சிறிய பெட்டிக்கடை
அன்பு ஒளி
Family Pages Article Image

என் பெயர் ஜெயராவ். 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர் அருகில், கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன். நான் படித்தது, மிஷனரிகள் ஸ்தாபித்த பள்ளிக்கூடம் ஒன்றில். அந்தப் பள்ளியில், படித்தபோது இயேசுக் கிறிஸ்துவைக் குறித்த அறிவும், அனுபவமும் எனக்கு சொத்தாக அமைந்தது. வயது கூடக் கூட என் விசுவாசமும் வளர்ந்தது.

என் பெற்றோர் 8 ஆம் வகுப்பிற்கு மேல் என்னைப் படிக்க வைக்க முடியாத நிலை. ஒரு சிறிய பெட்டிக்கடையை எங்கள் கிராமத்தில் என் தகப்பனார் ஆரம்பித்துத் தந்தார். அந்தப் பெட்டிக்கடை ஆரம்பிக்கிற நாளில், நாங்கள் ஞாயிறுதோறும் செல்லும் ஆலயத்தின் போதகரை அழைத்தோம். எங்கள் குடும்பத்தினரும் வந்திருந்தனர். ஆவர் வேதத்திலிருந்து சில வசனங்களை வாசித்து, ஜெபித்து, ஆலோசனை சொல்லி கடையை ஆசீர்வதித்தார். அவர் ஜெபித்தபோது, அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. முடிவில் தேம்பித்தேம்பி அழுதார். என் பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் ஓர் ஊழியர் இப்படித் தேம்பி அழுது ஜெபித்தது ஒரு புதிய அனுபவமே.

கடை திறந்து சில நாட்கள் ஆயிற்று. ஒரு நாள் எனக்குள்ளே ஓர் எண்ணம்: “நான் காலை 4 மணிக்கு எழுந்து, என் கடைக்காக ஜெபிக்க வேண்டும்” என்று எண்ணினேன். என்னுடைய சிறிய கடிகாரத்தில் காலை 4 மணிக்கு அலாரம் வைத்தேன். காலை அலாரம் அடித்தபோது என்னால் என் படுக்கையை விட்டு எழும்ப இஷ்டமில்லை. “என் கடைக்காக ஜெபிக்க வேண்டும்” என்ற வைராக்கியம் என்னை படுக்கையை விட்டு எழும்ப வைத்தது. முகத்தைக் கழுவி, என்னுடைய சிறிய அறைக்குள் முழங்கால்படியிட்டு, பாடல்களைப் பாடினேன். கடைப் பையன் விழித்துக் கொண்டு, விளக்கைப் போட்டு பார்த்துவிட்டு அப்படியே தூங்கி விட்டான். சுமார் ஒரு மணி நேரம் கடையின் வளர்ச்சிக்காக தேவனைத் தேட ஆரம்பித்தேன். அன்று என்னுடைய கடையில் நல்ல விற்பனை. வேலைக்கு இருக்கிற பையனும் மகிழ்ச்சியோடு அதிக உதவி செய்தான்.

மறுநாளிலிருந்து, தினமும் 4 மணிக்கு என்கூட என் கடைப்பையன் எழுந்து ஜெபிக்க  ஆரம்பித்தான். ஒரு மணி நேரம் வேதம் வாசித்த பின்பே, என் கடையைத் திறப்பேன். ஆட்கள் முதலில் வந்திருந்தாலும், சில நிமிடங்கள், அந்நாள் விற்பனைக்காக ஜெபித்தே திறப்போம். சிலருக்கு இக்காட்சி ஆச்சரியமாக இருந்தது.

‘ஞாயிற்றுக்கிழமை, எக்காரணத்தைக் கொண்டும் கடையைத் திறக்கக் கூடாது’ என்று, திறப்பின் நாளில் ஜெபித்த போதகர் சொன்னது அடிக்கடி ஞாபகத்திற்கு வந்தது. எங்கள் ஊரில், சனிக்கிழமைதான் சம்பள நாள். ஆகவே, எல்லாக் கடைகளிலும் ஞாயிற்றுக் கிழமை  நான்கு மடங்கு விற்பனையாகும். இது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட நான் திறக்கக் கூடாது என்ற பொருத்தனையை செய்து இருந்தேன்.

