மனப்பாடம் செய்ததை மறந்து விடுகிறேன் என்ற சொல்பவர்களுக்கு ஆலோசனையாக எழுதப்பட்ட சற்று வேடிக்கையான ஓர் உதாரணத்தை ஒரு புத்தகத்தில் வாசித்தேன்.
"காய்கறி வாங்கும் பிளாஸ்டிக் பை" ஒன்றை எடுத்துக் கொண்டு சிறுவன் ஒருவன் தண்ணீர் ஓடும் வாய்க்காலுக்குச் சென்றான். அந்தப் பையில் தண்ணீர் எடுக்க முயற்சித்துப் பல முறை தண்ணீரில் முக்கி எடுத்தான். தண்ணீர் வரவில்லை. தண்ணீர் தங்காது என்பது தெரிந்த உண்மையே. தண்ணீரை அந்தப் பையில் எடுக்க முடியாவிட்டாலும், மிகவும் அழுக்காக இருந்த அந்தப் பை முற்றிலும் சுத்தமாக மாறி விட்டது. அதைப்போல பலமுறை வேத வசனங்களை, மனப்பாடமாகப் படித்தும் அதை மறந்து விடலாம். மனதில் தங்காமல் இருக்கலாம். ஆனால் வேத வசனத்தினால் மனம் சுத்தமடையும்.
நீங்கள் வேத வசனங்களை மனப்பாடம் செய்யும் முயற்சியில் சோர்ந்து போகாதீர்கள். மனதில் பதியும் அளவிற்கு வசனங்களை படித்துப் பாருங்கள். அப்படியும் மறந்துவிட்டால் சோர்ந்து போகாதீர்கள்.
திடீரென்று ஏதோ ஒரு தேவை வரும்போது ஆவியானவர் அந்த வசனத்தை உங்களுக்கு நினைவூட்டுவார். ஆண்டவருடைய வசனத்தினால் என்றென்றைக்கும் பலன் உண்டு. வேத வசனங்களை, பகுதிகளை நினைவில் நிறுத்திக் கொள்ள "ஆண்டவரே கிருபை தாரும்" என்று அனுதினமும் ஜெபியுங்கள்.
மனப்பாடம் செய்வதில் முக்கிய படி (Recall) நினைவூட்டிப் பார்த்தல் ஆகும். நினைவூட்டிப் பார்க்கும் போது ஒன்றும் வராதது போல் தோன்றலாம். அந்தச் சமயத்தில் மீண்டுமாக (Review) அதாவது எடுத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு வசனத்தை மனப்பாடம் செய்யும் போது,வசனத்தின் வாக்கிய அமைப்புகளை, முக்கியமான வார்த்தைகளை முதலாவது மனதில் பதித்துக் கொண்டு, பின்னர் வசனம் முழுவதையும் மனப்பாடம் செய்யாலாம்.
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் - யோவான் 14:26