குயவனே, குயவனே
Bro.A.Stanley Chellappa
Family Pages Article Image

குயவனே, குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே
.....
1980-ம் ஆண்டின் லெந்து நாட்கள்.

சென்னை இந்திய வேதாகமக் கல்லூரியின் ஆசிரியர்கள் அறையில்:
 
“ராஜன்! ஒரு நல்ல செய்தி தெரியுமா? நமது கல்லூரியின் பாடகர் குழுவுக்கு, இன்னிசையில் நற்செய்திப்பணி செய்ய, பம்பாயிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது! நீங்களும் எங்களோடு வரவேண்டும்.”
 
என உற்சாகமாய்த் தன் சக விரிவுரையாளரிடம் செய்தியைப் பகிர்ந்து கொண்டார் சகோதரர் பிரேம்குமார், அவர் C.S.I. திருநெல்வேலி திருமண்டலப் பேராயரான மாமறைத்திரு ஜேசன் தர்மராஜின் சகோதரராவார்.
 
“ரொம்ப சந்தோஷம், பிரேம். ஆனால், லெந்து நாட்களின் முடிவாக இருக்கும் இந்நாட்களில், பரிசுத்த வார நிகழ்ச்சிகளுக்கு நான் ஆயத்தம் செய்ய வேண்டுமே, ஆகவே, நீங்கள் சென்று வாருங்கள் நான் இங்கிருந்து உங்கள் ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்கிறேன்.”
 
“இல்லை ராஜன்; 25 பேர் கொண்ட மாணவர் குழுவை நான் மட்டும் தனியாக வழிநடத்துவது கடினமான காரியம். மேலும், நீங்கள் ஒரு நல்ல பாடகர். உங்களின் தனிப்பாடல்களைக் கொண்டு, நமது ஊழியத்தை இன்னும் சிறப்பாகச் செய்யலாமே. பல இடங்களில் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். அவற்றில் நற்செய்தியை அளிப்பதற்கு, நீங்களும் என்னுடன் சேர்ந்து பங்கேற்றால், எனக்கு உதவியாக இருக்கும்.”
 
தன் நண்பரின் வற்புறுத்தலின் பேரில், அக்குழுவுடன் இணைந்து ராஜன் பம்பாய்க்குப் பயணமானார். தேவன் அவர்களுடைய பம்பாய் ஊழியங்களை அபரிதமாய் ஆசீர்வதித்தார்.
 
அந்நிகழ்ச்சிகளில் அளிக்கப்பட்ட செய்திகளின் மையப்பொருள், “குயவனின் களிமண்” ஆகும். ராஜன், தானே ஒரு செய்தியாளராக அங்கு விளங்கினாலும், தன் சக ஊழியரின் செய்தியையும், தன் உள்ளத்தில் பதியச் செய்தார். சென்னைக்குத் திரும்பியவுடன், இப்பாடலை இந்த மையப்பொருளின் அடிப்படையில் இயற்றினார்.
 
சகோதரர் ராஜனுடன் பம்பாய் ஊழியத்தில் கலந்து கொண்டு கித்தார் இசைத்த மாணவர் ஒருவர், தனது வேனிற்கால விடுமுறைக்கு முன், ராஜனைச் சந்தித்துப் பேச அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜன், தான் புதிதாக இயற்றிய இப்பாடலைப் பாடிக் காட்டினார். அம்மாணவர் இப்பாடலை மிகவும் ரசித்துக் கேட்டுப் பாராட்டினார். பின்னர், நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு தங்களின் கூட்டங்களிலும், தாம்பரம் பிலடெல்பியா சபையைச் சேர்ந்த சகோதரர் பாஸ்கரதாஸ் தமது ஊழியங்களிலும் இப்பாடலைப் பாடி, பிரபலமாக்கினார்.
 
1981-ம் ஆண்டு ராஜன் இந்திய வேதாகமக் கல்லூரியில் முழுநேரப் பேராசிரியராகச் சேர்ந்து 7 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். அந்நாட்களில் அக்கல்லூரியின் தமிழ்ப்பாடகர் குழுவின் தலைவராகவும் இருந்தார். 1988-ம் ஆண்டு, ராஜனின் தந்தையின் சுகவீனத்தினிமித்தம், அவர் அதுவரை நடத்திவந்த மணி வாத்தியார் ஆரம்பக் கல்வி நிலையத்தின் பொறுப்பை, ராஜன் மேற்கொண்டார். முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சுமார் 850 பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியை, ராஜன் இன்றும் திறம்பட நடத்தி வருகிறார். இப்பள்ளியின் வாராந்திரப் பொதுக் காலை தியானக்கூட்டத்தில், பிள்ளைகளுக்கு நற்செய்தியை அறிவித்து வருகிறார்.
 
இச்சகோதரின் முகவரி:-

சகோதரர் B.ராஜன்
16, ஆசாத் தெரு
ரமணா நகர்,
பெரம்பூர், சென்னை - 600 011
தொலைபேசி இல்லம்: 5375518
பள்ளி அலுவலகம் : 8416077


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com