வேதத்தை ஆராய்வதில் 3 அடிப்படை முறைகள்
Dr. செல்வின்
Reaching out people

வேதத்தை ஆராய்வதில் 3 அடிப்படை முறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

1.உற்று நோக்குதல் (Observation)
2.விளக்கத்தை தெரிந்து கொள்ளுதல் (Interpretation)
3. வேதாகம உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை நடைமுறை வாழ்வில் பின்பற்றுதல் (Application)

அடிப்படை முறைகள்

1.உற்று நோக்குதல்
 
வேதாகமத்தில் ஒரு பகுதியை நாம் படிக்கும் போது கவனத்துடன் பார்க்க, உற்று நோக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். முக்கியமான வார்த்தை எது? ஒரு தடவைக்கு மேல் வருகின்ற வார்த்தை எது? வெவ்வேறு வார்த்தைகளுக்கிடையே உள்ள தொடர்பு என்ன? என்றெல்லாம் கவனிக்க வேண்டும். இதைக் கண்டுபிடிப்பதற்காகப் படிக்கும் பகுதியைப் பலமுறைகள் வாசிக்க வேண்டும். கண்டுபிடிப்பவைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகக் குறித்துக் கொள்ள வேண்டும் கோடிட வேண்டும். குறியீட்டு அடையாளங்களை வரைந்து கொள்ளலாம். கலர் பென்சில்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே பகுதியில் அல்லது வசனத்தில் எத்தனை காரியங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன? என்று கண்டுபிடிக்க வேண்டும்.
மாற்கு 7:21,22   - 13 வகையான பாவங்கள்
கலாத்தியர் 5:22,23   19 ஆவியின் கனி.

ஆகையால், ஆனபடியால் போல என்ற வார்த்தைகள் எங்கெல்லாம் வருகிறது? அதனுடைய காரணம் என்ன? என்று கவனிக்க வேண்டும்.

2.விளக்கத்தை தெரிந்து கொள்ளுதல்

பரிசுத்த வேதாகமம் பொருள் ஆழம் நிறைந்த ஓர் புத்தகமாகும். மனிதருக்கு தேவன் அருளி இருக்கும் செய்தியின் விளக்கத்தைத் தெரிந்து கொள்ளும் விதத்தில் வேதாகமத்தை வாசித்துப் பழக வேண்டும். வேதத்தை வாசிக்கும் போது நாம் நம்முடைய சொந்த கருத்துக்களைக் கொடுத்துவிடக் கூடாது. எழுதியவர் எந்தச் சூழ்நிலையில் எந்த நோக்கத்துடன் எழுதினார்? என்று ஆராய்ந்து விளக்கத்தைக் கண்டறிய வேண்டும். வேதத்தில்  சரித்திரம், செய்யுள், தீர்க்கதரிசனம் என்ற பிரிவுகளில் இலக்கிய நடைகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் உண்டு.

வேதாகமத்தின் ஒரு பகுதியில் கூறப்படும் சத்தியம் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முழுசத்தியத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கிறது. நாம் புதுமையாகக் கண்டுபிடிக்கும் சத்தியங்களை ஆழமான சத்தியம் என்று முடிவாக சொல்லிவிடக்கூடாது; முழுவேதத்தின் வெளிச்சத்தில் அதன் விளக்கத்தைக் கண்டறிய வேண்டும். பரிசுத்த வேதாகமத்தின் சத்தியத்திற்கும், கருத்திற்கும் பொருளும், வியாக்கியானமும் தருவதற்கு பரிசுத்த ஆவியானவரே நமக்கு உதவி செய்கிறார்.
  
II தீமோத்தேயு 3:16, யோவான் 16:13

3. வேதாகம உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை நடைமுறை வாழ்வில் பின்பற்றுதல்
 
வேதாகம ஆராய்ச்சியில் இது முக்கியமானதாகும். நம் வாழ்க்கையில் ஆவிக்கேற்ற மாற்றங்களும் வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக வேதாகமத்தை ஆராய வேண்டும். தேவனை ஆராதிப்பதற்கும், அவரை அறிந்து கொள்வதற்கும், அவரை நேசிப்பதற்கும உதவியான, உபயோகமான உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு விதமான தேவைகளுக்கும் ஏற்ற ஆலோசனைகள் வேதாகமத்தில் தரப்பட்டிருக்கிறது.
 
வேதாகமத்தை நாம் ஆராயும் போது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தீர்மானங்கள் எடுப்பதற்கு உதவும் தத்துவங்களை, கருத்துக்களைக் கண்டறய வேண்டும். கீழே உள்ள கேள்விகள் வேதாகம சத்தியங்களை கண்டுபிடிப்பதற்காக தீர்மானங்களை நாம் செய்வதற்கு உதவும். (யாக்கோபு 1:22)

தேவன் நமக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம், கட்டளை, ஆலோசனை, எச்சரிப்பு, என்ன? தேவனைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வார்த்தைகள் யாவை? நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள பழக்கவழக்கங்கள், மனப்போக்கு, நடை உடை பாவனைகளைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?


Dr.Selwyn founder of Follow-up Ministries Trust, Oddanchatram ( India ), is a Bible Teacher and author of many christian books. Innovative and simplified bible teaching methods taught by him has helped many christians and non-believers alike to know more about God. He could be reached at 91-4553-240623.