திருப்பம்
பொ.ம.ராசமணி
Family Pages Article Image

சந்திரன் எப்படி இருக்கிறான் என்று ஆறுமாதத்திற்குப் பிறகு பம்பாயில் இருந்து ஊருக்குத் திரும்பியிருந்த மாணிக்கம் தனது நண்பன் ஒருவனிடம் விசாரித்தான்.
 
நண்பன், சந்திரன் முன்னைப் போலில்லை ரொம்பவும் மாறிப் போய்விட்டான். முன்பெல்லாம் மாலை நேரங்களில்அவனை பஸ் ஸ்டாண்டுப் பக்கந்தான் பார்க்கலாம். ஆரிய பவனில் டிபன், காபி! பிறகு வெற்றிலைப்பாக்குப் போட்டுக் கொண்டு நண்பர்களுடன் இரண்டு மணி நேரமாவது அரட்டை அடிப்பான். இப்போதெல்லாம் பஸ் ஸ்டாண்டு பக்கமே நெருங்குவதில்லை. என்ன நோயோ, என்ன நொடியோ! டாக்டர் ஏதாவது அட்வைஸ் பண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன். காபி குடிப்பதை அறவே விட்டு விட்டான்! என்று  சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாணிக்கம் இடைமறித்தான்.
 
நீ இப்போ நம்ம சந்திரனைப் பற்றித்தான் சொல்கிறாயா அல்லது வேறு எவனையும் பற்றியாவது கதை அளக்கிறாயா? நன்றாக யோசித்துச் சொல். ஷிபா கம்பெனி டைப்பிஸ்ட் சந்திரனைத் தானே சொல்கிறாய்!
 
ஆமாம் அவனையேதான்.
 
அவனா இப்படி மாறிவிட்டான்!
  
இதுமட்டுமா! ஒவ்வொரு புதுப் படம் வெளிவந்த அன்றும் முதல் நாளே முதல் முதல் காட்சி, பிளாக்கிலே டிக்கெட் வாங்கியாவது பார்க்கும் சந்திரன் இப்போ சினிமாப் பார்ப்பதையே விட்டுவிட்டான்! எப்போதாவது போனாலும் வெளிக்குத் தெரியாது!
 
ரொம்பவுந்தான் மாறிவிட்டான் போலிருக்கே! உலகம் முடியும்போது என்னெல்லாவோ அதிசயம் நடக்குமாம். அதில் இது ஒன்று போலும்!
 
ஆமாம், மாணிக்கம். வீட்டிலிருந்து ஆபீசுக்குப் போகும்போது கூட, கடைத்தெரு வழியாகப் போகாமல் வேறு வழியாகத்தான் ஒதுங்கிப் போகிறான் என்றால் பார்த்துக் கொள்ளேன் என்று சொல்லிவிட்டு நண்பன் போய்விட்டான்.
 
மாணிக்தத்திற்கு உடனே சந்திரனை பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. நேரே சந்திரன் வீட்டிற்குத் தேடி போனான். சந்திரன் அப்போதுதான் தனது ஆபீசிலிருந்து வந்து காபி குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான்.
 
எப்போ வந்தே? என்று சம்பிரதாயக் கேள்வியுடன் தொடங்கிய பேச்சு எங்கெங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று வந்தது!
 
மாணிக்கம் கடைசியாக ஆமாம் உன் வாழ்க்கைப் பாதையில் இப்படி ஒரு திருப்பம் ஏற்பபடும்  என்று நான் நினைக்கவே இல்லை. எப்படி இப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டது? என்று கேட்டான்.
 
சந்திரன், ஆமாம் வாழ்க்கைப் பாதையில் திருப்பந்தான். பஸ் ஸ்டாண்டு, ஓட்டல், பஜாரில் உள்ள வெற்றிலைப் பாக்குக்கடை, ஜவுளிக்கடை, டீக்கடை, மருந்துக்கடை, பத்திரிக்கைக்கடை,  பலசரக்குக்கடை எல்லா இடத்திலும் கடன் வாங்கிவிட்டேன். கடன்கரார்கள் தொல்லை தாங்க மாட்டாமல் தான் ஒளிந்து கொண்டு மூலை முடுக்கு சந்துபொந்து வழியாக ஆபீஸ் போகிறேன் எப்படியோ என் வழக்கமான பாதையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது என்று மனம்நொந்து கூறினான்.

மாணிக்கம் வாலிப வயதில் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு ஆண்டவரோடு ஐக்கியம் கொண்டிருக்கின்ற, தூய உள்ள கொண்ட சகோதரன்.  மாணிக்கம் சந்திரனோடு பேசினான். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வது பற்றியும், ஆண்டவர் கடனை பற்றி வேதத்தில் சொல்லியிருக்கன்றதையும் விளக்கி கொண்டிருக்கும் போதே சந்திரனின் முகம் பிரகாசமானது.  அவனின் கவலை ரேகைகள் காணமல் போயன.

எழுந்து நடந்தான், விடியலை நோக்கி.