பையன் பொய் பேச ஆரம்பித்திருக்கிறான்
திருமதி ஞானம் ராஜாசிங்
Reaching out people

கேள்வி-பதில் பகுதி

கேள்வி

என்னுடைய 7 வயது பையன், இப்பொழுதெல்லாம் நிறைய பொய்பேச ஆரம்பித்திருக்கிறான். என்னுடன் உண்மையை பேச நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்,

நந்தினி, அன்பரசக்கோட்டை

பதில்

அன்பு மகள் நந்தினிக்கு வாழ்த்துக்கள்.தங்கள் வயதில் மகள், மருமகள் எனக்கு உண்டு.எனவே தங்களை மகள் என்று அழைப்பதில் மகிழ்ச்சி.  உங்கள் மனம் விட்டு, உங்கள் பிள்ளையின் குணாதிசயத்தை வெளிப்படையாக சொன்னதற்கு, எங்களது பாராட்டுக்கள்.

1. உண்மை பேசும்போது பாராமுகமாக விடாமல் அவனைப் பாராட்டுங்கள்.அப்பொழுது உண்மைக்கும், பொய்யுக்கும் உள்ள வித்தியாசத்தை அவனே தெரிந்து கொள்வான்.

2. பெற்றோராகிய நாம் உண்மையையே பேச வேண்டும். அதாவது சாப்பட்டு நேரத்தில் பிஸ்கட் கேட்டால், " ஐயோ, தீர்ந்து விட்டதே, நாளைக்கு வாங்கலாம் " என்று பொய் சொல்லாதீர்கள்.

3. கணவன் மனைவிக்கும் இடையே சிறுசிறு காரியங்களில் கூட பொய் சொல்லாதீர்கள். சமையல் நடக்கும் போது, "சாப்பாடு ரெடியா?" என்று கேட்டால், கணவரிடம் "ரெடி" என்று சொல்லதீர்கள்.சிறு காரியங்களில் கூட நாமும் அவர்களைப் போல் பொய் பேசலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி விடும்.

4. எதற்காக பொய் பேசுகின்றார்கள் என்பதை கவனியுங்கள். சில சமயங்களில் மனதில் உள்ள பயத்தினால் கூட சொல்வார்கள். நம்முடைய பனிஷ்மென்டுக்கு (Punishment) பயந்து கூட அப்படி சொல்வார்கள்.

உதாரணமாக பெட்ரூமில் கிரயான் (Cryon) வைத்து கிறுக்கியிருந்தால், " நீ தானே இப்படி செய்தாய்" என்று திட்டாமல், "இந்த சுவர் இப்படி அழுக்காகி விட்டதே!. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து இதை சுத்தம் செய்யலாம்" என்று சொல்லி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நிதானமாக அவனிடம் பேசுங்கள். நம்முடைய பனிஷ்மென்டையும் ஆலோசித்து திருத்தி கொள்வது நல்லது.

5. சில சமயங்களில் பொறுப்புகளை தட்டிக் கழிக்க பொய் சொல்வார்கள்.டாய்ஸை(Toys) எடுத்து அதன் அதனிடத்தில் வை என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் கழித்து, "முடித்து விட்டாயா?" என்று கேட்டால், செய்யாமலேயே " ஆமாம்" என்று சொல்வார்கள்.அப்படிப்பட்ட வேளையில், நாம் அவர்களிடத்தில் போய் நின்று கையும் களவுமாக பிடுத்து விட்ட சந்தோஷத்தில் திட்டாமல், நம்முடைய உணர்ச்சிகளை நிதானமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

"உனக்கு டாய்ஸை எடுத்து வைக்க விருப்பமில்லை. அதே வேளையில் அம்மாவிற்கு ஏமாற்றத்தை கொடுக்கவும் உனக்கு விருப்பமில்லை. அம்மா கேட்டவுடன் ஆமாம் என்று சொல்லிவிட்டாய். இப்பொழுது நீ எடுத்து வைக்க போகின்றாய். அம்மா இங்கேயே நின்று பார்க்க போகின்றேன்" என்று பக்குவமாக சொல்லலாம்.

6. அவன் சொன்ன பொய்யை அவனிடம் அடிக்கடி சுட்டிக்காட்டி குறை கூறுவது (Nagging) கூடாது

7. எந்த காரணத்தைக் கொண்டும், அவனுக்கு "பொய்யன்" என்ற பட்டத்தை கொடுத்து விடாதீர்கள்.இது அவன் மனதில் பதிந்து விட்டால் தாரளமாக பொய் பேசுவான்.

8. உண்மையின் நன்மைகளை குறித்து கதைகளை கூறுங்கள். வேத வசனங்களை சொல்லுங்கள். உண்மை என்பது எவ்வளவு முக்கியமானது என்று சில சில வரிகளில் அவ்வப்பொது எடுத்து கூறுவது நல்லது.

9. பொய் பேசுகிறான் என்பதற்காக நாம் எந்த காரணத்தைக் கொண்டும் அவனை வெறுக்க கூடாது. பெற்றோராகிய நாம் நிபந்தனையற்ற அன்பை (Agape Love) செலுத்த வேண்டும்.

10. எல்லாவற்றிற்கும் மேலாக ஜெபியுங்கள்.தேவன் அவனை விடுவிப்பார்.


அன்புடன்

Aunty திருமதி ஞானம் ராஜாசிங்

( மேலே உள்ள கேள்வி பதிலி பகுதியில், பெயரும் நாடும் மாற்றப் பட்டுள்ளன)


திருமதி ஞானம் ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.