உத்தம குமாரனான பேரனைப் பெற்றவள்
திருமதி ஜேசுபாதம்
Family Pages Article Image

லோவிசாள் (2 தீமோ 1:2 -5)

சிறிய வயதில் தகப்பனை இழந்து போன தீமோத்தேயுவை  தாய் ஜனிக்கேயாளும், பாட்டி லேவிசாளும் யூதமார்க்க விதிப்படி வளர்த்தனர். அவன் தகப்பன் கிரேக்கனாய் இருந்தும் தாய் யூத ஸ்திரியாய் இருந்ததால் (மெய்யான தெய்வத்தை அறிந்திருந்ததால்) யூத மார்க்கத்தின்படி தன் மகனை வளர்த்தாள். அதனால் அவன் சகோதரனால் நற்சாட்சி பெற்றவனாய் இருந்தான். பவுல் அவனைத் தன்னுடன் ஊழியத்தில் இணைத்துக் கொண்டான்.
 
பாட்டியும், தாயும் செய்த ஜெபங்கள் ஆண்டவருக்கு பயந்து வாழ்ந்த அவர்களது வாழ்க்கை, கர்த்தரை பிரதிபலித்த செயல்கள் தீமோத்தேயுவின்  வாழ்க்கைக்குத் தூண்களாய் இருந்தது. பக்திக்குரிய பாதையில் பிள்ளைகளை வளர்க்கும் போது முதிர் வயதில் அவர்கள் மூலம் நமக்குச் சமாதானமும், சந்தோஷமும் கிடைக்கும். சின்ன வயதில் விதைக்கும் விதைகள் மனதில் ஆழமாய்ப் பதிந்து முப்பது, அறுபது, நூறு என பலன் கொடுக்கும். சிறு வயதில் ஏற்றுக் கொண்டால் முதிர் (நீதி 22:6) வயதிலும் அதை விடாதிருப்பார்கள். உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தோடு மட்டும் பிள்ளைகள் இருப்பார்களானால் அவர்களால் நிரந்தரமான சந்தோஷம் ஒரு நாளும் கிடைக்காது. கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதம் மட்டுமே ஐஸ்வரியத்தைத்தரும், மாதானத்தையும், சந்தோஷத்தையும் தரும். (நீதி 10:22)
 
பிள்ளைகளுடன் உட்கார்ந்து சினிமா பார்ப்பதும் சீரியல் பார்ப்பதும் தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குடும்ப ஜெபம் செய்வதற்கும், கர்த்தரைத் துதித்து பாடுவதற்கும் எத்தனை குடும்பங்களில் நேரம் உண்டு! அப்படி செய்பவர்களை கேலி செய்வதும், அவமானப்படுத்துவதும் பெருகி வருகிறது. தேவ அன்பும் இல்லை, தேவ பயமும் இல்லை, கர்த்தரைத் தேடும் உணர்வும் இல்லை.
     
சில வீடுகளில் பிள்ளைகள் சிவப்பு நிறத்துடன் இருப்பார்கள். ஆனால் பெற்றோர் அப்படி இருக்க மாட்டார்கள். காரணம் பாட்டி,  தாத்தாவின் நிறம் பேரப்பிள்ளைகளுக்கு வரும் என்பார்கள். இதை விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபித்துள்ளனர். குறிப்பாக பெண் பிள்ளைகள் பாட்டியின் நிறத்கைக்  கொண்டு வருவர். அதைப்போல் பாட்டியின் குணநலன்களும் வருவதுண்டு. அதைப்போல்தான் லோவிசாளிடமிருந்து ஜனிக்கேயாளுக்கும் அவளிடமிருந்து தீமோத்தேயுவிற்கும் விசுவாச வாழ்க்கை கடந்து வந்தது. பரம்பரைப் பெருமைகளைக் கொண்டு வருகிறோமே பக்தியுள்ள வாழ்க்கையைக் கொண்டு வருகிறோமா? அப்படி கொண்டு வருபவர்களை நையாண்டி பண்ணாமல் விடுகிறோமா?
   
வாய்க்குள் போவதெல்லாம் மனுஷரைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து வெளி வருவதுதான் தீட்டுப்படுத்தும். எனவே மது, பான்பராக், சிகரெட் போன்றவைகள் தவறல்ல என்று வாதிடும் மதியற்ற கூட்டம்தான் பெருகியிருக்கிறது. பரிசுத்தமில்லாமல் (எபி 12: 14) ஒருவரும் தேவனை தரிசிக்க முடியாது. நம் தேவன் பரிசுத்தமானவர் (1 பேதுரு 1: 15) மது அருந்தும் அதே வாயால் ஆண்டவருடைய பரிசுத்த இரத்தத்தை பானம் பண்ணும் துணிகரமான ஆண்கள் கர்த்தரை எவ்வளவாய் துக்கப்படுத்துகிறார்கள்! நமக்காகத் தன் உயிரையே கொடுத்த நம் ஆண்டவருக்கு நாம் துக்கத்தைக் கொடுக்கலாமா!
   
பெண்கள் கர்த்தரோடு வாழும் போது பிள்ளைகள் ஒரு நாளில் கண்டிப்பாக தொடப்படுவர். உலகஞானத்தையும், அசுத்தங்களையும் கற்றுத்தரும் தாய்மார்கள் வேதத்தைக் கற்றுத் தரமுன் வரவேண்டும். கடைசி நாட்களில் எப்படியாவது முழங்கால்களை அவருக்கு முன்பாக முடங்க வைப்பார், நாவுகளை அறிக்கை பண்ண வைப்பார். (ஏசா 45:23). அதற்கு முன் நாம் அவரைத் தேடுவது உத்தமமல்லவா! அவர் வலை போடும்போது வரவில்லை என்றால் தூண்டில் போட்டு வாயும் வயிறும் கிழித்து வரவழைத்து விடுவார்.
   
பிள்ளைகள் கர்த்தரை ஏற்றுக் கொண்டு வாழும்போது மட்டுமே அவர்களால் நமக்கு சந்தோஷம் கிடைக்கும். எந்த பள்ளியில் கல்லூரியில் சேர்ப்பது எந்த கோர்ஸ் படிக்க வைப்பது என்று சிந்திப்போமே தவிர ஞாயிறு பள்ளியும், வாலிபக் கூட்;டங்களும் நினைவிற்கு வருவதில்லை. உலகப் பிரகாரமான காரியங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆவிக்குரிய காரியங்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை. நியாயத் தீர்ப்பு ஒன்று உண்டென்பதை அறியாமல் இருப்பது ஏனோ? கடவுள் நீதியுள்ள நியாயாதிபதியாய் திரும்ப வருவார் என்பதை நம்பவில்லையா? அல்லது அலட்சியமா? நாம் கர்த்தருக்குள் வாழ்வோமானால் ஆயிரம் தலைமுறை வரைக்கும் இரக்கம் பாராட்டுவார். அவர் இரக்கத்தைப் பெற வாஞ்சிப்போம்.

“நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான், அவனுக்குப் பிறகு அவன் அவள் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.”


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.