உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; - நீதி 24:17
சகோ. சாம்சன் பால்
Reaching out people

அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் ஒருவர் தனக்கு பல தொல்லைகளைத் தருவதாக நீண்ட நாட்களாக புலம்பி கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து பிரதர் ஒரு நல்ல செய்தி, எனக்குத் தொல்லை தந்து கொண்டிருந்த அந்த நபர் தண்டணை காலமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்று கூறி மிகவும் குதூகலித்தார்.

அநீதியாக, அக்கிரமமாக செயல்படுகின்றவர்களுக்கு ஏற்படுகின்ற தீங்கான காரியங்களை நாம் கவனிக்க வேண்டும். அதன் மூலம் தவறான செயல்கள் தண்டனைகளைக் கொண்டுவரும் என்ற விழிப்புணர்வைப் பெற வேண்டும். அதே வேளையில் நமக்குத் தீங்கு செய்தவர்களும், நமக்கு எதிராளியாகச் செயல்படுகிறவர்களும் அடைய நேருகின்ற துன்பங்களைக் கண்டு நாம் மனம் மகிழுகின்ற நிலைக்குப் போய்விடக்கூடாது. மற்றவர்களுக்கு நிகழுகின்ற வேதனைகளைக் கண்டு நாம் ஆனந்தமடைவது, அவர்கள் மேல் நாம் கொண்டிருந்த வெறுப்பின் அளவையும், அவர்களின் வீழ்ச்சிகளின் மேல் நமக்கிருந்த தணியாத ஆசையையுமே வெளிப்படுத்தும். அதனை தேவன் வெறுக்கின்றார்.

ஆபிரகாமுக்கு மனமடிவுண்டாகும்படி செயல்பட்டு, சுயலாபக் கண்ணோட்டத்தோடு பிரிந்து சென்ற லோத்துவிற்கு ஒரு துன்பம் நேரிட்டபோது ஆபிரகாமின் உள்ளம் குதூகலம் அடையவில்லை. கர்த்தர் சரியான பாடம் புகட்டினார் என்று நினைக்கவில்லை. அதற்கு பதிலாக அவன் மனதுருக்கத்தோடும், அவனை மீட்க வேண்டும் என்ற ஆசையோடும் சென்று அவனுடைய துன்பத்தில் உதவி செய்தான்.

தாவீதிற்கு சவுல்ராஜா பலவித இன்னல்களைக் கொடுத்தான். சவுலினால் தாவீது அடைந்த உபத்திரவங்கள் கொஞ்சமல்ல. ஒரு நாள் சவுல் வீழ்ச்சி அடைந்து மரித்தான். அதற்கு முக்கியமான ஒரு காரணம் நீதிமானாகிய தாவீதுக்கு விரோதமான சவுலின் துன்மார்க்கச் செயல்களே. ஆயினும் சவுல் வீழ்ந்த செய்தி கேட்டு தாவீது  துக்கமடைந்தானேயன்றி, குதூகமடையவில்லை. சவுலின் மரணம் அவனை சஞ்சலபடுத்தியது. அவன் சவுலுக்காக துக்கப்பட்டு பாடினான். அந்த மனநிலை தேவனை பிரியப்படுத்தியது. தாவீதை உயர்நிலைக்கு தேவன் கொண்டுவந்தார்.

தமக்கு எதிராக செயல்பட்டு தம்மைத் துன்புறுத்திய யூதர்கள் மேல் விரைவில் வரவிருக்கின்ற மாபெரும் உபத்திரவங்களை இயேசு முன்னதாகவே கண்டார். ஆனாலும் அதைப் பார்த்து மகிழ்ந்து சிரிக்காமல், அவர்கள் மேல் வரவிருக்கின்ற கொடிய காரியங்களை நினைத்து மனதுருகி, கண்ணீர் விட்டு அழுதார் ( லூக்கா - 19:41). நமக்குத் தீங்கிழைத்தவர்களுக்கும் நன்மையை எதிர்பார்ப்பதுதான் கிறிஸ்தவம்.

 


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.