என் பெயர் ரோசி
Shalom Family Enrichment Ministries
Reaching out people

"என் பெயர் ரோசி.. என் தகப்பனார் ஓர் அரசாங்க உயர் அதிகாரி. எனக்கு ஓர் தம்பி.. அம்மா பட்டதாரி.. ஆனால், அம்மா வேலைக்கு போகாமல் எங்கள் வீட்டை நன்கு கவனித்து எங்களை ஆளாக்கி விட்டனர்.

பெங்களூர் பட்டணத்திலிருந்து சுமார் 40 கி.மீ. வெளியே எங்கள் கிராமம். இரயில் நிலையம் அருகில் என்பதால், எல்லாமே எங்களுக்கு பெங்களூரில் தான்...

எனது +1. +2 படிப்பு ஓர் பிரசித்து பெற்ற பள்ளியில்.. நான் தான் என் வகுப்பில் இரண்டாண்டுகளும் கிளாஸ் லீடர்.. என்னைச் சுற்றி எப்போதும் சக மாணவ, மாணவியர் தான்.. என்னுடைய ஆங்கில புலமையைக் கேட்கவும் அதிகம் விரும்புவர்.

பி.எஸ்.சி., பின் மேல்படிப்புகள்... அத்துடன் ஓர் பெரிய கம்பெனி பரிசோதனைக் கூடத்தில் வேலை... நல்ல சம்பளம்.. மேலும் பி.ஹெச்.டி. படிக்க வேண்டும் என்ற ஆசை. என் கம்பெனி எம்.டி.யும் என்னை உற்சாகப் படுத்தினார். கம்பெனியிலும் நல்ல பெயர்.. அப்போது என் சம்பளம் மாதம் ரூ.37,000/‍

என் பெற்றோர் அதிக அன்பானவர்கள்.. என் தம்பியும் எனக்கு நண்பன் மாதிரி. ஓர் நாள், "ரோசி, உனக்கு வயது 27.. திருமணம் செய்ய வேண்டாமா!. எங்கள் வீட்டிற்கு மாத்திரம் உன் தம்பியை போல ஓர் மருமகன் வரும் நாளை எதிர் நோக்குகிறோம்" என்று என் தகப்பனார் சொன்னார்...

நான் சிரித்துக் கொண்டே என் அறைக்குள் சென்று விட்டேன்.. என் தம்பியும், அம்மாவும் உடன் தானே "ரோசி ரெடி!" என் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர்...

உடன் தானே, என் தகப்பனார் பல நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் , ஊழியக்காரர்களுக்கும் போன் பண்ண ஆரம்பித்தார்.. என்னை நல்ல ஓர் போட்டோ கடைக்கு அழைத்து சென்று விதவிதமாய் போட்டோ எடுத்துக் கொண்டனர்.. ஒவ்வொரு நாள் இரவிலும் நாங்கள் ஜெபிக்க உட்காரும்போது, அன்று என்னவெல்லாம் வரன் கேட்டனர் என்று சொல்வார்கள்.. எனக்கே ஒரே குஷி.. அதன் பின் என் அம்மா, அப்பா, தம்பி உட்கார்ந்து பேசிக் கொள்வார்கள்.

இரண்டே வாரத்தில்.. எனக்கு ஓர் பையன் போட்டோவைக் காண்பித்தனர்... எம்.டெக்.. பெயர் ராஜேஷ்.. மூன்று பையன்களில் மூத்த பையன்.. பெங்களூரிலேயே ரூ.20,000/‍ சம்பளம்.. ஆலயத்தில் யூத் குருப் லீடர்.. அமைதியானவர்..

இத‌ற்கிடையில், என் தோழி, என் வ‌ய‌தில் உள்ளவ‌ள், ஒரு "திரும‌ண‌ ஆலோச‌னை" முகாமிற்கு த‌ன் பெற்றோர் த‌ன்னை அனுப்புவ‌தாக‌க் கூறி என்னையும் அழைத்தாள்.. என் பெற்றோரோ "அது அத்த‌னை தேவையில்லை" என்று சொல்லி ம‌றுத்துவிட்ட‌ன‌ர்...

ராஜேஷ் போட்டோ என்னை க‌வ‌ர்ந்த‌து.. "ச‌ரி" என்றேன்.. அடுத்த‌ ஞாயிறு எங்க‌ள் ஆல‌ய‌த்திற்கே வ‌ ந்து ராஜேஷின் பெற்றொர் என்னை க‌ண்டு சென்ற‌ன‌ர்.. பேசின‌ர்.. 3 பைய‌ன்க‌ளும் உட‌ன் இருந்த‌ன‌ர்... ராஜேஷ் அமைதியாக‌, லேசாக‌ புன்முறுவ‌ல் செய்தார்...

