உதவி செய்வது யார்?
அன்பு ஒளி
Reaching out people

என் பெயர் மகிமை தாஸ். கர்நாடக பகுதியில் ஓர் காண்ட்ராக்டர். மனைவி ஒர் ஆசிரியை. இரண்டு பெண் குழந்தைகள். ஓர் சிறிய வீடு. சுமார் 60 கி.மீ. தள்ளியுள்ள என் சகோதரியின் வீட்டிற்கு ஓர் நாள் போனோம். என்னுடைய மூத்த மகளின் பிறந்த நாளுக்கென்று துணிமணிகளை எடுத்தோம். சந்தோஷமாய் என் வீட்டில் இரண்டு தினங்கள் இருந்து விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். ஜெபித்தோம். தூங்கச் சென்றோம்.
   
அதிகாலையில் என் மனைவி ஒர் விநோத சத்தம் கொடுத்தார்கள். ஓடிப்போய்ப் பார்த்தபோது அதிகாலை மணி சுமார் 4.00 இருக்கும். கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். “என்ன நடந்தது?” என்று பதைபதைத்து கேட்டேன். “கால் கீழே ஊன்ற முடியவில்லை என் காலைப் பாருங்கள்” என்றார்கள். “கால் வீங்கி இருக்கிறது” என்று மீண்டும் அழுதார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நேற்று வரை நல்ல சுகமாக, பெலமாக இருந்த என் மனைவி, சுமார் 5 மணி நேரத்திற்குள் கால் வீங்கி, நடக்க முடியாமல் இருந்த காட்சி எனது விசுவாசத்தை அசைத்தது.
   
முழங்காலிட்டு, என் தேவனை நோக்கி, ஜெபிக்க ஆரம்பித்தேன். “தேவனே நாங்கள் உம்முடையவர்கள். உம்முடைய இரத்தத்தினால் எங்களைக் கழுவும், சுகம் தாரும். புதிய பெலத்தை தாரும்” என்று ஜெபித்தோம்.
   
ஹார்லிக்ஸ் போட்டு என் மனைவிக்குக் கொடுத்தேன். எனக்கு தெரிந்த ஊழியம் செய்யும் ஒர் அம்மாவை காலையில் அழைத்தோம். அவர்கள், நாங்கள் அழைத்தவுடன் வந்தார்கள். முழங்காலிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அநேக காரியங்களை தேவன் எனக்கு உணர்த்தினார். “இந்த வியாதி இயற்கைக்கு மாறான வியாதி” என்று உணர்ந்தேன். சின்ன சின்ன காரியங்களை, நானும் என் மனைவியும் அறிக்கை செய்ய ஆரம்பித்தோம். என் மனைவியின் பக்கத்தில் முழங்காலிட்டு, ஜெபித்துக் கொண்டே இருந்தேன்.
    
காலையில் எழுந்து வேதத்தை வாசித்து தியானித்தேன்! தேவன் புதிய புதிய வாக்குத்தத்தங்களைத் தந்து என்னைத் தைரியப் படுத்தினார். விசுவாச நண்பர்களோடு சேர்ந்தும், ஜெபிக்கிற எங்கள் சபைக் கூட்டங்களில் கலந்தும் ஜெபித்தோம். இன்னும் வீக்கம் குறையவில்லை. கையும் வீங்க ஆரம்பித்தது. கை செயலிழந்தது. விசுவாசத்தை உறுதியாக பிடித்துக் கொண்டேன். என் மனைவிக்குச் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் குடிக்கவும் முடியவில்லை. தொண்டையில் புண். தேவன் என்னை இன்னும் தைரியப்படுத்தும்” என்று தேவனுடைய பாதத்தில் முழங்காலிட்டு அழுதேன். சத்தத்தை உயர்த்தி பாடல்களை பாடவும் ஆரம்பித்தேன்.
   
