ஏசுவையே துதிசெய்
Bro.A.Stanley Chellappa
Family Pages Article Image

ஏசுவையே துதிசெய் நீ, மனமே,
ஏசுவையே துதிசெய், - கிறிஸ்தேசுவையே.

சரணங்கள்

1. மாசணுகாத பராபர வஸ்து
 நேச குமாரன் மெய்யான கிறிஸ்து.
 - ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
 சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்.
- ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவுமுகிக்க
 மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க.
- ஏசுவையே
……

“எமனுக்குப் படிப்பு வந்தாலும்
இவனுக்குப் படிப்பு வராது!”
 
தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் இப்படிக் காட்டிக் கடிந்து கொண்டார். அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றான். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார். ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ், “அழாதே ! பராபரன் உன்னை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவார்.” எனத் தேற்றினார்.

சுவார்ட்ஸ் ஐயரின் இந்த ஆறுதல் ஆசியை, சிறுவன் வேதநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தனது 12-வது வயதிலேயே கவிஞனானான். பத்தொன்பதாம் வயதில் தலைமை ஆசிரியரானான். பின்னர் தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றான்!.

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், 1774-ம் ஆண்டு செப்டெம்பர் ஏழாம் தேதி பிறந்தார். தனது 12-வது வயதில் சுவார்ட்ஸ் ஐயரின் வழிநடத்துதலால், இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதுமுதல், அவர் தனது 90-வது வயதில் மரிக்கும்வரை, ஆண்டவர் தனக்குத் தந்த தமிழ்ப் புலமையைக் கொண்டு அவரைத் துதித்து, பல பாடல்களையும், நூல்களையும், பண்ணெடுத்துப் பாடினார். தஞ்சையை அந்நாட்களில் ஆண்டுவந்த சரபோஜி மன்னன், அவரது சிறுவயது நண்பரானார். அவர் சாஸ்திரியாரின் புலமையைப் பாராட்டித் தன் அரசவைக் கவிஞராக வைத்துக் கொண்டார். அவருக்கு மானியமும் வழங்கினார்.

“குற்றாலக்  குறவஞ்சி,” என்ற நாடகத்தின் அடிப்படையில் வேதநாயக சாஸ்திரியார், “பெத்லெகேம் குறவஞ்சி” என்ற பாடல் நூலைத் தனது 25-வது வயதிலேயே எழுதி, இயேசு தெய்வத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். இப்பாடல் நூலைத் தன் நண்பன் சரபோஜி மன்னனிடம் பாடிக் காட்டினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்தார்.

பின்னர் 1820-ம் ஆண்டு சரபோஜி, மன்னனாக முடிசூட்டப்பட்டபோது, சாஸ்திரியார் அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க, சாஸ்திரியாரை வேண்டினான். இதை எதிர்பாராத சாஸ்திரியார் திடுக்கிட்டார். ஏனெனில், அவர் இயேசு ஒருவரையன்றி, வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை. தன் பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாகத் தன் நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழுநூலைப் பாடாவிட்டாலும், ஒரு பல்லவி போன்ற, காப்புச் செய்யுளையாவது, வினாயகர் மீது பாடிக்கொடுக்க வற்புறுத்தினான்.

வேதநாயக சாஸ்திரியாருக்கு மிகவும் இக்கட்டான நிலை. தன்னை மிகவும் மதித்து, ஆதரவளித்துவரும் அரசனின் வேண்டுகோள் ஒருபுறம், ஆனால் மற்றொருபுறம், தன்னையே தியாகம் செய்து, அவரைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்த அன்பர் இயேசு ஒருவருக்கே செலுத்த வேண்டிய புகழ் ஆராதனை.

மிகுந்த மனப் போராட்டத்துடன், சாஸ்திரியார் தன் வீடு திரும்பினார். வேதனையோடு தனது தர்ம சங்கடமான நிலையை மனைவியிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார். “ஆண்டவரைப் பாடும் வாயால், இப்படியும் ஒன்றைப் பாடப் போகிறீர்களா? ” என்று கவலையுடன் அவர் மனைவி வினவினார். ஆனால், சாஸ்திரியாரின் உள்ளமோ, ஒரே தெய்வமாகிய, நிகரற்ற இறைவன் இயேசுவின் மீதுள்ள பக்தி வைராக்கியத்தால் பொங்கிப் பாடலாக வழிந்தது. அதுவே இப்பாடலாகும்.

பின்னர், சரபோஜி மன்னரிடம் சென்று, இப்பாடலைப் பாடினார். இறைப்பணியைக் கட்டுப்படுத்தும் பரிசில்களில், தனக்கு நாட்டமில்லை என்பதையும், ஆணித்தரமாகக்  கூறினார். இப்பாடலையும் கேட்டு மகிழ்ந்த அரசன், இறைவன் இயேசுவின் மீது வேதநாயகம் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசப் பற்றைப் பெரிதும் பாராட்டினான். “உம் தெய்வத்தைப் பற்றி நீர் எங்கும் தடையின்றி எடுத்துக் கூற, என் அனுமதி உமக்குண்டு”. என்று கூறினான். 

வேதநாயக சாஸ்திரியார் படைத்த,
“மனுவுருவானவனைத் தோத்தரிக்கிறேன்-மோட்ச
வாசலைத் திறந்தவனைத் தோத்தரிக்கிறேன்;;
கனிவினைத் தீர்த்தவைனத் தோத்தரிக்கிறேன்-
யூதக் காவலனை ஆவலுடன் தோத்தரிக்கிறேன்;
வேறு எவரையும் தோத்தரியேன்.”

என்ற மற்றொரு கவியிலும், அவரது சிறந்த பக்தி வைராக்கியம் தெளிவாக விளங்குகின்றதல்லவா? தென்னிந்தியத் திருச்சபைகளில் பொதுவாக உபயோகிக்கப்படும், தமிழ்க் கீர்த்தனைப் பாடல் புத்தகத்தில், அதிகமான பாடல்கள், வேதநாயக சாஸ்திரியாரால் எழுதப்பட்டவை, என்பது குறிப்பிடத்தக்கது.


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com