ஒத்த சுவிசேஷங்கள்
மத்தேயு, மாற்கு, லூக்கா இந்த மூன்று சுவிசேஷங்களும் சேர்த்து புதிய ஏற்பாட்டில் மூன்றில் ஒரு பங்காகிறது. இந்த மூன்று சுவிசேஷங்களிலும் பல வசனங்கள் ஒன்றையொன்று ஒத்து காண்ப்படுவதால் அவைகள் "ஒத்த சுவிசேஷங்கள்" (Synoptic Gospels)என்று அழைக்கபடுகின்றன. இந்த மூன்று புத்தகங்களும் ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டிய புத்தகங்களாகும்.
- - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து
சீகன்பால்குவின் நூல்கள்
தமிழில் வேதாகமத்தை மொழி பெயர்த்ததுடன் முடிந்துவிடவில்லை சீகன்பால்குவின் பணி. தமிழ் புதிய ஏற்பாடு அச்சிடப் படுவதற்கு முன்பு 1713ஆம் ஆண்டில் தமிழக தெய்வங்களின் வம்சாவளி (Geneology of Malabar Gods) என்ற நூலை எழுதினார். மற்றொரு நூல் நானாவித நூல்கள் என்பதாகும். இது நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி ஆகிய நூல்களின் திரட்டு. இத்துடன் மட்டுமில்லாமல், வினாவிடை என்ற நூலை அச்சிட்டார். வெளிவந்த ஆண்டு 1713. அதன்பின்பு சீகன்பால்குவின் அச்சகத்திலிருந்து வெளிவந்த ஏனைய அவரது நூல்கள் லூத்தரின் ஞானாபதேசம், இரட்சிப்பின் ஒழுங்கு, சோழ மண்டலத்தாருக்கு எழுதும் நிருபம், ஞானப்பாட்டு ஜெபப்புத்தகம் போன்றவையாகும்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.
தீத்து ஒரு கிரேக்கன்
தீத்து புறசமயத்தைச் சார்ந்த ஒரு கிரேக்கன் ( கலா 2:3). இவனை சிறந்த அறிவாளி என்று பவுல் எண்ணினார். கி.பி.50-ஆம் ஆண்டு சீரியாவிலுள்ள அந்தியோகியாவிலிருந்து எருசலேமில் கூடிய ஆலோசனைச் சங்கத்திற்குத் தீத்துவைப் பவுல் அடியார் தம்மோடு அழைத்துச் சென்றார் ( கலா 2:1). ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தீத்து இரண்டுமுறை கொரிந்து நகருக்குச் சென்று அங்கே தங்கி இறைவனுடைய செய்தியை கூறினார்.
- - புதிய ஏற்பாடு ஓர் புத்தகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் )
விண்ணில் வேதம்
முதன் முதலாக விண்வெளிக்கலத்திலே எடுத்துச் செல்லப்பட்ட புத்தகம் நம்முடைய பரிசுத்த வேதகமமே. இது மைக்ரோ பிலிமாக அப்போலோ 8 என்ற விண்கலத்திலே எடுத்துச் செல்லப்பட்டது. வேதாகமத்தின் முதல் வசனமான 'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்' என்பது தான் விண்வெளிக்கலத்திலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாக்கியமாகும். போர்மென் என்ற விண்வெளி வீரர் 1668ம் ஆண்டில் விண்வெளியில் "அப்போலோ 8" விண்கலத்திலிருந்து இதை வாசித்தார்.
- - கேரீத் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு( FMPB) ஊழியத்தின் மாத இதழிலிருந்து