தச்சனின் குடும்பம்...!
திரு. ராஜாசிங்
Reaching out people

பிதாவின் ஒரேபேரான இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்தில் தேவன் அனுப்பத் திட்டமிட்டபோது, காலம், இடம், தாயாக கன்னி மரியாள் மற்றும் அவரை கவனிப்பதற்க்கு ஒர் வளர்ப்பு தகப்பனாக, தச்சன் யோசேப்பு முன்குறிக்கப்பட்டார்...

ஒர் தச்சன் வீட்டில் தேவ குமாரன் வளர்ந்து 30 ஆண்டுகள் "தச்சனின் குமாரன்" என்று அழைக்கப்பட்டது எத்தனை ஆச்சரியம்..! தச்சன் யோசேப்பின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கோள்ள வேண்டிய சில குடும்ப சத்தியங்கள் உண்டே...! கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களுக்கு முன்பாகவே, இதை கற்றுக்கொள்ள விரும்பி "தச்சனின் குடும்பம்" என்று, தங்கள் குடும்ப ஆசிர்வாதத்திற்காக இச்செய்தியை தருகின்றோம்...

1. சிந்தித்த யோசேப்பு :
"அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது." (மத். 1:19,20)

இந்நிகழ்ச்சி நமக்கு நன்கு தெரிந்ததே... மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் முடிந்துவிட்டது... எதிர்பார்ப்பில் இருந்த யோசேப்புக்கு வந்த செய்தியோ அவனை அப்படியே நிலைகுலைய செய்திருக்கும்... பழைய ஏற்ப்பாட்டை நன்கு அறிந்திருந்த யோசேப்பு, இரண்டு சாட்சிகளை ஏற்ப்படுத்தி, மரியாளை கல் எறிந்து கொல்ல தீர்மானித்திருக்கலாம்... ஆனால், யோசேப்போ இரகசியமாய் தள்ளிவிட யோசனையாயிருந்தான்... தேவனை அறிந்திருந்த யோசேப்பு, பல நாட்கள்.. வாரங்கள்... எடுத்து தேவன் மேலே சார்ந்து, ஆலோசயை தேவன் தரும்படி யோசனையாய் இருந்திருக்கக்கூடும்...

நண்பரே! தங்களின் காரியங்கள் சிறியதோ, பெரியதோ - ஆதாம் ஏவாளைப் போல சட்டென்று மாம்சீகத்தில் தீர்மானம் எடாதபடி - தேவன் மேல் சார்ந்து, தேவனின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுகிறவர்களை தேவன் நம்புகிறார்... உங்களை தேவன் நம்ப விரும்புகிறாரே.. தங்களின் குடும்ப ஜெபத்தில் சிறு சிறு குறிப்புகளை வைத்து ஜெபியுங்கள்.. தேவன் அதிசயங்களைச் செய்வாரே!


2.கீழ்ப்படிந்த யோசேப்பு :
"அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது... யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு. ." (மத். 1:20,24)

தேவனிடத்தில் ஆலோசனைக்கு வரும் எவரையும் அவர் வெறுமையாய் அனுப்புவதே இல்லை... யோசேப்பிற்கு தேவனுடைய தூதன் சொப்பனத்தில் காணப்பட்டான்.. மரியாளின் வயிற்றில் உருவாகியிருப்பது மனிதனால் அல்ல, தேவ ஆவினால் என்பதை தெரிவித்தான்.. குழப்பத்தில், கலக்கத்தில் இருந்த யோசேப்புக்கு தைரியம் வந்தது.. தேவனுக்கு நன்றி சொல்லியிருப்பான்.. நித்திரை தெளிந்து எழுந்தவுடன் தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டான்.. எத்தனை அருமையான கீழ்ப்படிதல்..

நண்பரே! தேவன் தங்களிடம் உணர்த்தின காரியங்களை சரிசெய்து விட்டீர்களா?.. மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விட்டீர்களா?... கொடுக்க வேண்டியதை கொடுத்தாகி விட்டதா?.. உடனடி கீழ்ப்படிதலை தேவன் எதிர்பார்க்கிறாரே.. சவுல் இராஜாவின் அரைகுறை கீழ்ப்படிதல் ஆபத்தாய் முடிந்ததே..

3. பரிசுத்தன் யோசேப்பு :
"அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்." (மத். 1:25)

தேவனுக்குக் கீழ்ப்படிந்த யோசேப்பு, மரியாளைத் தன் துணைவியாக எற்றுக்கொண்டான்... வாலிபன் யோசேப்புக்கு பல கனவுலகங்கள் இருந்திருக்கக்கூடும்... ஆனால், தேவ ஆவியானவர் மரியாளின் வயிற்றிலிருக்கும் பாலகன், பரிசுத்த ஆவியினால் உண்டான "இம்மானுவேல்" "இயேசு" என்பதை உணர்ந்தவனாய், பரிசுத்தத்தை பரிசுத்தமாய் பாவிக்க எண்ணி, பரிசுத்த பாலகன் இயேசு பிறக்கும் வரைக்கும் தன் மனைவியை "அறியாதிருந்தான்".. எத்தனை பரிசுத்த வாஞ்சை!.. பரிசுத்தத்தைப் புரிந்துகொண்ட யோசேப்பு...

நண்பரே! தங்களின் வாழ்வில் பரிசுத்தம் எது.. அசுத்தம் எது.. என்று கோடிடும் கிருபை உண்டா?.. தங்களின் டி.வி. காட்சிகளில், பத்திரிக்கைகளில், அந்தரங்க வாழ்வில், எதிர்பாலரோடு பழகுவதில் அசுத்தங்கள் உண்டோ? ஜாக்கிரதை.. தேவனின் நம்பிக்கையை மாத்திரம் சுக்குநூறாக்கி விடாதிருங்கள்.. தேவனின் நம்பிக்கையைப் பெற்ற யோசேப்பு, தேவ குமாரனை வளர்த்துவிடும் பாக்கியம் பெற்றானே...

ஓர் சிறு ஜெபம்:

"அடிக்கடி உம்மிடத்தில் ஆலோசனைக்கு வராத குறையை எனக்கு மன்னியும் ஆண்டவரே.. அரைகுறை கீழ்ப்படிதல் உள்ள என்னை தண்டித்து விடாதிரும் ஆண்டவரே... பரிசுத்தத்தை அறிந்த பின்பும், பரிசுத்தத்திற்க்காக வைராக்கியம் பாராட்டாதிருந்த என்னை தூர தள்ளிவிடாதிரும் ஆண்டவரே.. நீர் என்னை நம்ப வேண்டும்... பரலோக பங்குகளை என்னை நம்பித் தரவேண்டும்.. என் ஜெபத்தை கேட்டதற்க்காக உமக்கு நன்றி.. இயேசுவின் மூலம், ஆமென்! ஆமென்!!"


திரு. ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.