Saturday June 15 2019

இதுவும் தேவை
அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறபடியினால்...
பிரசங்கி 5:20

இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் சர்வதேச ஊழியம் ‘ஆபரேஷன் மொபலைஷேசன்’. இதன் ஸ்தாபகர் ஜார்ஜ் வெர்வர் என்ற தேவ மனிதர் ஆவார். அவருடைய செய்திகளைக் கேட்டு உயிர்மீட்சியும், சவாலும் அடைந்தோர் அநேகர். ஒருமுறை சர்வதேச கருத்தரங்கு ஒன்றிற்கு முக்கிய செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். அன்று அவர் கொடுத்த செய்தியின் தலைப்பு, ‘ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து எழுந்து பிரகாசிப்பது எப்படி?’ என்பதாகும். அதில் ஆவிக்குரிய வாழ்வில் பின்மாற்றமடையாமல் இருப்பதற்கான வழிகள் என்று அவர் குறிப்பிடுகையில் 1. ஜெபம் 2. வேதவாசிப்பு 3. தேவமனிதர்களின் ஐக்கியம் 4. ஆத்தும ஆதாயம் என்று சொன்ன் அவர் கடைசியாக ஒரு காரியத்தை சொன்னார். அது என்ன என்று இந்த நாளிலே காண்போம்.

‘ஒரு கிறிஸ்தவன் ஆவிக்குரிய வாழ்வில் விழுந்து விடாமல் உற்சாகமாய் இருக்க அவசியமான ஒரு காரியம் பொழுது போக்கு. கிறிஸ்தனொருவன் எப்போதும் ஜாக்கிரதையுள்ளவனாக இருக்க வேண்டியது உண்மைதான். இந்த உலகம் அழியப் போகிறதுதான். கருத்துள்ளவனாக கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருக்க வேண்டுமென்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் நல்ல பொழுது போக்கிற்கு இடம் கொடுக்கும்போது அவனது ஆவிக்குரிய வாழ்வு மலர்ச்சியடைகிறது. ஓவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்கின் மேல் நாட்டமிருக்கும். ஒரு சிலர் தபால்தலைகளை சேகரிப்பர். வேறு சிலர் வெளிநாட்டு நாணயங்களை சேர்ப்பதில் மகிழ்ச்சி காணுவர். ஒரு மனிதன் தனக்கு பிடித்த ஒரு பொழுது போக்கினால் தன்னை மறக்கும்போது அவன் பிசாசின் பல தந்திரங்களுக்கும், சோர்வுகளுக்கும் தன்னை விலக்கிக்காத்து கொள்ள முடியும். நானறிந்த நண்பர் ஒருவர் அதிகாரம், தலைமைத்துவத்திற்கு மேல் உள்ள இச்சையை தான் விரும்பும் கிரிக்கெட் மூலம் மேற்கொண்டதை நான் அறிவேன். இப்படிப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நம் வாழ்வில் இருக்கும்போது நமது ஜெப வாழ்வு இன்னும் ஆழமாகவும், வேத தியானம் இன்னும் கருத்தாகவும் மாறும்’ என்று கூறினார்.

பிரியமானவர்களே! இந்த செய்தி சற்று வித்தியாசமாக தெரியலாம். இது அவசியமா? என்று கூட நீங்கள் கேட்கலாம். ஆம் அவசியமே! நமக்கு பசி, தூக்கம் தேவைப்படுகிறது போலவே நமது இருதயத்திற்கு இப்படிப்பட்ட மாறுதல் அவசியமே. உங்களுக்கு பிரியமான பொழுதுபோக்கில் உங்கள் நேரத்தை செலவிட பழகுங்கள். ஒரே ஒரு காரியம் அந்த பொழுது போக்கு வேத வசனத்திற்கு முரண்பட்டதாகவோ, பாவகாரியமாகவோ இருக்ககூடாது.

நாம் மேலே கண்ட ஜார்ஜ் வெர்வர் வெளி நாடுகளுக்கு பிரசங்கிக்க செல்லும்போது தனது பையிலே டென்னிஸ் பேட்டை வைத்திருப்பாராம். ஒரு வேளை விளையாட நேரமில்லையென்றால், அதை அவ்வப்போது எடுத்துப் பார்த்து உற்சாகம் அடைந்து தனது ஊழியத்தை மிக நன்றாக செய்வாராம். நீங்களும் நல்ல பொழுது போக்கிறகு உங்கள் வாழ்வில் இடம் கொடுங்கள். சோர்வின்றி உற்சாகமாய் வாழுங்கள்.

ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் எப்போதும் எங்கள் வேலை மற்றும் குடும்ப காரியங்களின் பளுவினால் சோர்ந்து போய் எங்கள் வாழ்வே இதுதான் என்று வாழாதபடிக்கு பொழுது போக்கான காரியங்களில் எங்களை ஈடுபடுத்தி, எங்கள் சிந்தனையை சற்று தளர விட கிருபை செய்யும். நாங்கள் எங்கள் இருதயத்திலே மகிழும்படி நீர் எங்களுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறபடியினால் நாங்கள் மகிழ, உற்சாகமாக எங்கள் வேலைகளையும், உம்முடைய ஊழியத்தையும் நிறைவேற்ற கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


இன்றைய நாளுக்கான இப்பகுதி அனுதின மன்னா குழுவினரால் எழுதப்பட்டது. இவர்களை தொடர்புகொள்ள anudhinamanna@gmail.com என்ற முகவரியில் அனுகலாம்.