சினேகம்
திருமதி ஜேசுபாதம்
Family Pages Article Image

என் வீட்டருகில் இருக்கும் ஒரு பெண் யாருடனும் பழக மாட்டாள்,  அவள் உறவினர் அனேகர் சென்னையிலேயே இருந்தாலும் யாருடனும் பேசக்கூடமாட்டாள்.  என் வேலைக்காரம்மாதான் அங்கும் வேலை செய்கிறாள்.

நான் ஒரு தடவை அவளைப் பார்த்து சிரித்தபோது பார்க்காத மாதிரி போய்விட்டாள்.  எனக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது.  என் வேலைக்காரம்மா ஏதாவது அவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  ஒரு நாள் அவர்கள் தொலைப்பேசி வேலை செய்யவில்லை என்று சொன்னாள்.

அடுத்த நாள் வேலைக்காரம்மா வேகமாக ஓடி வந்து,

"அம்மா! கீழ தண்ணி கொட்டிக் கிடந்தத கவனிக்காம வேகமா வந்ததுல பின்பக்கமா விழுந்து தலையில் அடிபட்டிருச்சி.  பின்னால இருந்த பெஞ்சோட ஓரம் வெட்டி ரத்தம் போகுது.  எனக்கு பயமாயிருக்குமா.  போய் ஏதாவது செய்யுங்க" என்று கூறியதும்.  போய் ஆட்டோ கூட்டி வரச் சொல்லிவிட்டு உடனே அங்கு சென்று தலையில் கட்டுபோட்டு இரத்தத்தை நிறுத்த முயன்றேன்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு ஆட்டோவில் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கூட்டிக் சென்றேன்.  ஆழமாக வெட்டியிருப்பதால் தையல் போட வேண்டும் என்று சொன்னார்கள்.  அதற்குள் அவள் கணவனின் போன் நம்பரை வாங்கி போன்பண்ணிச் சொன்னேன்.  தையல் போட்டதும் அவள் கணவர் வந்தார்.  மூவரும் வீடு திரும்பியபின் அவளுக்குத் தேவையானதைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு. இரவு உணவும் கொடுத்து,

"பயப்படாதே நிம்மதியா தூங்கும்.  உனக்காக ஜெபம் பண்ணிக்கிறேன்"  என்றேன், அப்போது தான் அவள் அண்ணனும். அண்ணியும் வந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் பார்க்கப்போனபோது என்னை ஆசையோடு வரவேற்றாள்.

"நீங்க நேத்து செஞ்சதுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நான் உங்ககூட பேசினது கூட கிடையாது.  நேத்து என் போன் வேலை செஞ்சிருந்தா உங்க நட்பு கிடைத்திருக்காது.  எல்லாம் கடவுள் செயல்" என்று சொல்லி என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள்,  அவள் கணவன் வெளியூர் சென்றுவிட்டதாகவும். அண்ணன், அண்ணி காலையில் வேலைக்குச் சென்றதாகவும் கூறினாள்.   அண்ணி சமைத்து வைத்துவிட்டுப் போனதாகச் சொன்னாள்.

பைபிளில் உள்ள கருத்துக்கள் சிலவற்றை அவளுடன் பகிர்த்துக் கொண்டேன்.  குறிப்பாக தூரத்திலிருக்கும் உறவினர்களை விட அருகிலிருக்கும் நண்பர்கள் சிறந்தவர்கள் என்று கூறினேன்.  பைபிளில் அதைப்பற்றிக் கூறியிருப்பதைக் காட்டினேன்.  சில சத்தியங்களைப் பற்றிக் கூறினேன்.  கருத்தாய் கேட்டதோடு அதை மனப்பூர்வமாய் ஏற்றும் கொண்டாள்.

நீதி 27-10 தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.