ஜெபித்து ஜெயம் பெற்றவள்
திருமதி ஜேசுபாதம்
Reaching out people

அன்னாள் (சாமுவேலின் தாய்) (I சாமு 1:1-20)

சோப்பீம் எனப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவன் பெயர் எல்க்கானா. அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அன்னாள், பெனின்னாள். இதில் அன்னாளுக்கு மட்டும் பிள்ளைகள் இல்லை. ஏல்க்கானா அன்னாளை அதிகம் நேசித்தாள். ஆனால் பெனின்னாள் அவளை துக்கப்படுத்திக் கொண்டிருந்தாள். சீலோவிலே கர்த்தரைப் பணிந்து பலியிடப் போகும் போதெல்லாம் விசனமாக அன்னாளுக்கும் இருக்கும். காரணம், பலியிட்டபின் இரட்டிப்பான பங்கை அன்னாளுக்கு எல்க்கானா கொடுத்தாலும் பெனின்னாளின் கொடுமையும், பிள்ளையில்லா வேதனையும் அவளை வாட்டும்.
 
எனவே அன்னாள் சாப்பிடமால் அழுது கொண்டிருப்பாள். ஓவ்வொரு வருடமும் இந்த வேதனை தொடர்ந்தது. அதுவரை கணவனிடம் தன் துக்கத்தைக் கூறியவள் ஒருமுறை கர்த்தரிடம் தன் துக்கத்தைக் கூற ஆலயத்திற்குச் சென்றாள். அங்கு மனங்கசந்து அழுதாள். அருமையான ஜெபத்தை பொருத்தனையோடு செய்தாள். தன் சிறுமையை கண்ணோக்கிப் பார்த்து ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால் அவனை கர்த்தருக்கென்று கொடுப்பேன் என்றாள். அவள் புலம்புவதைக் கண்ட ஆசாரியனான ஏலி அவள் குடித்திருப்பதாக எண்ணி கண்;டிக்கிறான். ஆனால் கோபப்படாமல் பொறுமையாகத் தன் நிலையை எடுத்துச் சொல்லி ஏலியின் ஜெபத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுச் செல்கிறாள். அதன்பின் அவள் துக்கப்படவில்லை.
 
கர்த்தர் அந்த வருடத்திலேயே ஆண் பிள்ளையைக் கொடுத்தார். அதைத் தன் பொருத்தனையின்படி ஆலயத்தில் ஏலியிடம் கொண்டு வந்து விட்டாள். ஜெபித்தால், கர்த்தர் செய்வார் என்ற விசுவாசத்தோடு சென்றதால் கர்த்தர் அந்த விசுவாசத்தைக் கனம் பண்ணினார். விசுவாசித்த அவள் பாக்கியவதியல்லவா! (லூக் 1:45) மனிதன் பாரத்தை அவரிடம் இறக்கி வைத்தால் மட்டுமே விடுதலை. இன்று அநேகர் தங்கள் பிரச்சனைகளைப் பிறரிடம் சொல்கின்றனர். சிலர் கஷ்டங்கள், பிரச்சனைகள் வரும் போது தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சிலர் தவறான பழக்க வழக்கங்களை வடிகாலாக்கிக் கொள்கின்றனர். அந்தோ! தோல்வியைத் தழுவிக் கொள்கின்றனர்.
 
எல்லா பிரச்சனைகளுக்கும் விடுதலை உண்டு. எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபட ஒரே ஒரு வழிதான் உண்டு என்பதை மறந்து விடுகின்றனர். அந்தவழி, நானே வழியும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்ற இயேசு கிறிஸ்துவின் வழி (யோ 14:6) அவருடைய பாதத்தை அண்டி பற்றிக் கொள்ளும் போது மட்டுமே உலகக் கவலைகளிலிருந்து விடுதலை பெற முடியும்.
 
சிலர், நான் ஜெபித்து என்ன பிரயோஜனம் எவ்வளவோ ஜெபிக்கிறேன், எத்தனை நாட்களாக ஜெபிக்கிறேன் ஒன்றுமே நடக்கவில்லையே, இத்தனை நாட்கள் கர்த்தரைச் சேவித்து என்ன பயன் என்று எண்ணி பின்வாங்கி விடுகின்றனர். அவர் வெளியரங்கமான ஜெபித்தைப் பார்ப்பதில்லை உள்ளத்தில் எவ்வளவு ஆழத்திலிருந்து அவரைக் கூப்பிடுகிறோம், எவ்வளவு நேசிக்கிறோம் என்பதைத்தான் பார்க்கின்றார். முழுமையாய் அவரை சார்ந்திருக்காதவரை அற்புதம் செய்ய மாட்டார். ஆழமான விசுவாசம் தேவை, முழுமையான அர்ப்பணிப்பும் தேவை.
 
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின் படி கேட்டால் அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1யோ 5:14). எனவேதான் அவள் தன் வேதனைகளை கர்த்தரிடம் இறக்கி வைத்துவிட்டு தைரியத்தோடு வெளியே வந்தாள். பின் துக்கமுகமாக இருக்கவில்லை. கர்த்தர் அந்த விசுவாசத்தைக் கண்டு கிருபையளித்தார். விசுவாசித்தவளே பாக்கியவதி என்று வேதம் சொல்கின்றது. (லூக் 1:45)
 
சூழ்நிலைகளைப் பார்க்கக் கூடாது, சூழ்நிலைகள் ஒருநாளும் நமக்குச் சாதகமாக இருக்காது. நாம் பார்க்க வேண்டியது கர்த்தரை மட்டுமே. அவரைப் பார்க்கும்போது மட்டுமே வெட்கப்பட்டு போகாமலிருப்போம். இஸ்ரவேலிலே மலடும், கர்ப்பம் விழுகிறதும் இல்லை என்ற வார்த்தையில் நம்பிக்கை வைக்க வேண்டும். எப்படி அந்த நம்பிக்கை வரும் என்றால் அவரை கவனித்துப் பார்க்கும்போது மட்டுமே. (எபி 3:1) அவாந்தரவெளியிலே ஆறுகளை உண்டாக்குபவர் என்பதை (ஏசா 43:19) எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
 
ஏற்ற நேரத்தில் செய்வார் என்று விசுவாசிக்க வேண்டும். நம் விசுவாசத்தை பலப்படுத்த சில சமயம் காலம் தாழ்த்துவார், அதுவரை பொறுமையுடன் இருக்க வேண்டும்.
 
“நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்போழுது அறிந்துக் கொள்வாய்.” (ஏசாயா 49:23)

 


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.