கேள்வி-பதில் பகுதி
கேள்வி
கிராமத்தில் பிறந்து படித்து வளர்ந்த நான், தற்போது கணவர், மூன்று குழந்தைகளுடன் கோயம்புத்தூரில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். கூப்பிடு தொலைவில் சில குடும்பங்கள் இருந்தாலும் வீட்டின் தனிமையே என் சந்தோஷத்துக்கு எதிரியாக இருக்கிறது. காரணமே இல்லாமல் பொறுமையின் சிகரமான என் கணவரையே திட்டி தீர்த்து விடுகிறேன். வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள ஆட்கள் இல்லாமல், மனதிற்குள்ளேயே தினம் தினம் புழுங்கிக் கொண்டிருக்கின்றேன்.
-ஹெலன் தமிழ்ராணி
பதில்
ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்திருக்கின்றார். அதற்காக ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றோம். ஆண்டவர் உங்களோடு இருக்கின்றார் என்பதை மறந்து விடாதீர்கள் (மத்தேயு 28:20). அவருக்கு இம்மானுவேல் என்றொரு பெயரும் உண்டு. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
தனிமை என்பது ஒரு மனநிலை (attitude). அதை சூழ்நிலைகளுக்கு (circumstances) சம்பத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. நீங்கள் தனியாக இருக்கின்ற வேளைகளில் பல காரியங்களில் ஈடுபடாலாம்.
1) நீங்கள் படிப்பதற்கு அல்லது புதிய திறமையை வளர்ப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக கம்ப்யூட்டர் மற்றும் தையற்கலையில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.
2) மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் வீட்டில் ஜெப கூடுகையையோ அல்லது வேதாகம படிப்பு கூடுகையையோ நீங்கள் ஆரம்ப்பிக்கலாம். அப்போழுது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்கலாம்.
3) ஏதாவது ஒரு திருச்சபையில் பெண்கள் ஐக்கிய கூடுகை இருந்தால் உங்களை இணைத்துக் கொண்டு, ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரலாம். இதன் மூலம் பலரின் நட்பும் உங்களுக்கு கிடைக்கும்.
4) உங்கள் திருச்சபையில் பெண் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வார நாட்களில் அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உதவி ஏதாவது தேவைப்படுகின்றதா என்று கேட்கலாம். ஜெபக்குறிப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.
5) நீங்கள் வேலை செய்ய தகுதி பெற்றவராய் இருந்தால், பகுதி நேர அல்லது அரை நாள் வேலைக்குச் செல்லலாம். வீட்டிலேயே சிறு தொழில் தொடங்கலாம். அல்லது வீட்டிலேயே டியூஷன் சொல்லிக் கொடுக்கலாம்.
6) சிறு கதைகள் அல்லது கவிதைகள் எழுதலாம். கார்ட்டூன் வரையலாம். www.kirubai.org க்கு இது போன்ற படைப்பாளிகள் தேவை.
7) ஜெபத்தில் நேரத்தை செலவழியுங்கள். நாடுகளுக்காக ஜெபியுங்கள்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)