ஓரு நாள், மாடியில் தேவனைப் பாடித் துதித்து ஜெபித்துக் கொண்டிருந்தபோது கீழே இருந்த என் மனைவி சரீரத்தில் தேவன் கிரியை செய்கிறதை என் மனைவி கண்டார்கள். கால் வீக்கத்தில் ஓர் பென்சில் வைத்து அழுத்தினால் எப்படி பள்ளமாக இருக்குமோ அதேபோல் இருந்த வீக்கம் குறைய ஆரம்பித்தது. கால் ஊன்றி 5 நாட்கள் ஆனபோதிலும், நாங்கள் “உள்ளங்கை அளவு மேகத்தைக்” கண்டோம். ஆர்பரித்தோம். என் மனைவி “அல்லேலூயா”  என  காது கேட்க சொன்னார்கள். அப்போது என் உள்ளத்தில் இரண்டு வசனங்கள் ஞாபகத்தில் வந்தது.
  
“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடுகூட இருக்கிறீர் உமது கோலும் உமது தடியும் என்னைத்தேற்றும்.” (சங்கீதம் 23:4)

“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி 4:13).


இந்த வாக்குத்தத்தங்களை என்னையும் என் மனைவியையும் பெலப்படுத்திற்று. தொடர்ந்து ஜெபித்தோம். 37 ஆம் நாளில் இருக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள். 38 ஆம் நாளில் என் மனைவி ஓரே ஒரு அடி எடுத்து வைத்தார்கள். 39 ஆம் நாள், நான்கு அடி எடுத்து வைத்தார்கள். 45 ஆம் நாள், அடையாளம் காண முடிந்தது. “செத்துப்போய் விடுவாள்” என்று சொன்ன நண்பர்கள், உறவினர்கள் வாய் அடைத்துப் போய் நின்றதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

இந்த நெருக்கத்தில் கடந்து போனது ஏன்? ஏன் ஆண்டவர் இதை அனுமதித்தார் என்பது எங்களுக்குத் தெரியாது. இன்று எங்களைதத் தேடி பலர். ஆனால், வேலை செய்யும் என்னையும், ஆசிரியையாகிய என் மனைவியையும் ஜெபிக்க கேட்டு வருகிறார்கள். போன் மூலம் ஜெப உதவி கேட்கிறார்கள். இன்றைக்கு தேவன் எங்களைப் புதிய விதத்தில் பயன்படுத்தி வருகிறது எங்களுக்கு ஓர் பெருத்த ஆசீர்வாதம்.

அன்பு நண்பரே, நாங்கள் கடந்து சென்ற பாதையில், இன்று நீங்கள் கடந்து செல்கின்றீர்களோ? கைவிடப்பட்ட வியாதியோ? சாவைக் குறித்த பயமோ? உங்கள் வீட்டில் நெருக்கடியோ? கணவனும் மனைவியுமாக ஏன் முழங்காலிட்டு ஜெபிக்கக்கூடாது? ஏன் உபவாசித்து அழக்கூடாது. இந்த நாட்களுக்குப் பிறகு தேவன் உங்களை புதிய பாதையில் நடத்துவார்.

அன்று சுமார் 45 நாட்கள், நாங்கள் மரண இருளில் பள்ளத்தாக்கு வழியே கடந்து சென்றோம். இன்றைக்கு புதிய கிருபைகளைத் தேவன் தந்துள்ளார்.

சகலமும் நன்மைக்காகத்தான். உபத்திரவப்பட்டதினால் பலருக்கு பிரயோஜனமாயிருக்கிறோம். பயப்படாதேயுங்கள். தேவன் தங்களுக்கு விடுதலை தந்து தங்களை பலருக்கு பிரயோஜனப்படுத்துவார்.

“நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது. அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்கிறேன்” (சங்கீதம் 119 :71) “கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.”  (யோபு 42:12) 

திரு. மகிமைதாஸ்


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'