அதிகாலை 4 மணி…!
அன்பு ஒளி
Family Pages Article Image

அதிகாலை 4 மணி… திடீரென்று எனக்கு தூக்கம் கலைந்தது. எழுந்து உட்கார்ந்தவுடன் எனது 7 வயது ஒரே மகள் சலோமி க்காக ஜெபிக்க வேண்டும் என்ற பாரம் என் உள்ளத்தில் எழுந்தது. இது எனக்கு ஒரு புதிய அனுபவம்.
   
நான் இரவு 1:30 மணிக்குத் தான் படுத்தேன். அரசாங்கத்திற்கு கம்ப்யூட்டர் புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்த நான் மிகப்பிந்தி, அதிகாலை 1:30 மணிக்குத்தான் படுக்கைக்குச் சென்றேன். படுத்த நான் 4 மணிக்கு எழும்பினதை என்னால் நம்ப முடியவில்லை. ஆகவே, தூக்கம் கலைந்தவுடன், எனக்கு ஒன்றும் செய்ய ஓடவில்லை. மகளுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற இந்த பாரம், என்னை இன்னும் அழுத்தியது. என் மகளுக்கு ஏதோ நடக்கப் போகிறது என எண்ண ஆரம்பித்த நான் உடனே முழங்கால் படியிட்டேன்.
   
“என் மகள் சலோமியைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே. என்னையும் என் மனைவியையும் போகையிலும் வருகையிலும் வாகனத்தில் காத்துக் கொள்ளும்..” என்று மாறி மாறி பாதி தூக்கக் கலக்கத்தில் ஜெபித்து தூங்கச் சென்றுவிட்டேன். சுமார் 1.30 மணிநேரம் ஜெபித்திருப்பேன்.
   
இன்னும் எனக்கு தூக்கம் வரவில்லை. மறுபடியும் என் மனைவிக்காக, மகளுக்காக, நான் எழுத வேண்டிய புத்தகத்திற்காக, கல்லூரிக்காக, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் அத்தனையும் என் நினைவிற்கு வந்து கொண்டேயிருந்தது. 5.30 மணி வரைக்கும் அதிக பாரத்துடன் ஜெபித்தேன். இனி நான் தூங்கினால் அன்றாட காரியங்கள் பாதிக்கும் என்பதை எண்ணின நான், எழுந்து வேத புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
    
என் மனைவியும் எழுந்துவிட்டார்கள். “சலோமிக்காக அதிகாலை 4 மணியிலிருந்து ஜெபித்தேன்..” என்று சொன்னபோது என் மனைவியின் முகம் மாறியது. பயப்பட்டதுபோல் இருந்தது. உடன்தானே நாங்கள் இருவரும் பாடல் பாடி, வேதம் வாசித்து குடும்ப ஜெபத்தை நடத்தினோம். 6 மணிக்கு என் மகள் சலோமி எழுந்துவிட்டாள். காலை காபி அருந்திவிட்டு வேதபுத்தகத்தை எடுத்து தனியே வாசிக்க ஆரம்பித்தாள்.
    
எனக்குள்ளே ஓர் பயம் எழுந்தது. “ஏன் தேவன் என்னை என் மகள் சலோமிக்காக எழுந்து ஜெபிக்க வைத்தார்”. என்று எண்ண ஆரம்பித்தேன். மறுபக்கத்தில், தேவன் எதிர்பார்த்த ஜெபத்தை செய்துவிட்டேன் என்ற தைரியம் வந்தது. பயத்தை புறம்பே தள்ளினேன்.. என் அலுவலகத்திற்கு புறப்பட்டேன்.
   
நான் எனது இருசக்கர வாகனத்தில் என் மனைவியையும் மகளையும் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள அவர்கள் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு அதன்பின் என் அலுவலகத்திற்கு செல்வேன். காலையில் 5 கி.மீ. தூரம் கடந்து செல்வது 50 கி.மீ போல பயங்கர நெருக்கடி நேரமாயிருக்கும். என் வீட்டிலிருந்து 3 கி.மீட்டரில் பெரிய 5 பாதை சேரும் சந்திப்பு ஒன்று இருக்கிறது. ஓர் பெரிய சிலை ஒன்றும் உண்டு. அந்த சிலை அருகில் எப்படியாவது அடுத்தடுத்து வாகனங்கள் வந்து கொண்டேயிருக்கும். 20, 25 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாக இருக்கும்.
   
