கீழ்ப்படிந்து கீர்த்தி பெற்றவள்
திருமதி ஜேசுபாதம்
Reaching out people

எஸ்தர் (எஸ்தர் 2:5-20)

இந்தியா முதல் எத்தியோப்பியா வரையிலான 127 நாடுகளை அரசாண்ட அகாஸ்வேரு ராஜாவின் மனைவிதான் இந்த எஸ்தர். கீழ்ப்படியாமையால் முதல் மனைவியான வஸ்தியைத் தள்ளிவிட்டான்.
 
சீமோயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தேகாய் என்ற யூதன் இருந்தான். அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தரை வளர்த்தான். அவளுக்குப் பெற்றோர் இல்லை. அழகில் சிறந்தவளான அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக் கொண்டான். ராஜாவிற்கு மறுமணம் செய்ய நாட்டில் பெண் தேடும் போது மொர்தேகாயின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து சூசான் அரண்மனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப் படுகிறபோது எஸ்தர் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போகப்பட்டு யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள்.
 
தன் குலத்தை அறிவிக்க வேண்டாம் என்று மொர்தேகாய் கூறியிருந்ததால் யாரிடமும் அறிவிக்கவில்லை. அவள். மட்டுமல்ல ராஜாவினிடத்தில் பிரவேசிக்கும் முறை வந்தபோதும் பிரதானியான் யேகாய் நியமித்ததைத் தவிர வேறொன்றையும் கேட்கவில்லை. அந்த கீழ்ப்படிதலைக் கண்ட கர்த்தர் அவளைப் பட்டத்து ராணியாக்கினார்.
 
அநேகருக்கு இன்று கீழ்ப்படிதல் எந்த விஷயத்திலும் இல்லை. காரணம் கர்த்தருக்கு பயப்படும் பயம் இல்லாததுதான். கர்த்தருக்குக் கீழ்ப்படியாதவர்கள் பெற்றோருக்கும், பெரியவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏன் ஒருவருக்குமே கீழ்ப்படிய முடியாமலிருப்பர். பட்டத்து ராணியான பின்பும் மொர்தேகாயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தாள் எஸ்தர். சிறிது அந்தஸ்து உயர்ந்தாலே “நாங்கள் தான் இந்நாட்டின் மன்னர்கள்” எனக் கூறித் திரியும் ஜனங்கள் அதிகம் இந்த நாட்டில். இன்னும் சிறிது உயர்ந்த நிலை என்றால் கேட்கவே வேண்டாம். பெருமையும், ஆணவமும், அகப்பாவமும் தலைவிரித்தாடும். தாங்கள் எந்த நிலையிலிருந்து வந்தவர்கள் என்பதை உணருவதில்லை. கர்த்தர் உயர்த்தி வைத்திருக்கிறார் என்ற எண்ணமில்லாமல் தலைகனத்துடன் வாழ்கின்றனர்.
 
கீழ்ப்படிதல்தான் வெற்றியின் முதல்படி என்பதை அறியாமலிருக்கும் ஜனங்களைக் கர்த்தர் எப்படி உயர்த்துவார். நாம் உயரவேண்டுமானால் அவரது பலத்த கரத்திற்குள் அடங்கியிருக்க வேண்டும். (1 பேதுரு 5:6) இக்காலத்தில் கர்த்தரை அறிந்தவர்கள் கூட கீழ்ப்படியாமல் இருப்பது வேதனையே. இயேசு கிறிஸ்து எல்லாவற்றிலும் பிதாவிற்குப் கீழ்ப்படிந்தார். அதனால்தான் சிலுவை மரணத்தில் ஜெயம் பெற முடிந்தது. ஆபிரகாம் கீழ்ப்படிந்ததால் ஆசீர்வாதங்களைப் பெற்றான். கீழ்ப்படியாமல் ஆசீர்வாதத்தைப் பெற இயலாது. இன்று அநேகர் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்காததன் காரணம் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதுதான். வேதத்தை ஆழமாக தியானித்ததால் உயர்நதவர்களின் வாழ்க்கையில் உயர்விற்குப் பின்னால் இருந்தது அவர்களின் கீழ்ப்படிதலே.
 
பிள்ளைகள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், மனைவி கணவனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கீழ்ப்படியாமல் இருப்பார்களேயானால் அதற்குக் காரணம் அவர்களிடம் தெய்வ பயமில்லை என்பதுதான் உண்மை. கீழ்ப்படியாமைக்கு மற்றுமொரு காரணம் அவர்கள் சுயம். சுயம் முற்றிலும் அழியவில்லையென்றால் கர்த்தரின் சுபாவங்கள் வெளிப்பட முடியாது. அனாதையான எஸ்தர், ராணியாகி சரித்திரத்தில் இடம்பெற்று புகழ் பெற்றதன் காரணம் அவளது கீழ்ப்படிதல். ஆதாமின் கீழ்ப்படியாமையால் தான் பாவம் உண்டானது, மனிதகுல சமுதாயமே சாபத்திற்குள்ளானது.
 
அசுத்த ஆவிகள் பூர்வ காலத்தில் நோவா பேழையைச் செய்த போது கீழ்ப்படியாமல் போனவர்கள்தான் (I பேது 3:20) கீழ்ப்படியாமல் போனால் வாழ்க்கையில் அலைக்கழிக்கப்படுவது உறுதி. நோவா கீழ்ப்படிந்ததினாலேதனான் பேழையில் காக்கப்பட்டான். ஆபிரகாம் கீழ்ப்படிந்ததால் புதிய உறவு (கர்ததரின் சிநேகிதன் (யாக். 2:23) புதிய இருக்கை (ஆபிரகாம் மடி, லூக். 16:22) எல்லாமே கிடைத்தது. அதுவும் கல்வாரியின் பலனும் பெந்தேகொஸ்தே நலனும் இல்லாதபோதே கீழ்ப்படிந்தான்.
 
அண்ட சராசரங்களையும் படைத்த ஆண்டவர் எதைக் குறித்தும் தன்னை மேன்மை பாராட்டவில்லை. மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கும். லூக்கா 16:15

“கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவகோபாக்கினை வரும்.” (கொலோ 3:6)


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.