கார் ரிப்பேர்..!
அன்பு ஒளி
Family Pages Article Image
பெங்களுர் பட்டணத்தில் ஒரு பெரிய கம்பெனியில் உதவிப் பொறியாளராக இருக்கிற எனக்கு இயேசு தெய்வம் சில எளிய பாடங்களைக் கற்றுத்தந்திருக்கிறார். அவைகளில் ஒன்று, எங்களிடம் இருக்கும் காரில் செல்லும்போதெல்லாம் நானும் என் குடும்ப அங்கத்தினர்களும், சக விசுவாசிகளும், பாடல் பாடிக் கொண்டும் ஜெபித்துக் கொண்டும் செல்ல வேண்டும் என்ற பாடம்.
 
இப்படிச் செய்யும்போதெல்லாம் என் தேவனுக்கு அதிக மகிழ்ச்சியாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எனக்கும் அது அதிக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
 
ஒரு நாள், மைசூருக்கு என்னுடைய குடும்ப அங்கத்தினர்களோடும், சில உறவினர்களோடும் சுற்றிப்பார்த்து வர திட்டமிட்டோம். உணவு, மாவு பண்டங்கள், சாப்பாடு, குடிநீர் அத்தனையும் எடுத்துக் கொண்டு, அதிக உற்சாகத்தோடு எங்கள் பிள்ளைகளோடு புறப்பட்டோம். நல்ல கால சூழ்நிலை; வழியில் 2 இடங்களில் வண்டியை நிறுத்தினோம். மொத்தத்தில் சுமார் 3 மணி நேரங்கள் கழித்து, நாங்கள் திட்டமிட்டிருந்த பெரிய பூங்காவிற்கு வந்து சேர்ந்தோம். அப்போது மாலை 3.00 மணி இருக்கும்.
 
வரும் வழியிலே சாப்பாட்டை முடித்துவிட்டோம். எனவே பிள்ளைகள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். நாங்கள், ஒரு பக்கம் உட்கார்ந்து பிள்ளைகள் விளையாடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். மாலை 5.30 மணி இருக்கும். டீ மற்றும் தின்பண்டங்களை சாப்பிட்டு காலிபண்ணினோம்.
 
அப்போது என் மனதில் சிறியதோர் எண்ணம் வந்தது. “காலையிலிருந்து இதுவரை பிரயாணங்களில் உதவி செய்த தேவனுக்கு பாடல் பாடி, பிள்ளைகளோடு சிறிய ஜெபங்கள் ஏறெடுத்து, இந்திய தேசத்திற்காய் ஜெபிக்கலாமே!” என்று எண்ணினேன்.
 
இந்த எண்ணம் வந்தபோது.. எனக்குள் ஒரு சிறிய தயக்கம். காரணம், என் மனைவி, இப்படி ஊழியத்தையும், ஜெபத்தையும், சுற்றிப் பார்க்கிற நேரங்களில செய்தால், ‘மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவது போலிருக்கும்’ என்று எண்ணுவார்கள். ஆகவே எனக்குள் வந்த, ஜெபிக்கவேண்டும் என்ற எண்ணத்தை, அப்படியே அழுத்தி, தள்ளிவிட்டேன்.
 
இப்போது மணி 6.00 இருக்கும். வீடு திரும்ப ஆயத்தமானோம். பிள்ளைகளுக்கு ஒரே உற்சாகம். உறவினர்களுக்கும் அதிக மகிழ்ச்சி. எல்லோரும் வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். உறவினர்களில் மூத்தவர் ஒருவரை ஜெபிக்கச் சொன்னோம். அவரும் பிரயாணத்திற்காக ஜெபித்தார். டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். ஆனால் வண்டியில் ஏதோ ரிப்பேர்!
 
வரும்போது நன்றாய் ஓடிவந்த வண்டி இப்போது ரிப்பேர். எங்களால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. என் மனைவிக்கும், மற்றவர்களுக்கும் என் மேல் கோபம், வண்டி ரிப்போ.; ஆனால் நான் என்ன செய்ய முடியும்?
 
எல்லோரையும் கீழே இறங்கி பக்கத்திலிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்லச்சொன்னேன். எல்லோரும் துக்கத்தோடு ஓட்டலுக்குள் சென்றார்கள். இப்போது வண்டியின் அருகில், நானும் டிரைவரும்தான். என் உள்ளத்தில் தேவனோடு பேச ஆரம்பித்தேன்.
 
