ஆசீர்வாதம் எதற்கு?
சகோ. சாம்சன் பால்
Family Pages Article Image

நீ ஆசீர்வாதமாயிருப்பாய்… ஆதி – 12 : 2

யோசேப்பை தேவன் ஆசீர்வதித்து உயர்த்தினார். அதற்கு ஒரு தேவ நோக்கம் இருந்தது. யோசேப்பிற்கு ஒரு நல்ல நிலையையும் கனத்தையும் கொடுப்பதல்ல தேவனுடைய பிரதான நோக்கம். அவன் ஆசீர்வதிக்கப்பட்டு உயர்த்தப்படுவதின் வாயிலாக அவன் அநேகருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் விளங்கி பலர் வாழ்வதற்கான  ஒரு வழியாக மாறவேண்டும். அதுவே தேவசித்தம். அந்த நோக்கத்தை யோசேப்பு முழுமையாக நிறைவேற்றினான்.

நாம் தேவனுடைய நன்மைகளையும், கிருபைகளையும் பெற்று ஆசீர்வாதமான நிலைகளை அடைய அதிகமாக வாஞ்சிக்கின்றோம். கர்த்தர் நம்முடைய சூழ்நிலைகளைச் சவுகரியமுடையதாக மாற்றி, உயர்ந்த ஆசீர்வாதங்களால் நம்மைத் திருப்தியாக்கும்படி மிகுதியாக வேண்டுதல்களும், விண்ணப்பங்களும் செய்கின்றோம். ஆனால் ஆசீர்வாதங்களுக்காக மிகத் தீவிரமாக ஜெபிக்கும் நாம், நாம் பிறருக்கு ஆசீர்வாதமாயிருக்கும்படி வேண்டுகின்றோமா?

நாம் ஆசீர்வாதம் அடைவது என்பது ஒன்று. நாமே ஆசீர்வாமாயிருப்பது என்பது இன்னொன்று. ஆபிரகாமை அழைத்த தேவன் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று வாக்குரைத்ததோடு, நீ ஆசீர்வாதமாயிருப்பாய் என்றும் வாக்குரைத்தார். யோசேப்பை தேவன் மிகுதியாக ஆசீர்வதித்ததோடு, எகிப்துதேச மக்களுக்கும், கானானிலிருந்து அங்கு போய்க் குடியேறிய எபிரேயர்களுக்கும் அவன் ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்தார்.

தேவன் நம்மை ஆசீர்வதிப்பதே, நாம் பிறருக்கு ஆசீர்வாதமாயிருப்பதற்காகவே. தேவன் நம்மைக் கனி கொடுக்கின்றவர்களாக மாற்றுவதே, அந்த கனிகளால் அநேகர் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே. ஆனால் பல நேரங்களில் தேவ ஆசீர்வாதங்கள் நம்முடைய சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு விடுகிறது. எனவே தேவன் நம்மை அதற்குமேல் ஆசீர்வதிக்க இயலாமல் போகிறது. ஏனென்றால் பிறருக்குக் கொடுக்கின்ற மனோபாவம் உள்ளவர்களுக்கே தேவன் மேலும் மேலும் கொடுப்பாரேயன்றி, தங்களுக்காகவே, வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் கொடுக்க முடியாது. (லூக்-6:38)

நாம் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயனுள்ளவர்களாகவும், பிரயோஜனமுள்ளவர்களாகவும் விளங்குவதற்கேதுவாக, ஆசீர்வாதங்களை வாஞ்சிப்போமானால், அந்த வாஞ்சை தேவனுடைய அங்கீகரிப்பைப் பெறும். மற்றபடி நம்மைச் சுற்றியே நாம் வளங்களைக் காண விரும்புவோமானால், அங்கே தேவனுடைய செயல்பாடுகளைக் காணமுடியாது.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.