ஒரே ஒரு நாள் மட்டும்
Shalom Family Enrichment Ministries
Family Pages Article Image

எம்.இ. படித்து முடித்தவுடன் எங்கள் ஆலயத்தில் எனக்கு எத்தனை பாராட்டுக்கள்.. திருவனந்தபுரத்தில் உள்ள ஓர் அரசாங்க பொறியியல் கல்லூரியில் வேலையும் உடனே கிடைத்தது.. எனக்கு ஒரு தங்கை.. ஒரு அக்கா..

என் தகப்பனார் அரசாங்க கல்லூரி ஒன்றில் முதல்வராயிருந்து ஓய்வு பெற்றவர். பணியில் இருக்கும்போதே என் அக்காவை எம்.பி.பி.எஸ் முடிக்க வைத்தார். House Surgeon கோர்ஸ் முடித்தவுடன் தானே, சிறப்பாக என் அக்காவின் திருமணத்தை என் பெற்றோர் ஒழுங்கு பண்ணி முடித்தார்கள்.பல இலட்சங்கள் செலவு.. கார் வாங்கிக் கொடுத்தோம். வீடும் எழுதிக் கொடுத்தனர் என் பெற்றோர்.

என் அக்காவின் கணவரும் ஓர் மருத்துவரே. சென்னையில் இரண்டு பேருமே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

நான் வேலையில் சேர்ந்தவுடன் எனக்கு பெண் கொடுக்க போட்டிகள் பல.. சவரன் 150 என்றும் கையில் பல லட்சம் என்றும் பேச ஆரம்பித்தபோது.. எனக்கு ஒரே கிலுகிலுப்பு.

கடைசியில் பி.இ. படித்த சுஜாதாவை ஒழுங்கு பண்ண திட்டமிட்டனர் என் பெற்றோர். பெண்ணை நேரடியாகப்  பார்த்து உறுதி செய்ய அவர்கள் வீட்டிற்கே போயிருந்தபோது, சுஜாதா வித்தியாசமாகத் தோற்றமளித்தாள். ஜீன்ஸ் பாண்ட், டி ஷர்ட். என்னை அக்காட்சி அதிகம் பயப்படுத்தியது. மிகவும் ஹை பை ஸ்டைல்.. எனக்கு பிடிக்கவேயில்லை.

அதற்குள் என் தகப்பனார் பேரம் பேச ஆரம்பித்து விட்டார். மெதுவாக என் தாயாரை வெளியே அழைத்து "எனக்கு பிடிக்கவில்லை" என்றேன்.

அவர்கள் "நல்ல வீடு.. சும்மாயிரு" என்று சொல்லி உள்ளே சென்று விட்டனர்.

தேதி.. வரதட்சனை.. கார்.. பங்களா என பேசி முடித்தே விட்டனர். நானோ பித்து பிடித்தவன் போல அமைதியாக இருந்து விட்டேன்.. 2 மணி நேரத்தில் வீடு திரும்பினோம்.

வரும் வழியில் என் அப்பா, அம்மா, அக்கா, அக்கா கணவர், என் தங்கை ஓர் டாட்டா குவாலிஸ் காரிலும் மற்றும் உறவினர்கள் மற்றொரு மினி பஸ்ஸிலும் ஆக 2 வண்டிகளில் திரும்பினோம்.

மறுபடியும் என் பெற்றோர், அக்கா, தங்கை இவர்களிடம் "எனக்கு பிடிக்கவில்லை" என்று காரில் வரும்போது சொன்னேன்.

"நீ சும்ம இருடா.. எஞ்சினியர் பிள்ளை.. மாடர்ன் கேர்ல்.. வசதியான குடும்பம்.. ஒரே ஒரு பிள்ளை.. அத்தனை சொத்தும் உனக்குத்தான்.. " என்றார் என் தகப்ப்பனார்.

என் அப்பாவிடம் எப்போதும் எனக்கு பயம் தான்.
என் வாயை மூடிவிட்டனர்.
திருமண நாள் வந்தது.
எங்கள் ஊரிலேயே இப்படி ஒரு திருமண ஒழுங்கு நடந்திருக்குமா என எண்ண ஆரம்பித்தேஎன்.

திருமணத்திற்கு 3 நாளைக்கு முன்னே.. புத்தம் புதிய கார் "ஹோண்டா சிடி" வந்து நின்றது.
ஆனால் எனக்குள்ளே ஏதோ ஒருவித பயம்
திருமண நாளில் ஒரே தடபுடல்
சுமார் 2000 பேர் வந்திருப்பர்..
பெண் வீட்டார் "ஒரே மகள்"என்பதினால் பணத்தை தண்ணீரைப் போல் இறைத்து செலவு செய்தனர்...
எங்கள் ஊரில் காலை வேளையில் திருமணம்..

ஆலய ஆராதனை முடிந்ததே காலை 10:30 மணிக்கு
தொடர்ந்து வரவேற்பு
அது முடியவே மதியம் 2:00 மணி ஆயிற்று
சிறு ஓய்வு எடுத்தோம்.

சுஜாதாவை எங்கள் வீட்டிற்கு அன்று இரவு அழைத்து வந்தனர். மறக்க முடியாத எதிர்ப்பார்ப்பின் நாள்..
இரவில் நடந்த நிகழ்ச்சியை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. என் உள்ளம் சுக்கு நூறாகியது.

"ஏன் நான் கலியாணம் கட்டினேன்" என்ற உடைந்த உள்ளத்தோடு காலை 6 மணிக்கே என் பெற்றோரை வேகமாக எழுப்பினேன்..

"என் வாழ்க்கையே போய்விட்டதே அப்பா" என்று அலறிவிட்டேன்.

நடந்த மீதி விபரங்களை எனக்கு சொல்ல இஷ்டமில்லை. பித்து பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். 2வது நாளே எம்.இ. படிக்க கோயம்பத்தூருக்கு அவளை அவள் பெற்றோர் அனுப்பி விட்டனர்.

2 ஆண்டுகள் அவளைப் பார்க்க நான் செல்லவே இல்லை. போனில் பேசவும் இஷ்டம் இல்லை. இப்போது  நானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

என் அட்வகேட் கொடுத்துள்ள காரணம்.
"சுஜாதா வாழத் தகுதியற்றவள். மன நிலை பாதிக்கப்பட்டவள். என் மண வாழ்வு ஒரே ஒரு நாள் மட்டும்...
என் கதை எப்படி முடியப் போகிறதோ...?
எந்த வாலிபனுக்கும் இப்படி நடந்து விடக்கூடாதே...

உடைந்த உள்ளத்துடன் : மனோஜ் எம்.இ.


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.