‘தேவனே தடை செய்தார்..!’
அன்பு ஒளி
Family Pages Article Image
பெங்களுர் பட்டணத்தில் வங்கி ஒன்றில் பணி புரிந்த என் தகப்பனாருக்கு நாங்கள் 3 பிள்ளைகள். இரண்டு அக்காமார், நான் கடைசி. ஒரே சம்பளத்தில் நாங்கள் 5 பேர்.. அதுவும் பெங்களுர் பட்டணத்தில், சின்ன வாடகை வீட்டில்.. எப்படியோ எங்கள் குடும்பத்தை என் தகப்பனார் சிக்கனமாய் நடத்தி வந்தார். என் தயாருடன் கரம்பிடித்து.. ஜெபித்து.. 6 மணிக்கு எங்களை எல்லாம் எழுப்பி.. பாடல்களை பாடி.. ½ மணி நேரம் மொத்தத்தில் ஜெபித்து.. அதன்பின் எங்களை படிக்க உட்கார வைத்ததையும் நான் மறக்கமுடியவில்லை. என் தாயாரோ என் தகப்பனாரோ ஒருநாள் கூட சண்டை போட்டதை நான் பார்த்ததே இல்லை.
 
என் தகப்பனார் மரித்த பின்பு, பிள்ளைகளாகிய நாங்கள் அடிக்கடி அவரை நினைவுகூருகிறோம். இன்று நான் ஓர் பெரிய Bank- ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறேன். எங்களை தேவன் நடத்தினது ஆச்சரியமான பாதைதான்.
 
கல்லூரி விரிவுரையாளராக எனக்கு வாய்ப்பு வந்தபோது என் தகப்பனார் கல்லூரி வேலைக்குப் போகச் சொன்னார்கள். ஆனால் என்னுடைய மனதிலோ எனக்கு இஷ்டமில்லை. Bank - ஒன்றிற்கு மனு செய்தேன். இந்தியாவில், மாநில அளவில் உயர்ந்த பதவி. என் மனைவி, பிள்ளைகளை கவனிக்க வேண்டும் என்று விரும்பி என் மனைவிக்கு “வேலை வேண்டாம்” என்று சொல்லி விட்டோம். என் பிள்ளைகளை என் மனைவி, என் தாயாரைப் போலவே அழகாக வழி நடத்தி வருகிறார்கள். இதுவும் தேவ கிருபையே.
 
சில மாதங்களுக்கு முன், என்னுடைய Bank –யை விட இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்கும் என்று எண்ணி, ஓர் புதிய Bank கிற்கு நானும் எனது நண்பர்களும் மனுச் செய்தோம். முடிவில் நேரடித் தேர்விற்கும் போய் வந்துவிட்டோம். இந்த புதிய வங்கி வேலைக்காக ஜெபித்தபோது ‘ இந்த புதிய Bank -ன் உயர் பதவி வேண்டாடம்’ என்று என் மனதில் தெளிவாகப் பட்டது. எனவே அப்புதிய வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டேன். என்னுடைய நண்பர்களில் சிலருக்கு அப்புதிய வேலை கிடைத்தது. நல்ல சம்பளம்.. எனவே அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி.
 
அந்தப் புதிய வங்கியிலிருந்து எனக்கு அடிக்கடி அழைப்பு வந்தது. வந்து சேரும்படி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் நாங்கள் உறுதியாக வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.
 
நண்பர்கள் பலர் என்னைப்பார்த்து “பைத்தியம்” என்றார்கள். நான் அதைக்குறித்துக் கவலைப்படாமல் என்னுடைய வங்கியில் என்னுடைய வேலைகளை அதிக மகிழ்ச்சியோடு செய்து வந்தேன். சனி, ஞாயிறு தினங்களில் ஊழியங்களுக்கும் கடந்து சென்றோம். எங்கள் குடும்பம் சந்தோஷமான குடும்பமாக, மகிழ்வோடு தேவ நடத்துதலோடு கடந்து சென்றது.
 
சுமார் 6 மாதங்கள் கழித்து, ஒரு நாள் டி வி.லும் செய்தித்தாளிலும் என்னை அதிர்ச்சியுறப்பண்ணின ஒரு செய்தி வந்தது. நான் எந்த புதிய Bank - ல் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அந்த வங்கியில் பலர் மீது CBI நடவடிக்கை எடுத்திருப்பதை வாசித்தேன். அத்தனைபேருடைய வேலையும் பறிபோயிற்று.
 
அந்த புதிய உயர் பதவிக்கு, நானும் என் மனைவியும் “சரி” என்று சொல்லி இருந்தால், ஒரு வேளை நான் இன்றைக்குச் சிறைச்சாலையில் இருந்திருக்கக் கூடும். தேவன் எங்களைத் தடை செய்தார்.. தப்புவித்தார்.. எங்களை மகிழ்ச்சியாக்கினார்.
 
வாலிபத் தம்பியே! தங்கையே! அருமைத் தாயே! தகப்பனாரே! உங்களையும் தேவன் அழகாக நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பணம் பெரிதல்ல. தேவ நடத்துதலே ஆசீர்வாதம்.
 
“அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.” (சங்கீதம் 23:2)

இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'