ராஜேஷ் வ‌ய‌து 29.. அவ‌ர் மாநிற‌ம்.. ஆனால் நானோ ந‌ல்ல‌ நிற‌ம்.. உய‌ர‌மும் என்னைவிட‌ சிறிது குறைவுதான்...

அன்று இர‌வு என் பெற்றோரிட‌ம் "ச‌ரி" என்றேன்.. 2 வார‌த்தில் நிச்ச‌ய‌தார்த்த‌ம் எளிய‌ முறையில் முடித்தோம்..நிச்ச‌ய‌தார்த்த‌ம் முடி ந்த‌வுட‌ன் என் அருகில் வ‌ந்து "என் ச‌ம்ப‌ள‌த்தை நானே வைத்துக் கொள்வேன் " என்றார். 

.. நானும் "சரி" என்றேன்.. அனக்கு இது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.. அவரின் ஆங்கில புலமை "சைபர்" எனக் கண்டேன்... "பரவாயில்லை" என்று எண்ணினேன்.. அடுத்த 4ஆவது மாதம் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. அவர்கள் வீட்டார் மொத்தம் 150 பேர் கூட வந்திருக்க மாட்டார்கள்.. மொத்தம் சுமார் 2500 பேர் வந்திருந்தனர்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருந்தோம்.. எங்களை கோவாவிற்கு என் பெற்றோர் ஒழுங்கு செய்து அனுப்பி வைத்தனர்.. அங்கு போனவுடன், கடற்கரை அருகில் .." நீ இங்கு நில். நான் வந்து விடுகிறேன்" என்று சொல்லி சென்றார்.. சுமார் 1 மணி நேரம் காணவேயில்லை.. போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து இருந்தார். நான் திகைத்து விட்டேன்.. பின்னர் அவர் கிடைத்தபோது என்னை வேறு ஒரு இடத்திற்கு அங்கிருந்து வரச்சொன்னார்.. நான் தொலைந்து விடுவேனோ என்று கூட பயந்து விட்டேன்.

"எங்கே போனீர்கள்?" என்பதற்கு பதிலே கூறாமல் மாறாக "இப்படி உன்னை விட்டு விட்டே சென்று விட்டால் நீ திகைத்து விடுவாய் அல்லவா?" என்று சொன்னது என்னை யோசிக்க வைத்தது...

ஊருக்கு திரும்பி வரும்போது "இனி உன் சம்பளத்தை என்னிடம் தர வேண்டும்.." என்றார். இதற்கு "சரி" என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை.. இப்போது என் சம்பளம் ரூ.42,000/ அவரது சம்பளம் ரூ29,000/‍ தான்.

வீட்டிற்கு வந்தபின்.. "உனக்கு வர வேண்டிய உன் வீட்டை என் பெயருக்கு உடனே எழுதித் தரச்சொல்.." என்றவர், அன்றிலிருந்து, என் அருகில் படுக்கவே இல்லை.. அடுத்த அறையில் போய் படுத்துக் கொண்டார்.. திருமணமாகி இன்னும் 3 மாதங்கள் கூட ஆகவில்லை.. எங்கள் வீடு.. ஓர் மயான கூடம் போல ஆகிவிட்டது.. பேச்சே கிடையாது.. மாலை 6 1/2 மணிக்கு வருபவர் இப்போது 10 மணிக்கு வந்து கதவைத் திறந்து, படுத்துக் கொள்கிறார்.. வீட்டில் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது.. "ஆறு மாதத்திற்குள் உன்னை விட்டுப் போய் விடுவேன்.." என்று ஒரு நாள் கூறினார்.. உடன் தானே என் பெற்றோரிடம் நடந்தவைகளைக் கூறினேன். இப்போது எங்களுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை...

தெரியாத்தனமாக இடையே ஓர் நாள் " நீங்கள் யூத் லீடர் தானே" என்றதற்கு "அது ஓர் பாவலா" என்று முடித்து விட்டார்.. 6 மாதம் முடிவதற்குள் என்ன செய்யப் போகிறோமோ.. எங்களுக்கு தெரியவில்லை! என் கதை வாழ வேண்டிய இன்னொரு பெண்ணிற்கு நடந்து விடக் கூடாதே..!

கலக்கத்துடனும், கண்ணீருடனும்...
ரோசி ராஜேஷ் எம்.எஸ்.சி ( பி.ஹெச்.டி), கர்நாடகா

 

( மேலே உள்ள பகுதியில்  பெயரும், ஊரும்,  நாடும் மாற்றப் பட்டுள்ளன)


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.