ஞானம் விளங்க வாயைத் திறப்பவள்
திருமதி ஜேசுபாதம்
Family Pages Article Image

அபிகாயில்(1 சாமு 25: 2-31)

 அபிகாயில் ஞானமுள்ள பெண் மட்டுமல்ல அழகானவளும் கூட. அது மட்டுமல்ல புருஷனைக் காத்தவள்.
 
தாவீது ராஜாவின் மனைவியாக இருந்தாலும் தாவீதைப் போல் பேசப்பட்டவள் அல்ல. முதலில் நாபாலின் மனைவியாக இருந்த இந்த அபிகாயில் மகா புத்திசாலியாய் இருந்தாள்.
 
கர்மேலில் ஆடுகளுக்கு முடி கத்தரித்துக் கொண்டிருந்த நாபாலினிடத்தில், தாவீது ஆள் அனுப்பி சாப்பிட ஏதாவது கொடுத்தனுப்பும்படி கேட்டனுப்பினான். ஆனால் நாபால் தர மறுத்தது மட்டுமல்ல ஏளனமாகப் பேசியனுப்பினான். அந்தச் செய்தியை தாவீதினிடத்தில் அவர்கள் வந்து சொல்லவும் கோபம் கொண்டான் தாவீது.
 
தன் மனுஷர்களிடத்தில் நாபாலை எதிர்க்கப் புறப்படச் சொன்னான் தாவீது. அனைவரும் தயாரான செய்தி அபிகாயிலுக்குத் தெரிய வந்தது. அவள் தாமதிக்காமல் உடனே தீவிரமாய் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சை ரசம், சமைத்த ஐந்து ஆடுகள், ஐந்து படி வறுத்த பயறு, வற்றலான நூறு திராட்சைக் குலைகள் எல்லாவற்றையும் கழுதையின் மேல் ஏற்றினாள், தன் கணவனிடம் சென்று, "நீங்கள் தாவீதிற்கு உணவளிக்க விரும்பாததால் நம்மைக் கொல்ல வருகிறான், வீட்டைப் பார்த்துக் கொண்டிருங்கள், நான் அவரிடம் இவைகளைக் கொடுத்து விட்டு வருகிறேன், இல்லையென்றால் நம்மை மட்டுமல்ல இந்த ஊரையே அழித்து விடுவான்" என்று சொன்னாளா இல்லை! அவள் ஞானம் விளங்க வாயைத் திறப்பவள். அப்படிச் சொல்லியிருந்தால் கோபக்கார அவள் கணவன் அவளைக் கொன்றிருப்பான், எனவேதான் அவள் புருஷனுக்கு அறிவிக்கவில்லை.
 
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தாவீதினிடத்தில் போய் முதலில் கணவனுக்காக மன்னிப்புக் கேட்கிறாள். பின், தான் கொண்டு வந்தவற்றைக் கொடுத்தாள். தான் மட்டுமல்ல தன் குடும்பத்தை மட்டுமல்ல ஊர் ஜனங்களையும் காப்பாற்றினாள்.
 
எல்லா விஷயங்களையும் கணவனிடம் சொல்ல வேண்டும் என சில பெண்கள் கூறுவர். தேவையானவற்றை மட்டும் கூறினால் போதும். நாம் சொல்லும் விஷயங்கள் சமாதானத்திற்கடுத்த காரியங்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் குழப்பங்கள்தான் மிஞ்சும்.
 
ஒருவேளை மாமியார் "என் மகனுக்கு அறிவே இல்லை சின்ன வயதிலிருந்தே இப்படி முட்டாள் தனமாகத்தான் செய்வான்" என்றோ அல்லது "என் தம்பி கோபக்காரன் அவனுடன் நீ எப்படித்தான் வாழ்கிறாயோ தெரியவில்லை" என்றோ கணவனின் சகோதரி கூறலாம் அல்லது "உன் கணவனுக்கு வெளியிடங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமெனத் தெரியவில்லை, உன் கணவனுக்கு சரியாக பிளான் பண்ணத் தெரியவில்லை" என்று யாராவது குறை சொல்லலாம், அல்லது "உன் கணவன் மாதிரி எனக்கு கணவன் கிடைத்திருந்தால் ஒருமாதம் கூட வாழ்ந்திருக்க மாட்டேன்" என்று சிலர் சொல்லலாம், அல்லது நிறம், படிப்பு, அந்தஸ்து, குடும்பம், ஜாதி, பேச்சு, நடை, உடை, பாவனை போன்ற யாதோ ஒன்றைக் குறித்து யாராவது சொல்லலாம். அதைக் கணவனிடம் கூறினால் கணவருக்கு அவர்கள் மேல் கசப்புண்டாகும். தேவையில்லாத இவைகளைச் சொல்வதால் என்ன பயன்? ஞானம் விளங்க வாயைத் திறக்க வேண்டும். குறைகளை பெரிது பண்ணி பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்காக கணவனுக்குத் தெரியாமல் சினிமா, டிராமா, ஊர் சுற்றுதல், சீட்டு போடுதல் தவறு.

கணவனை உற்றார், உறவினர்களுடன் இணைக்கும் அன்பின் பாலமாக மனைவி இருக்கவேண்டும். குடும்ப உறவுகளின் வட்டம் பெரிதாக வேண்டுமேயொழிய சிறிதாகக் கூடாது.

"சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்." (மத் 5 : 9)


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.