கோபப்படுகிறேன்
திருமதி ஹெலன் ஜேக்கப்
Family Pages Article Image

கேள்வி - பதில் பகுதி

கேள்வி

அன்பு சகோதரிக்கு
எனக்கு வயது 42. திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் அடிக்கடி கோபப்படுகிறேன். அதனால் குற்ற உணர்வுக்குள்ளாகிறேன். எனக்கு உங்கள் ஆலோசனை வேண்டும்.

பதில்

அன்பு சகோதரி

கோப உணர்ச்சியில் இருந்து விடுதலையடைய நினைக்கின்ற உங்களை பாராட்டுகிறேன். வேதத்தில் தேவனுடைய கோபத்தைக் குறித்தும் மனுஷனுடைய கோபத்தைக் குறித்தும் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய ஏற்பாட்டில் மட்டும் 600 வசனங்கள் கோபத்தைக் குறித்து உள்ளது. புதிய ஏற்பாட்டில் இது தொடர்கிறது. தேவனுடைய கோபம் பரிசுத்தக் குலைச்சல் உண்டாகும்போது ஏற்பட்டது. ஆனால் மனிதனுடைய கோபம் சூழ்நிலைகளை தவறாக புரிந்து கொள்வதினால், மற்றவர்கள் நம்மை பாதிப்பதினால், நம்மை வேதனைப் படுத்துவதினால், வைராக்கியத்தினால் உண்டாகிறது.  மனிதனுடைய கோபம் மற்றவர்களை பாதிக்கக் கூடியது. ஆபத்தானது. கோப உணர்வே பாவம் அல்ல.

ஆனால் கோபத்தை நாம் சரியாக கையாளாதபோது நாம் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்வதினால், பாவம் செய்கிறோம். இதைத்தான் பவுல் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்றார். ( எபே. 4:26). நீங்கள் கோபப்படும் சூழ்நிலையில்,  கீழே உள்ள கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள்.

* எந்த காரியம் என்னை கோபப்படுத்துகிறது?

* ஏன் எனக்கு மற்ற உணர்வுகளைக் காட்டிலும், கோப உணர்வு அதிகமாக காணப்படுகிறது?

* என்னுடைய வாழ்க்கைக்கு ஒத்துவராத சில காரியங்களை எதிர்ப்பார்க்கிறேனா?

* இந்த சூழ்நிலையை வேறு கோணங்களில் பார்க்க முடியுமா?

கோபத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்:

* தொடர்ச்சியாக கோபத்தைக் குறித்தும், சுயக் கட்டுப்பாட்டைக் குறித்தும் வேத வசனங்களை தியானியுங்கள். நீதிமொழிகளிலே கோபத்தைக் குறித்த வசனங்கள் அதிகமாக உள்ளன.

* காரணமில்லாமல் உங்களை வேதனைப்படுத்துகிற சூழ்நிலையையோ, நபரையோ நிகழ்ச்சியையோ தவிர்த்து விடுங்கள். அதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். ஆனாலும் பிரச்சனைகளை சரி செய்வது ஆகாது. கோபத்தைக் குறைக்கலாம்.

* ஒரு நபர் பாதுகாப்பு உணர்வுடன் தாழ்வு மன்ப்பான்மை இல்லாமலும் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அந்த அளவுக்கு கோபம் நம்மை பாதிக்காது. அதை அடக்குவது சுலபமாக இருக்கும்.

* ஒருவர் கோபப்படும் பொழுது கோபத்துக்கான காரணங்களை நாள் முழுவது யோசித்துக் கொண்டிருப்பார்கள். இது நம் கோபத்தையும் , வெறுப்பையும் வளர்க்குமே தவிர , கோபத்தை குறைக்க உதவாது.  இது போன்ற சிந்தனைகள் உடனே தடுத்து நிறுத்தப் படவேண்டும். நன்மையான காரியங்களை யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

* நம் வாழ்க்கையில் முரண்பாடுகளை தவிர்க்க முடியாது.அதே நேரத்தில் நம்முடைய விருப்பங்களை, எண்ணங்களை, உணர்வுகளை, சரியான முறையில் மற்றவர்களுக்கு சொல்ல பழக வேண்டும். கோபத்தை தூண்டக்கூடிய வகையில் சொல்லாமல், அன்புடன், சாந்தத்துடனும் சொல்ல வேண்டும்.


திருமதி ஹெலன் ஜேக்கப், தன் கணவருடன் இணைந்து குடும்பங்கள் மத்தியில் பல வருடங்களாக ஊழியம் செய்து வருபவர். 'மணக்கும் மணவாழ்வு' என்ற திருமண உறவைப்பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வரும் இவரை 91-979-089-5366 ( இந்தியா ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.