு காலத்தில் சாதாரணமான காரியமல்ல. அக்காலத்திலேயே ஒரு பெண் கர்த்தருக்காக, (தீர்க்கசரிசினி) கர்த்தரின் வாயாக இருந்திருக்கிறாள்.
   
அக்காலத்துப் பெண் கர்த்தருக்காக எழும்பிய போது இக்காலத்தில் அநேகப் பெண்கள் கர்த்தருக்காக எழும்பாததேன்? இன்றும் பெண் ஊழியக்காரிகள் என்றால் அநேகருக்கு அற்பம். சுவிசேஷகியே என்று சொல்லப்பட்டுள்ளது மட்டுமல்ல, பெண் ஊழியக்காரிகள் இயேசுவுடன் இருந்ததாகவும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது (மத். 27:55) யாரோ ஒரு பெண் ஊழியம் செய்தால் போதும், அதாவது ஊழியக்காரர் மனைவி (அ) மகள், போதகர்களின் மனைவி (அ) மகள் என தவறாக எண்ணுகின்றனர். இஸ்ரவேலர் யாவரும் என் ஊழியக்காரர் என்று கர்த்தர் சொல்லுகிறர். (லேவி 25:55)
     
காணியாட்சிக்குப் புறம்பே இருந்த நாம் அதாவது ஆண்டவரை அறியாமல் இருந்த நிலையை விட்டு பிரகாரத்திற்குள் விசுவாசியாக வந்தால் ஊழியம் செய்ய வேண்டும். கர்த்தருக்காக நாம் எழும்பாவிட்டால் எப்படி? கர்த்தருக்காக ஏதாவது ஒன்றை நாம் செய்தே ஆக வேண்டும். ஒரு கழுதை கூட கர்த்தரை தன் மீது சுமந்து உயர்த்தியது. சிலுவையின் அடியில் நிற்கவும், அதிகாலை இருட்டில கல்லறைக்குச் சென்று தூபவர்க்கமிடவும் அஞ்சாமல் கர்த்தருக்காக நின்ற பெண்கள் இன்று எங்கே?

கிறிஸ்தவள் என்பதில் பிரயோஜனமில்லை, பெருமையுமில்லை, கிறிஸ்துவை உடையவள் என்பதுதான் விசேஷம். கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக் கொள்ளவில்லை எனில் தெபொராளாக எழும்ப இயலாது. அவள் கர்த்தரைத் தரித்திருந்ததால் வல்லமையாக எழும்ப முடிந்தது. கிறிஸ்துவுக்குள் ஆண் என்றும் பெண் என்றுமில்லை. இனி காலம் செல்லாது. நாம் கர்த்தருக்காக எழும்பவில்லை எனில் பாளையத்திற்குப் புறம்பே உள்ளவர்கள் எழுந்து விடுவார்கள். (எஸ் 4:14)

நமக்காக உயிரையே கொடுத்த ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் வரவேண்டும். என்னை மீட்க வந்தார், என்னைத் தம்முடன் பரலோகில் சேர்க்க தன்னுயிர் கொடுத்தார் என்ற எண்ணம் வந்தால் தெபொராளாக நீங்களும் எழும்பலாம்.

“கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ் செய்யுங்கள்.” (எபேசியர் 6:8)


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.