தாலந்தா, நற்குணமா?
சகோ. சாம்சன் பால்
Reaching out people

பொறுமையோடே தேவபக்தியையும்.... II பேதுரு-1:7

அஜித் நன்றாகப் பாடுவான். அருமையாக கீ போர்டு வாசிப்பான். கொரியோ கிராபி மிகச்சிறப்பாகச் செய்வான். மிகத் தத்ரூபமாக நடித்துக் காட்டுவான். ஆனால் St. பீட்டர் ஆலயத்தில் கடந்த ஆண்டு நடந்த விசேஷ கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகளில் அஜித்துக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. அவன் வேண்டுமென்றே பின்னுக்குத் தள்ளப்பட்டான். ஆனால், அஜித் அதற்கு எந்த எதிர்ப்பையும் காண்பிக்கவில்லை. இதைக்கண்ட சபையின் மூத்த உறுப்பினர் ஒருவர் “வேண்டுமென்றே உன் திறமைகளை அவர்கள் இருட்டடிப்புச் செய்வதை நீ ஏன் ஆட்சேபிக்கவில்லை?” என்று கேட்டார். அதற்கு அஜித் “இதுவரை என்னுடைய தாலந்துகளைக் காண்பிக்க அவர்கள் வாய்ப்புத் தந்தனர். ஆனால் இந்த வருடம் கர்த்தர் என் பொறுமையைக் காண்பிக்க வாய்ப்புத் தந்துள்ளார்” என்றான் தாழ்மையுணர்வுடன்.

ஆம், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம்முடைய தாலந்துகளை வெளிப்படுத்துவதை முக்கியமான நோக்கமாக்க கொண்டதல்ல. வாலிப வயதுகளில் எல்லாருக்கும் முன்பாக நம்முடைய தாலத்துகள் வெளிப்படுவது ஒரு சந்தோஷமான விஷயம். ஆனால் நம்முடைய தாழ்மை, பொறுமை, அன்பு. அடக்கம், சகிப்புத் தன்மைகள் ஆகியவைகள் வெளிப்படுவதே தேவனுக்கு அதிகப் பிரியம்.

கோலியாத்தை வெல்ல முடிந்த தாவீது சவுலை எளிதாக வீழ்த்தியிருக்க முடியும். ஆனால் அங்கே அவன் பலத்தை வெளிப்படுத்தாமல் எதையும் ஏற்றுக்கொண்டு கர்த்தருக்காக சகித்துக் கொள்கின்ற ஒரு நல்ல பண்பையே வெளிப்படுத்தினான். தாலந்துகள் பிறரை பிரமிக்க வைக்கும். நற்குணங்கள் பிறருக்குப் பிரயோஜனப்படும்.

தாழ்மையை தேவனுக்கு முன்பாக மட்டும் அல்ல, மனிதனுக்கு முன்பாகவும் காண்பி.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.