என் மகன் படிக்கவில்லை
அன்பு ஒளி
Family Pages Article Image

நான் ஓர் விஞ்ஞானி. எனக்கு ஓரே ஒரு செல்ல மகன் அவன் பெயர் பிரவீன். ஐந்து வயதான அவன் இன்று டெல்லி மாநகரத்தில், ஆங்கிலப் பள்ளியில், முதல் வகுப்பு படித்து வருகிறான். அப்பள்ளி புகழ் பெற்ற ஓர் பள்ளி; வசதியானவர்கள் படிக்கும் பள்ளி. அடிக்கடி பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் குறித்து, பெற்றோராகிய எங்களிடத்தில் பள்ளியின் முதல்வர் கலந்துரையாடல் நடத்துவார்.
 
அப்படி, ஒரு நாள் எங்களை அழைத்திருந்தார்கள். நானும் என் மனைவியும் பிரவீனுடைய முதல்வர் அறைக்குச் சென்றோம். வகுப்பு  ஆசிரியையும் அங்கு உட்கார்ந்திருந்தார்கள். அப்போது முதல்வர் கரத்தில், பிரவீனின் தேர்ச்சி அட்டை இருந்தது. “நீங்கள்தான் பிரவீனின் பெற்றோரா?” என்று கேட்டார்கள்.
 
“ஆம்” என்றோம்.
 
“என்ன வேலை செய்கிறீர்கள்?”
 
“நான் ஓர் விஞ்ஞானி; என் மனைவி ஓர் கம்ப்யூட்டர் இஞ்சினியர்” என்று சொன்னபோது அவர்கள் முகம் சுருங்கினது. என்னைக் கடுமையாகப் பார்த்தார்கள்.
 
“பிரவீனுக்கும் உங்கள் இருவரின் படிப்பிற்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லையே. பிரவீன்தான் இருபது பேர் உள்ள அவன் வகுப்பில் கடைசி; விளையாட்டுப் பிள்ளை; எல்லா பாடங்களிலும் பத்திற்கும் குறைவான மார்க்; இப்படிப் படிக்கிற பிள்ளைகளை நாங்கள் எங்கள் பள்ளியில் வைத்துக்கொள்ள மாட்டோம்; முடிந்தால், இவனை வேறு பள்ளிக்கு மாற்றுங்கள்” என்று கராராகச் சொன்னார்கள்.
 
அவர்களிடம் நாங்கள் என்ன பேசுவதென்று தெரியவில்லை. நாங்கள் பிரவீனைப் பார்த்து ஒன்றும் பேசவில்லை; மாறாக அவனிடம் சந்தோஷமாய்ப் பேசிக்கொண்டே வந்தோம். அவன் மனது காயப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.
 
அன்று இரவு எனக்கு தூக்கமேயில்லை. என் மனைவியும் பிரவீனும் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். இரவு மணி 11.00 இருக்கும். முழங்காலில் நின்று ஜெபிக்கிற பழக்கம் உள்ள நான், என் மகன் பிரவீனுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன்.
 
அப்போது, என்னுடைய கடந்தகால வாழ்க்கை என் மனக்கண்முன் வந்தது; படிக்காமல் என் பெற்றோரைத் துக்கப்படுத்தி, அழ வைத்தது படம்போல என் மனக் கண்களுக்கு முன்பாகத் தெரிந்தது.
 
இப்போது நான் பிரவீனுக்காக ஜெபிக்கவில்லை. மாறாக, என் கடந்த கால பாவங்கள், என் பெற்றோரைத் துக்கப்படுத்தினதற்காக தேவனிடம் மன்னிப்புக் கேட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். சுமார் ஒரு மணி நேரம், முழங்காலில் நின்று அழுது ஜெபித்திருந்திருப்பேன். அந்த இரவில்தானே என் தகப்பனாருக்கு போன் செய்தேன். போன் எடுத்தது என் தகப்பனார்தான். பயத்தோடு “யாரது?” என்று கேட்டபோது “நான் தான்… நான் படித்த காலத்தில் உங்களை அடிக்கடி துக்கப்படுத்தி அழ வைத்திருக்கின்றேன். இப்போது தேவன் எனக்கு ஞாபகப்படுத்தி விட்டார். என்னை மன்னியுங்கள்” என்று போனில் சொன்னபோது என் தகப்பனாருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் “சரி, நீ தூங்கு” என்று சொல்லி போனை வைத்து விட்டார்கள்.
 
அன்று இரவு எனக்கு பெருத்த மகிழ்ச்சியின் இரவு. காரணம் தேவன் எனக்குக் காண்பித்த காரியத்திற்கு நான் கீழ்ப்படிந்து விட்டேன்.
 
சுமார் 10 நாட்கள் கழித்து மறுபடியும், பிரவினுடைய மதிப்பெண்  பட்டியல் வந்தது. முதல் தடவையாக வெரி குட் என்று போட்டிருந்தது. இன்னும் ஒரு மாதம் கழித்து, அவனுடைய எல்லா பாடங்களிலும் வெரி வெரி குட்  என்று எழுதியிருந்தது. “பிரவீனை வேறு எந்த பள்ளிக்கும் மாற்ற வேண்டாம்” என்று அவன் வகுப்பு ஆசிரியை மூலம், முதல்வர் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.
 
என் பெற்றோரை நான் துக்கப்படுத்தினதை தேவன் எனக்குக் காட்டி அறிக்கையிட வைத்து, என்னை சரிப்படுத்தின பின், என் மகன் பிரவீனைத் தேவன் தொட்டார்; ஆசீர்வதித்தார்.
 
‘என் பிள்ளை படிக்கவில்லை’ என்று துக்கத்தில் இருக்கும் தாயே! தகப்பனாரே! நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்தீர்களா? இல்லையென்று எண்ணுவீர்கள் என்றால், காரியங்களை சரி செய்யுங்கள்.
 
“மோசம்போகாதிருங்கள் தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7)

டாக்டர் பிரதான் M.Sc., PhD


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'