புத்தி
திருமதி ஜேசுபாதம்
Reaching out people

“அம்மா எக்ஸ்னோரா பணம்மா”

வாசலில் நின்றிருந்த கேசவனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு,

“ரசீது கொடுக்கறதே இல்ல, பணம் மட்டும் வாங்கிட்டு போற என்றேன்.
 
“வருஷத்துக்கு ரெண்டு ரசீதுதாம்மா, ஆறுமாசம் முடிஞ்சது கொடுப்பாங்க, நீங்க வந்து அஞ்சி மாசந்தான் ஆயிருக்கு” என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். வீட்டுக் குப்பைகளை அகற்ற எக்ஸ்னோரா என்ற அமைப்பில் குப்பைகளை அகற்றும் பணிக்காக இவனை வைத்திருந்தார்கள்.
 
சில நாட்களுக்குப்பின் எதிர்வீட்டில் இருக்கும் நாயர் வரச் சொல்லி ஆள் அனுப்பியிருந்தார், போனதும் “நீ இந்த வீட்டுக்கு வந்து அஞ்சி மாசமாயிருச்சி, எக்ஸ்னோராவுக்கு இதுவரைக்கும் பணம் குடுக்கல, கேசவன்கிட்ட சொன்னா, “அந்தம்மா அப்புறம் தர்ரேன்னு சொன்னாங்க”ன்னு ஒவ்வொரு தடவையும் சொல்றான், அதனாலதான் கூப்பிட்டேன்” என்றார். எனக்குத் தூக்கிவாரி போட்டது. கேசவனிடம் ஐந்து மாதமாக பணம் கொடுத்து ரசீது வாங்காமல் இருந்ததைச் சொன்னேன்.
 
“ஐயோ! உன்னை நல்லா ஏமாத்தியிருக்கான், வேலையை விட்டுட்டு அவன் போய் ஒரு வாரமாச்சேம்மா! பணம் கொடுத்ததும் உடனே ரசீது கொடுத்துடுவோம். எதிர் வீட்டிலதானம்மா இருக்கேன் கேட்டிருக்கக்கூடாதா” என்றார். நான் நன்றாக ஏமாந்து விட்டதை எண்ணி வருந்தினேன். ஐந்து மாதத்திற்கான பணத்தை அவரிடம் கொடுத்து ரசீது வாங்கினேன். வேதத்தில சாலமோன் ஞானி எழுதின ஒரு வாக்கியம் ஞாபகத்திற்கு வந்தது.

ஞானத்தை சம்பாதி, புத்தியை சம்பாதி….. (நீதி.4)


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.