பேரக் குழந்தைகள் வாழ்க்கையில்
திருமதி ஞானம் ராஜாசிங்
Reaching out people

கேள்வி- பதில்

கேள்வி

எனக்கு 60 வயது ஆகிறது. 4 பேரக் குழந்தைகள். அவர்கள் என் வீட்டிற்கு வரும்போதும், நான் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது நான் தான் பார்த்துக் (baby-sit ) கொள்கிறேன். நான் அவர்களை பார்த்துக் கொள்வதற்கு மேலாக, அவர்கள் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஏதாவது செய்ய விரும்புகிறேன்.அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

-கிருபை ராணி, கரட்டுப் பள்ளம், கோயம்புத்தூர்.

பதில்

அன்பு சகோதரி

1. தேவன் இப்படியொரு எண்ணத்தை கொடுத்ததற்காக நன்றி செலுத்துங்கள். உண்மையாகவே நேரத்திற்கு நேரம் சாப்பாடு கொடுப்பதும் கவனிப்பதும் மாத்திரம் நம்  கடமை அல்ல.

 2.  "அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்." என்று பவுல் 2 திமோத்தேயு1:5ல் சொல்லுவது போல,  நம் வாழ்க்கையை நம் விசுவாசத்தை அடிக்கடி அவர்களுக்கு கூற மறந்து விடக்கூடாது.

3. நம் வாழ்க்கையில் தேவன் செயல்பட்டதை அவ்வப்போது எளிமையாக கூறுங்கள்.

4. அன்றாட வாழ்க்கையில் தேவனை நாம் பிரதிபலிக்க மறந்து விடக்கூடாது.

5. அவர்கள் நம்மிடம் எரிச்சல் அடையும் போது நாம் சாந்தமாக பதில் அளிப்பது, பிள்ளைகளிடம் வீணாக கோபப்படாமல், முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளாமல், சகஜமாக பழகுவது போன்ற சிறு சிறு காரியங்களும் பிள்ளைகள் மனதில் பாதிப்பை ஏற்படச் செய்யும்.

6. கொஞ்ச காலம்தான் நம்முடன் நெருங்கி பழகுவார்கள். அதன் பிறகு நம்மை விட்டு விலக ஆரம்பித்து விடுவார்கள். எனவே ஒவ்வோடு வாய்ப்பையும் நாம் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும்.

7. அவர்களை அடிக்கடி பாராட்டுங்கள்.

8. அவர்க்கள் பெற்றோர் வந்தவுடன் அவர்கள் செய்த குறும்புகளையோ, தொந்தரவுகளையோ சொல்லாமல், பிள்ளைகள் காது கேட்க அவர்களை பாராட்டுங்கள்.

9. அவர்களிடம் உள்ள விசேஷ திறமைகளை கண்டு உற்சாகப் படுத்துங்கள்.

10. ஒவ்வொரு பிள்ளையும் எவ்வளவு வித்தியாசம் என்பதை விளக்குங்கள்.

11. அதிக செல்லம் கொடுக்காமல், அதே நேரத்தில் அன்பு செலுத்துங்கள்.

12. நீங்கள் அவர்களுக்கு ஒரு ரோல் மாடல் ( முன் மாதிரி) என்பதை மறந்து விடக்கூடாது.

13. ஒவ்வோரு நாளும் அவர்களுடைய சுகத்திற்காக, படிப்பிற்காக மட்டும் அல்லாது தேவ சித்தம் நிறைவேற ஜெபியுங்கள். அவர்களை குறித்த தேவதரிசனம் நிறைவேற நம்மையும் தேவன் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

சங்கீதம் 103:17- கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் நாடும் மாற்றப் பட்டுள்ளன)


திருமதி ஞானம் ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.