அன்று காலை, சரியாக 8 மணிக்கு நான் சுமார் 45 கி.மீ வேகத்தில் அந்த 5 சந்திப்பு பாதை அருகில் போய்;க் கொண்டிருந்தேன்.  எனக்கு முன்னதாகப் போய்க் கொண்டிருந்த ஓர் டூ வீலர் திடீரென்று திரும்பிவிட்டது. அவ்வளவுதான்.. நான் பிரேக் போட முடியவில்லை.. வண்டி கட்டுப்பாடு இல்லாமல் அவ்வண்டியில் முட்டியது.. நாங்கள் 3 பேருமே கீழே விழுந்தோம். வண்டியின் முன் பகுதி சின்னாபின்னமாகியது. நானும், என் மனைவியும், என் மகளும் பரிதாபமாக கீழே விழுந்து கிடந்தோம். பலர் ஓடி வந்து தூக்கிவிட்டனர்.  என் கையில் அதிக காயம்.. கண்களின் மேல் பகுதியில் நல்ல அடி.  என் கையில் அதிக காயம்.. கண்களின் மேல் பகுதியில் நல்ல அடி.. என் மனைவிக்கும் காயங்கள்.. மகளும் கீழே விழுந்து கிடந்தாள்.
    
ஓடி வந்தவர்கள் உடனடியாய் தற்செயலாய் அவ்விடத்தில் வந்த ஓர் ஆம்புலன்ஸில் ஏற்றி பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள். 3 பேரும் முதலுதவி பெற்றோம். எனக்கு கையிலும், புருவத்தின் அருகிலும் அதிக காயம். நல்ல வீக்கம். என் மனைவிக்கும் தோள்பட்டையில் அதிக காயம்.. ஆனால், எங்கள் வண்டியில் முன்னால் உட்கார்த்திருந்த செல்ல மகள் சலோமிக்கு காயம் எதுவுமே இல்லை. அவளுக்குத்தான் அதிகம் அடிபட்டிருக்க வேண்டும். ஆனால் ஓர் சின்ன காயம் கூட இல்லாதபடி இந்த பெரிய விபத்தில் தேவன் அவளைக் காப்பாற்றினார்.
     
அந்த வண்டிக்கு சுமார் 4000 ரூபாய் செலவு செய்தேன். என்னால் இரண்டு நாட்கள் கல்லூரி செல்ல முடியவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தவுடன் எனக்கு அதிக துக்கம்.. அதிக பாரம்.. ‘ஏன்?’   என்ற கேள்வியும் எழுந்துகொண்டே இருந்தது. ‘இத்தனை பெரிய விபத்திலிருந்து, என் தேவன் எங்களை அழகாய் காப்பாற்றினார்’ என்று எண்ண ஆரம்பித்தபோது என் கேள்விகளெல்லாம் மறைந்து விட்டது.
   
இப்போது தேவன் என்னை ஏன் அன்று காலை 4 மணிக்கு எழுப்பி ஜெபிக்க வைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். தேவன் என்னை எழுப்பி என் மகளுக்காய் ஜெபிக்க வைத்தபொழுது நான் கீழ்ப்படிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக என் மகளுக்காக ஜெபித்திருக்காவிட்டால்..? நேற்று இரவு 1.30 மணிக்குத்தானே படுத்தேன் என்று எண்ணி தூங்கச் சென்றிருந்தால்..? இதை எண்ணிப் பார்க்க, எண்ணிப் பார்க்க என் உடம்பெல்லாம் சிலிர்த்தது.
   
அன்பு பெற்றோரே!   உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் அடிக்கடி ஜெபிக்க வேண்டுமே.. நடு இரவு தேவன் எழுப்பி ஜெபிக்க பாரம் தந்தால் தூங்கிவிட வேண்டாம். தகப்பனாரே! முந்தின இரவு நீங்கள் அதிக அசதியோடு தூங்கச் சென்றிருந்தாலும் தேவன் தூக்கத்தைக் கலைத்து ஜெபிக்க பாரம் கொடுத்தால், உடனே எழுந்திருந்து முகத்தைக் கழுவி தங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிக்க மறவாதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் 2 பேரும் வாரத்தில் ஒரு நாள் உபவாசித்து ஜெபிக்க வேண்டும்.. அவர்கள் படிப்பு.. பரிசுத்த வாழ்க்கை.. வேலை.. விசேஷமாய் திருமணத்திற்காக... போராட ஜெபிக்க வேண்டும். தேவன் உங்களை ஜெபிக்க வைக்க வர்ழ்த்துகிறேன்.
  
“எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; : ஆண்டவரின் சமூகத்தில் உன் இருதயத்தை தண்ணீரைப் போல ஊற்றிவிடு.. உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.” (புலம்பல் 2:19)

திரு. பால் கிருபாராஜ்.எம்.சி.ஏ.


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'