லேயாள் (ஆதி 29: 17-31)
லாபனுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தனர். அதில் மூத்தவள் பெயர் லேயாள். அவள் அழகில் குறைந்தவளாய் இருந்தாள். அவள் கண்கள் கூச்சப்பார்வையாக இருந்தது. அவள் தங்கை ராகேல் அழகானவளாக இருந்ததால் யாக்கோபு அவளைத் திருமணம் செய்ய விரும்பினான். ஏழு வருடங்கள் தன்னிடம் வேலை செய்தால் அவளைத் தருவதாக லாபான் கூறினார். ஏழு வருடங்கள் ராகேலுக்காக வேலை செய்தான். திருமணத்தன்று லேயாளை யாக்கோபினிடத்தில் விட்டான் லாபான்.
அடுத்த நாள் அவள் ராகேலை, லேயாள் எனத் தெரிந்ததும் லாபானிடம் கோபப்படுகிறான். மூத்தவள் இருக்கும்போது தங்கையைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமில்லை, எனவே இன்னும் ஏழு வருடங்கள் வேலை செய்தால் ராகேலைத் தருவதாகக் கூறுகிறான். ராகேலுக்காக மேலும் ஏழு வருடங்கள் வேலை செய்து அவளை மணமுடிக்கிறான். ராகேலை அதிகமாக நேசித்ததால் அவளிடம் மிகவும் அன்பு கூறுகிறான், யாக்கோபு.
ராகேலை நேசித்தவனுக்கு லேயாள் கிடைத்ததால் ஒரு புறம் துக்கம், அழகில்லா லேயாளை மனைவியாகப் பெற்றது மறுபுறம் வெறுப்பு. எனவேதான் லேயாளை வெறுத்தான். அவளைத் திருமணம் செய்தபின்னும் அவன் ராகேலை விரும்புவதையும், திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அறிந்த லேயாள் மனம் எவ்வளவு துடித்திருக்கும்!
இன்று சில பெற்றோர்கள் ஞானமில்லாமல் இளையவர்களுக்குத் திருமணம் செய்து வருகின்றனர். மூத்த பிள்ளைகள் மனம் எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை யோசிப்பதில்லை. மூத்தவர்களுக்கு படிப்போ, அழகோ, அந்தஸ்தோ, சம்பாத்தியமோ ஏதாவது இல்லாமலிருக்கலாம், அல்லது குறைவாக இருக்கலாம். எப்படியானாலும் மூத்தவர்களுக்குதான் முதலிடம்.
மூத்தவர்களுக்குதான் முதலில் திருமணம் செய்யவேண்டும். பெற்றவர்களுக்கு அந்த எண்ணம் இருக்கவேண்டும். பிள்ளைகளின் மனநிலை பெற்றோருக்கே தெரியவில்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படித் தெரியும். இதில் முக்கியமாகத் தாய்தான் அந்த பொறுப்பை எடுக்கவேண்டும். ஆனால் லேயாளின் வாழ்க்கையில் யாக்கோபு அதைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் கர்த்தர் அவன் அங்கலாய்ப்பைக் கண்டார். எனவேதான் அவன் தகப்பன் ராகேலுக்கு பதிலாக லேயாளை விடும்படிச் செய்தார். தாய் மறந்தாலும் மறக்காதவர் நம் ஆண்டவர்!
அவள் கணவன் அவளுக்குரிய மதிப்பைக் கொடுக்கவில்லை. ஏழு வருடங்கள் கழித்து ராகேலைத் திருமணம் செய்துக் கொண்டு அவளை அதிகம் நேசித்தான். தன்;னை நேசிக்காத கணவன் கிடைத்தாலோ அல்லது லேயாளைப் போன்ற வாழக்கை அமைந்தாலோ அன்பு கிடைக்காத காரணத்தாலோ உயிரை மாய்த்துக் கொள்பவர் அநேகர், சிலர் விரக்தியடைகின்றனர், சிலர் பெற்றோரிடம் வந்து விடுகின்றனர். ஆனால் லேயாள் பொறுமையாகச் சகித்தாள்.
அவளுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தபோது கணவன் தன்னை நேசிப்பான், சேர்ந்திருப்பான் என்று அர்த்தமுள்ள பெயர்களை வைத்தாள். ஆனாலும் அவள் கணவன் அவளை நேசிக்கவில்லை. நான்காவது மகன் பிறந்தபோது கணவனைப் பார்க்கவில்லை கர்த்தரைப் பார்த்தாள். நான்காவது மகன் பிறந்தபோது நான் கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி யூதா என்று பெயரிட்டாள். கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தபின் அவள் வாழ்க்கையில் சந்தோஷம். ஆம்! அளவு கடந்த சந்தோஷம். இயேசு கிறிஸ்து அந்த யூத குலத்தில் பிறந்தார். கணவனையும் அவன் அன்பையும் எண்ணி அழுதுக் கொண்டிருந்தால் காலமெல்லாம் அழவேண்டியதுதான். ஆனால் கர்த்தரைப் பார்க்கும்போதுதான் உலகம் தர முடியாக சந்தோஷம் கிடைக்கும். பலரால் அற்பமாய் எண்ணப்பட்டால் கவலைப்படவேண்டாம். கர்த்தரைப் பற்றிக் கொண்டால் போதும் கனமடையலாம்.
மனிதன் தனக்குத் தேவையானால் தூக்கவும் தேவையில்லை என்றாலோ பொறாமை வந்தாலோ கீழே தள்ளி விடுவதும் இயற்கை. ஆனால் எளியவனை புழுதியிலிருந்து எடுத்து உயர்த்தி வைப்பவர் கர்த்தர் மட்டுமே. எனவே தள்ளப்பட்ட கல்லானால் பரவாயில்லை அதைக் கர்த்தர் மூலைக்கல்லாக்கி விடுவார்.
“அவரை (இயேசு) நோக்கிப் பார்த்துப் பிரகாச மடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப் படவில்லை.” (சங்கீதம் 34:5)