எது செல்வம்
சகோ. சாம்சன் பால்
Reaching out people

திருப்தி செய்யாத பொருளுக்காக  உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்... ஏசாயா-55:2  

கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் இருவர் பல வருடங்களுக்கு பின்பு சந்திக்க நேர்ந்தது. ஒருவர் பெரிய தொழிலதிபராயிருந்தார். இன்னொருவர் எளிமையாக ஊழியம் செய்யும் தேவ ஊழியராக மாறியிருந்தார். தொழிலதிபர் ஊழியரிடம் எப்படியிருக்கிறாய் என்று கேட்டார். மிக நன்றாக இருப்பதாகக் கூறியதோடு தான் தேவ ஊழியராக இருப்பதையும் கூறினார். உடனேயே தொழிலதிபர் உனக்கு சொந்த வீடு இருக்கிறதா? நல்ல கார் இருக்கிறதா? வங்கியில் நல்ல சேமிப்பு இருக்கிறதா? வசதியான நண்பர்கள் இருக்கிறார்களா? சொத்து ஏதாவது வாங்கியிருக்கிறாயா? என்று பல கேள்விகளைக் கேட்டார்.
 
தேவ ஊழியர் இவைகள் எதுவும் இல்லை என்றார். பின்னர் நன்றாயிருக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் என்றார் தொழிலதிபர். அதற்கு தேவ ஊழியர், எனக்கு இவைகள் இல்லை. ஆனால் சமாதானம், திருப்தி, நம்பிக்கை, நிறைவு, சந்தோஷம், தைரியம் ஆகியவை இருக்கிறது. பயம், கவலை, அதிருப்தி, பதட்டம், பொறாமை ஆகியவைகள் இல்லை என்றார். அதற்கு அந்தத் தொழிலதிபர் உன்னிடம் இல்லாதவைகள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன. ஆனால் உன்னிடம் இருக்கிறவைகள் தான் என்னிடம் இல்லை என்றார்.
 
சாலொமோன் ராஜாவிடம் அநேகரிடம் இல்லாத பல செழிப்பான விஷயங்கள் இருந்தன. அவன் எதற்கும் குறைவில்லலாத மனிதன். ஆனால் திருப்தி, நிறைவு, மனரம்மியம், சந்தோஷம், ஆகியவைகள்தான் இல்லை. அப்படியானால் எல்லாம் இருந்தும் என்ன பயன்? மனிதனுடைய இருதயத்திற்கு அமைதி, நம்பிக்கை, நிறைவு. திருப்தி, தைரியம் ஆகியமைகள் தேவை. அவைகளால் தான் மனிதன் மகிழ முடியும். இவைகளை எதனால் பெற இயலுமோ அதுதான் உண்மையான செல்வம். தேவனோடு ஏற்படுத்திக் கொள்கின்ற உறவும், அனுதின தேவ ஜக்கியமும்தான் இவைகளைத் தரமுடியும். எனவே இதுதான் உண்மையான செல்வம். இதனைப் பிறருடைய கண்கள் காண இயலாது. ஆனால் இந்த செல்வத்தையுடையவர்கள் வாழ்க்கையில் அந்த செல்வத்தினால் வருகின்ற நிறைவையும் திருப்தியையும் பார்க்க முடியும்.
 
பலரிடம் பணமோ, பொருளோ, வசதிகளோ இல்லாமல் இல்லை. ஆனால் அமைதியை அவர்கள் காணவில்லை. நிம்மதியை அவர்கள் உணரவில்லை. நிறைவினை அவர்கள் எட்டவில்லை. சந்தோஷத்தை அவர்கள் அடையவில்லை. எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை ஏற்படவில்லை.
 
பலர் தேவபக்தர்களாக இருந்தும், தேவ ஊழியர்களாகயிருந்தும் பணம், பொருள், அந்தஸ்து, உயர்வு என்று அங்கலாய்த்து நிறைவடையாத ஒரு மனநிலையோடே வாழ்கின்றனர். ஏனென்றால் அவர்களிடம் தேவ பக்தியிருந்தும் உண்மையான தேவ உறவு இல்லை. உண்மையான தேவ உறவைக் கண்டவர்களுக்கு என்றுமே வாழ்வு திருப்தியானதுதான.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.