நான் என் கடையை ஞாயிற்றுக் கிழமை திறக்காததைக் கண்ட பலர், துவக்க நாட்களில் என்னைக் கடிந்து கொண்டனர். ஆனால், நான் தேவன் எனக்குக் கற்றுத் தந்த முறையில் தைரியமாக செயல்பட ஆரம்பித்தேன்.

என் கடையில் முதல் தரமான பொருட்களை வாங்கி வைத்தேன். கலப்படத்தை மறந்து கூட வைக்கவில்லை. சரியாக 10 சதம் லாபம் வைத்தேன். முதல் தடவை என் கடைக்கு வந்தவர்கள், அடுத்தும் என் கடைக்கே வந்தார்கள். வெகு விரைவில், என் கடைக்கு இரண்டாவது உதவியாளரை தேவன் தந்தார்.

ஞாயிற்றுக்கிழமை, என் கடை பூட்டப்பட்டதால், பலர் மற்ற கடையில் வாங்காமல் காத்திருந்து, திங்கட்கிழமை ஆவலோடு வந்தனர். என் கடைக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை திங்கள் கிழமை சுமார் 5 மடங்கு ஆயிற்று.

என் வருமானத்தை, வாரந்தோறும் கணக்கிட்டு துவக்கத்தில் என்  சபை ஊழியங்களுக்கு 10 சதவீதம் கொடுக்க ஆரம்பித்தேன். தேவன் போட்டிபோட்டுக் கொண்டு என்னை ஆசீர்வதித்ததைக் கண்டு கொண்டேன். இன்று எனக்கு அந்த ஊரில் 4 கடைகள்! 20 உதவியாளர்கள்!. நான் இன்று தேவனுக்கு கொடுப்பது சுமார் 40 சதவீதம். எனக்கு தேவனை அதிகம் நேசிக்கும் மனைவியும் 3 பிள்ளைகளும் உண்டு.

அன்பான வியாபார நண்பரே! தாங்கள் ஞாயிற்றுக் கிழமை கடையைத் திறந்து வியாபாரம் நடத்துகின்றீர்களோ? தாங்கள் கரத்தின் வழியாகச் செல்கிற அத்தனை பொருட்களும், முதல் தரமானதா? அல்லது கலப்படமா? குறைந்த அளவு லாபம் வைத்து நிறைவாக சம்பாதியுங்கள். உண்மை உள்ளவர்களாக இருங்கள். தங்கள் வியாபாரத்திற்காகக் குடும்பமாகவும் ஜெபிக்கும் பழக்கம் உண்டா? பொய்யைத் தவிர்த்து, நூற்றுக்கு நூறு உண்மை சொல்லி, தங்கள் வியாபாரத்தைச் செய்யுங்கள். தேவன் தங்கள் வியாபாரப் பங்குதாரராக மாற, பத்தில் ஒன்றைக் கொடுக்கும் அனுபவம் உண்டோ? தேவன் தங்களை இன்னும் ஆசீர்வதிக்க, கொடுக்கும் பங்கை இன்னும் கூட்டலாமே! இன்று என் கடைகளின் மூலமாக 7 மிஷனரிகளுக்கான பணத்தைத் தந்து வருகிறேன்.

8 ஆம் வகுப்பு மாத்திரம் படித்த நான், சாராரண பெட்டிக்கடையை ஆரம்பித்து, இன்று பல தடவை வேத புத்தகத்தை வாசித்து முடித்திருக்கிறேன். வியாபாரத்தில் இதுவரை பொய் சொன்னதே இல்லை அரசாங்க வரிகளையும் சரியாகக் கட்டி வருகிறேன். என் கடை இராஜாதி இராஜாவுடைய கடை. உங்கள் கையின் பிரயாசங்களைத் தேவன் ஆசீர்வதிப்பாரே. அதன் இரகசியமே வேத வசனத்திற்கு நடுங்குவதே.

“…சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்.” (ஏசாயா 66:2)


திரு. ஜெயராவ், குண்டூர்.


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'