“ஆண்டவரே! நன்றாய் ஓடிவந்த வண்டி, திடீரென்று, ஸ்டார்ட் ஆகவில்லையே! நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை எனக்கு உணர்த்தும்” என்று உள்ளம் உடைந்தவனாய் தேவனிடம் ஜெபிக்க ஆரம்பித்தேன். “இந்த வண்டி நான் கொடுத்த வண்டி! இப்படி உறவினர்கள் கூடும்போது, கொஞ்சநேரம், இந்திய தேசத்திற்காய் ஜெபித்திருந்திருக்கலாமே!” என்று தேவன் என் உள்ளத்தில் உணர்த்த ஆரம்பித்தார்.
 
“மன்னியும் ஆண்டவரே! என்னை மன்னியும்! நீர் கற்றுக் கொடுத்ததை மறந்து விட்டேனே. வேண்டாம் என்றுதான் நான் இவர்களை ஜெபிக்க கூப்பிடவில்லை. இது உம்மை துக்கப்படுத்தியிருப்பதற்காக, என்னை மன்னியும். இனி எந்த நிலையிலும், ஜெபிக்கும வாய்ப்பை உருவாக்குவேன்! இந்த ஒரு முறை என்னை மன்னியும்! வாகனத்தை சரி செய்து தாரும்! நாங்கள் இரவு உணவிற்கு பெங்களுர் போய்ச் சேரவேண்டுமே” என்று என் உள்ளத்தில் தேவனிடம் முறையிட்டேன். இந்த ஜெபம் செய்ததும், என் உள்ளத்தில் மறுபடியும் மகிழ்ச்சி நிரம்பியது. இந்தப் பிரச்சனையை தேவன் தன் கரத்தில் எடுத்துக் கொண்டார் என்ற நிச்சயம் வந்தது.
 
சில நிமிடங்கள் கடந்திருக்கும்… எங்கள் டிரைவர், இன்னொரு டாக்சியின் டிரைவரை அழைத்து காரைத் திறந்து காண்பித்தார். 5 நிமிடங்கள் தான் கடந்திருக்கும்… அந்த டாக்சி டிரைவர் எங்கள் வண்டியின் ரிப்பேரைக் கண்டுபிடித்து சரி செய்து விட்டார். அல்லேலூயா! இது எனக்கு ஒரு புது அனுபவம்.
 
அதற்குள்ளாய், ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றிருந்த எங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் எங்கள் வண்டி ஸ்டார்ட் ஆனதைக் கண்டு ஓரே கரகோஷம்!, ஓரே மகிழ்ச்சி!?” இது எப்படி ஆயிற்று!?” என்று கேட்டார்கள்.
 
என் உள்ளத்தில் எழுந்த எண்ணங்கள், ஜெபங்கள், அடுத்த டாக்சி டிரைவர் செய்தவைகளையெல்லாம் பகிர்ந்து கொண்டேன். ஓரே ஆச்சரியம்! அன்றிலிருந்து, என் வாகனத்தில் பிரயாணம் செய்கிறபோது, இயேசுவை நேசிக்கின்ற யாராயிருந்தாலும், அவர்களை ஜெபிக்க உற்சாகப்படுத்தி வருகின்றேன். சிறப்பாய், இந்திய தேசத்திற்காய் ஜெபித்து வருகிறோம்.
 
தேவன்பால் பற்றுள்ள நண்பரே! நாங்களும், தேவன் கற்றுத்தந்திருக்கும் சிறிய சிறிய பாடங்களை வேண்டுமென்றே மறப்பீர்கள் என்றால், இப்படிப்பட்ட நெருக்கங்களின் வழியாய் கடந்து போக வேண்டியிருக்குமே.
 
நெருக்கங்களின் வழியாய் நீங்கள் கடந்து போகிறீர்களோ? “யார் எனக்கு உதவி செய்வார்கள்”? என்று திக்குமுக்காடி கண்ணீரோடு நிற்கின்றீர்களோ? அப்படியானால், கடந்த நாட்களில் கற்றுக்கொண்ட ஆவிக்குரிய பாடங்களை மறந்து விட்டிருப்பீர்கள். சற்று உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். தேவனிடம் ஒத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் செயல்படுத்துங்கள். தேவன் உங்களை நெருக்கத்திலிருந்து நிச்சயமாகவே விடுதலையாக்குவார்!
 
“நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்.” (யோனா 2:9)

இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'