தோல்வியில் வெற்றி
சகோ. சாம்சன் பால்
Reaching out people

முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே... ரோமர்-8:37

சில நேரங்களில் நாம் மற்றவர்களின் முன்னால் தோல்வியடைந்ததுபோலத் தோன்றலாம். சிலருடைய பார்வையில் நாம் மிகவும் தாழ்த்தப்பட்டுவிட்டதைப் போல காணப்படலாம். மற்றவர்களின் முன்னால் நாம் மிகவும் பரிதவிக்கத்தக்க நிலையில் இருக்கிறோமே என்று நாம் சஞ்சலப்பட நேரிடலாம். ஆனால் தேவனைச் சார்ந்து விசுவாசத்துடன் வாழ்கின்றவர்களை இவ்விதமான தாழ்மை நிலைகள் வழியாக நடத்தித்தான் அவர்களின் முன்பாக உயர்த்துகிறார் என்பதே உண்மை. எனவே இன்றைய தாழ்வுகளை எண்ணி வருந்தாமல், கர்த்தரால் வரப்போகும் உயர்வுகளை எண்ணி உற்சாகமடைவோம்.

யோசேப்பு எழுந்து நின்றவேளையில், திடீரென்று சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டான். அது ஒரு தோல்விதான். உயர்ந்த பதவியில் இருந்த தானியேல் பகைவர்களை எதிர்த்தபடியே சிங்கக் கெபிக்குள் தள்ளப்பட்டான். அது ஒரு வீழ்ச்சிதான். எல்லோரும் தாவீதின் புகழைப் பாடிக் கொண்டிருந்த வேளையில் சவுலின் பொல்லாப்புகளால் அவன் காட்டிற்குள் ஓடி ஒளிய நேர்ந்தது. அது ஒரு தோல்வியின் நிலைதான்.

ஆனால் அனேகரின் பார்வையில் தோல்வியாக, வீழ்ச்சியாக, பலவீனமாகக் காட்சியளித்த அந்த சூழ்நிலைதான் அவர்கள் வீரம் நிறைந்தவர்கள் என்பதையும் எழுச்சி நிறைந்த வெற்றியாளர்கள் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தி நிரூபித்தன. சிலுவை மரணம் இயேசுவுக்கு நேர்ந்த பெரிய தோல்வியாக யுதர்களுக்குத் தோன்றியிருக்கும். ஆனால் அந்த தோல்விக்களம்தான் அவருடைய வெற்றியை எல்லோருக்கும் விளம்பரப்படுத்தியது.

தேவனுடைய பிள்ளைகள் சந்திக்க நேரிடுகின்ற வீழ்ச்சிகள், சிக்கல்கள், சோதனைகள், தடைகள் போன்றவை அவர்களின் தோல்வியை அல்ல. அவர்களின் ஆவிக்குரிய வெற்றியை விளக்கவே காரணமாகின்றன. பலவீனமான சூழ்நிலைதான் அவர்களிடம் உள்ள தேவபலத்தின் மாட்சியைப் பிறர் காணும்படி செய்கின்றது.

ஆம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் எழுச்சிகளையும், ஏற்றங்களையும் ஏற்படுத்தும் முன்பு, வீழ்ச்சிகளையும், தோல்விகளையும் கடந்துவர அனுமதிக்கின்றார். அவைகள் வரப்போகும் எழுச்சிகளும், வெற்றிகளுக்கும் சுவை சேர்க்கின்றன. அவைகள் விசேஷமாக வந்தவை என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ள அதனால் வழி ஏற்படுகிறது. தானியேல் சிங்கக் கெபியில் விழ நேர்ந்தது தோல்வியைப் போலத் தோன்றினாலும், அதுதான் அவன் எவ்வளவு வெற்றி மிகுந்தவன் என்பதும் எல்லோருக்கும் தெரிவதற்கு காரணமாகியது. ஆம். உலகத்தின் பார்வையி;ல் தோல்விகளாகத் தோன்றுகின்ற சில காரியங்களின் வழியாகத்தான் தேவன் தம்முடையவர்களின் வெற்றியை விளக்குகிறார்.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.