புரிந்து கொள்வதே தேவை
சகோ. சாம்சன் பால்
We have to Understand

கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப் பட்டவர்கள் போல ….. எபி – 13:3

லாசருவை உயிரோடு எழுப்பச் சென்ற இயேசு அவனுடைய சகோதரிகளின் கண்ணீரையும், மன வேதனையையும் பார்த்தபோது அவரும் துக்கத்தில் நிறைந்து அவர்களோடு கண்ணீர்விட்டார். அந்த வேளையில் அவர் முதலாவது அவர்களின் நொறுங்குண்ட மனநிலைகளை உணர்ந்து அவர்களின் துயரத்தில் பங்கேற்றார். பின்னர்தான் அவர்களுக்கு அற்புதம் செய்து, அவனை உயிரோடு எழுப்பினார். ஆம் இயேசுவை வல்லவர் நல்லவர் என்று பிறருக்குக் காண்பிக்கும் அதே வேளையில், அவருடைய மனதுருக்கத்தின் சிந்தையும் நமக்கு வேண்டும். பிறரின் துக்கமான உணர்வுகளை நாம் புரிந்து கொண்டு நடந்துகொள்ளும்போது அவர்களுக்கு அது மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறது.

ஒரு முறை நான் பலவிதமான சோதனைகளினால் மிகவும் சோர்ந்து போயிருக்கையில், ஒரு தேவ ஊழியர் என்னிடம் வந்து என்னை உற்சாகப்படுத்த விரும்பினார். என் விஷயங்களைக் கேட்டறிந்த அவர், இவ்வளவுதானா, எல்லாம் சரியாய் போகும் கர்த்தர் பெரியவர், விசுவாசியுங்கள். அப்போது எல்லாம் பஞ்சாய்ப் பறக்கும். என்றெல்லாம் கூறி மிகுந்த கலகலப்போடு, பல ஆலோசனைகளைக் கூறினார். ஆனால் அவருடைய உற்சாகமான ஆலோசனையோ, விசுவாச வார்த்தையோ என்னுடைய சோர்வைத் துளி கூட அகற்றவில்லை. அதே வேளையில் இன்னொரு முறை நான் மிகவும் சோர்வுற்றிருந்தபோது, ஒரு தேவ ஊழியர் என்னிடம் வந்தார். என் விஷயங்களைக் கேட்டறிந்தார். அவைகளை அவர் கவனமாகக் கேட்டபின்பு, தானும் இதுபோன்ற துயரத்தின் பாதையைக் கடந்து வந்ததாகக் கூறி, அவைகளைக் குறித்து என்னிடம் உருக்கத்தோடு பகிர்ந்து கொண்டார். அவருடைய துன்ப சூழ்நிலைகளைக் குறித்த சாட்சி என் மனதிலிருந்த சோர்வையெல்லாம் புரட்டிப் போட்டுவிட்டு, உற்சாகடையச் செய்தது.

சில நேரங்களில் பிறர் மிகவும் துன்புற்றிருக்கும் வேளையில், சோதனைகளைக் கடந்து செல்லும் வழிகளைக் அவர்களுக்கு காண்பிப்பதைவிட, அவர்களின் பாதிக்கப்பட்ட மனநிலைகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்று கூறுகின்ற விதமாக நடந்து கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலைக் கொண்டு வருகிறது. தாவீதின் சங்கீதங்கள் துன்பங்களின் நடுவில் அவனுடைய பாதிக்கப்பட்ட மனநிலையின் வெளிப்பாடுகள்தானேயன்றி, துன்பங்களை வெல்வது எப்படி என்ற தியான போதனைகள் அல்ல. ஆனால் பல சிறப்பான போதனைகளைவிட, தாவீதின் அனுபவங்களைக் குறித்த மனந்திறந்த வெளிப்பாடுகள்தான், துன்புற்றுத் தவிக்கும் அநேகருக்கு ஆறுதலூட்டும் அருமருந்தாய் விளங்குகிறது. இன்னொருவருடைய உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஒரு உருக்கமான அணுகுமுறை மிக முக்கியத் தேவையாகும்.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.