உதவிக்கரம் நீட்டிய உத்தமி
திருமதி ஜேசுபாதம்
Family Pages Article Image

ரெபேக்காள் (ஆதி 24:15-20)

ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிற்கு பெண் கொள்ளும்படி தன் ஊழியக்காரனான எலியேசரிடம் தன்னுடைய தேசத்தில் பெண் பார்த்து அழைத்து வரும்படி கூறினான். எலியேசர் கர்த்தரிடம் ஒரு விண்ணப்பம் பண்ணினான். குடிக்கத் தண்ணீர் கொடுக்கும்படி கேட்கும்போது தனக்கு மட்டுமல்ல தன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கும் பெண்தான் ஈசாக்கிற்கு நியமிக்கப்பட்டவள் என அறிந்து கொள்வேன் என்று ஜெபித்தான்.  அதன்படி ரெபேக்காள் குடத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். ஊழியக்காரன் தண்ணீர் கேட்டபோது அவனுக்கு மட்டுமல்ல அவன் கேட்காமலேயே அவன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள்.

இரவில் தனக்கு தண்ணீர் எடுக்க வந்தவள் அந்நியன் ஒருவனுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. அவனுக்கு மட்டும் தண்ணீர் கொடுக்கவில்லை. ஓட்டகங்களுக்கெல்லாம் தண்ணீர் வார்த்தாள்.  காரணம்  அவளுக்கு இருந்த உதவும் குணம்.

இன்று தாகத்திற்குத் தா என்றால் முகத்தைத் திருப்பிக் கொள்வதும்? காதில் விழாத மாதிரி செல்வதும் இல்லை என்று சொல்வதும் சகஜம். உபசரித்தல் என்பது பெண்களுக்குரிய சிறப்பியல்புகளுள் ஒன்று. காகம் கூட தான் மட்டும் தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து சேர்ந்துண்ணும். தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து சேர்ந்துண்ணும்.  தோயோகிக்கோ ககாவா என்ற கொரிய ஊழியக்காரர் தன் புஸ்தகத்தில் “அறை வீட்டிற்குள் ஜெபிக்கும்போது வெளியே பிச்சைக்காரர் பிச்சைக் கேட்டு நிற்கும் போது ஒன்றுமில்லை என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு ஜெபித்துக் கொண்டிருந்தால் அந்த ஜெபம் கேட்கப்படாது” என்கிறார்.

சில பெண்கள் தன் வீட்டாரை மட்டும் நன்றாக உபசரித்து விட்டு கணவன் வீட்டாரை சரிவர கவனிப்பதில்லை. கிரியையில்லாத விசுவாசம் செத்தது. நம் கிரியைகளில் கிறிஸ்துவைத்தான் பிரதிபலிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின்  உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவரும் பசிக்கிறதென்று அவரிடம் சொல்லவில்லை. அதிக நேரமாகச் சாப்பிடாமல் இருக்கிறார்களே என்று அவராகவேதான் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு போஷித்தார்.

ஆபிரகாமும் தேவதூதர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே சாப்பிடும்படி வருந்தி கேட்டு உணவளித்து ஆசீர்வாதங்களைப் பெற்று கொண்டான்.  சிலர் உபசரிக்கும்போது சில சமயம் அறியாமல் தேவ தூதர்களையும் உபசரித்ததுண்டு (எபி. 13:2)

இக்காலத்தில் நாகரீகம் என்ற பெயரில் வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு உணவளிக்காமல் பேசி சிரித்தே அனுப்பி விடுவது வழக்கமாக உள்ளது.  கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. ரெபேக்காளின் ஈகை குணத்தால் பொறுமைசாலியான, பக்தியுள்ள நல்ல கணவனை அடைய முடிந்தது.  அவளது ஈகை குணத்தால் கர்த்தர் அவளுக்கு கொடுத்த ஆசீர்வாதம் அது. வாரியிறைத்து (அளவுடனும், ஞானத்துடனும்) விருத்தியடைவார்களே ஒழிய தரித்திரர் ஆக மாட்டார்கள், கொடுப்பது வேறு கொட்டுவது வேறு.  கொட்டுவதால் தரித்திரர் ஆவார்கள். ஆனால் கொடுப்பதால் ஆசீர்வாதமுண்டாகும்.

மாதாமாதம் புடவை, நகை என்று வாங்கும் பெண்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கூட நல்ல புடவை கொடுக்க மாட்டார்கள். நகை வாங்கி வாங்கி தங்களுக்குச் சேர்த்து வைப்பார்களே ஒழிய, தாலி வாங்கக் கூட முடியாமல் திருமணம் நின்று போகும் பெண்களின் அவலநிலை கண்ணிற்குத் தெரிவதில்லை. தன்  உயிரைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாமல் நமக்காக தம்மைத் தந்த தேவனை வணங்குபவர்கள் நாம். புதுப் புடவை வாங்கும்போது பழைய புடவை ஒன்றை எடுத்து ஓர் ஏழைக்கு கொடுக்க வேண்டும். பீரோவில் வைக்க இடம் போதவில்லை என்று புது பீரோ வாங்குவது பெண்ணிற்கழகல்ல. ஒரு பெண்ணின் உபசரிக்கும் குணத்தைக் கொண்டே அவள் குடும்பத்தை எடை போட்டுவிடலாம்.
 
சிலர் தங்களுக்கு விதம் விதமாக சமைத்துக் கொள்வர், ஆனால் விருந்தினருக்கு சாதாரணமாக சமைத்துக் கொடுப்பர். சிலர் இரண்டு அல்லது மூன்று பேருக்குதான் சமைக்கத் தெரியும் இரண்டுபேர் அதிகமாக வந்தால் கூட சமைக்கத் தெரியாது என தட்டிக் கழித்து விடுவார்கள், சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்ட வேண்டும் (நீதி 31: 20).


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.