தேவன் மனிதன் தம்மோடு இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பாவத்தின் காரணமாக தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அறுப்பட்டது. தேவன் மனிதனை அளவு கடந்து நேசித்தபடியால் அந்த உறவை சரிப்படுத்த அவனோடு உடன்படிகை செய்தார். இந்த உடன்படிக்கையின் செய்தியை பரிசுத்த வேதாகம் முழுவதும் நாம் படிக்க முடியும். பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் காலத்திற்கு முன்னர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
குறிப்பாக தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏன் இஸ்ரவேல் மக்களை மட்டும் தேவன் தெரிந்து கொண்டார்? என்று பலரும் கேட்கிறார்கள். இது ஒரு தெய்வீக இரகசியம் ஆகும்.
பழைய ஏற்பாட்டின் செய்தி ஒரு மாதிரியாகவும்(Type) நிழலாகவும் ( Shadow) தான் உள்ளது. பரிசுத்த வேதாகமத்தின் முழு உபயோகத்திற்கும் பழைய ஏற்பாட்டின் செய்தி ஒரு அஸ்திபாரமாக அமைந்திருக்கின்றது. புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு புதிய யுகமே ஆரம்பிக்கிறது. பழைய ஏற்பாட்டின் செய்தி புதிய ஏற்பாட்டில் நிறைவேறுகிறதையும் நிறைவாகிறதையும் நாம் கவனிக்க முடியும். புதிய ஏற்பாட்டின் செய்தியை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் பழைய ஏற்பாட்டின் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.