ஆத்திரம் வேண்டாம்
சகோ. சாம்சன் பால்
Family Pages Article Image

இவன் தச்சன் அல்லவா? -  மாற்கு – 6:3
   
புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு இளைஞனிடம் ஒரு சிறு பிழையைக் காண நேரிட்ட உயர் அதிகாரி அவனை “நீ எதற்கும் லாயக்கில்லாத ஒரு அறிவு கெட்ட முட்டாள்” என்று கோபமாகத் திட்டினார். அதைக் கேட்ட மாத்திரத்தில் அந்த இளைஞனுக்கு ஆத்திரம்  வந்தது. உடனே இந்த வேலையை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனாலும் அவன் சற்று யோசித்தான். நான் எதற்கும் லாயக்கில்லாத ஒரு அறிவு கெட்ட முட்டாள் என்ற இந்த அதிகாரியின் கருத்தைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று சூளுரைத்துச் செயல்பட்டான். மிகச் சிறப்பாக செயல்பட்டதின் விளைவாக விரைவில் அதே இடத்தில் பலர் புகழும் விதமான ஒரு உயர்ந்த நிலையை அவன் அடைந்தான்.
      
இந்த உலகத்தில் மிகப்பெரிய சாதனையாளர்கள் பலர் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்று எண்ணப்பட்டவர்களே. பள்ளிக் கூடத்தில் படிப்பதற்குத் தகுதியற்றவராகக் கருதப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆனார். நாம் தவறாக எண்ணப்படும்போதும், குறைவாக மதிப்பிடப்படும் போதும் எரிச்சலடைவது சரியான பதில் அல்ல. அது அவர்களின் கருத்தை அங்கீகரிப்பதாக மாறிவிடும். மற்றவர்களின் கணக்கீடு சரியானது அல்ல என்பதை நம்முடைய அடுத்த கட்ட நல்ல நடவடிக்கைகளினால் நிரூபிக்க வேண்டும்.
    
இயேசு கிறிஸ்து அற்பமாக எண்ணப்பட்டார். அற்பமாக பேசப்பட்டார். ஆனாலும் இயேசு வெகுண்டு எழவில்லை. அதற்குப் பதிலாகத் தம்முடைய மகிமையான வாழ்க்கை முறையினால் தம்மைக் குறித்து மற்றவர்கள் கொண்டிருக்கும் கருத்துகள் தவறானவை என நிரூபித்தார். மற்றவர்கள் வெட்கப்படும்படியாக  அவர் தம்முடைய குணநிலைகளினாலும், செயல்களினாலும் உயர்ந்து நின்று காண்பித்தார்


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.