Do You know

பிலிப்பி பட்டணம்

மக்கெதேனியா நாட்டு அரசனும் மகா அலெக்சாண்டரின் தந்தையுமான பிலிப்பு இந்த நகரை கட்டியதால் இது அவருடைய பெயராலேயே பிலிப்பி பட்டணம் என்று அழைக்கப்பட்டது. கி.மு.168ல், இப்பட்டணம் ரோமரின் ஆதிக்கத்துக்குட்பட்டது. கி.பி.42க்கு பின் நடைபெற்ற சண்டைக்குப் பின் பிலிப்பி, ரோமர் குடியேறிய பட்டணமாக மாறியது. பிலிப்பி, மக்கெதோனியா தேசத்தின் நாடுகளில் முக்கியமான பட்டணங்களுள் ஒன்றாகும். அப்போஸ்தலர் நடபடிகள் 16:12ஐ வாசிக்கவும். பவுல் தமது இரண்டாவது மிஷினெரிப் பயணத்தின் போது இப்பட்டணத்திற்கு வந்து ஊழியம் செய்தார்.
- --புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


அல்பா, ஓமெகா

வேதத்தில் நான்கு இடங்களில் அல்பா, ஓமெகா என்ற பதங்கள் காட்டப்பட்டுள்ளன. ( வெளி 1:8,1:11, 21:6,22:13 ). அதென்ன அல்பா, ஓமெகா?. அல்பா என்பது கிரேக்க மொழியுள்ள எழுத்துகளில் முதலாவது எழுத்தாகும். முதலெழுத்து மட்டுமல்ல. இது உயிரெழுத்தும் கூட. தமிழில் 'அ' என்பது போல. இது எபிரெய முதலெழுத்தான 'ஆலெப்' என்பதிலிருந்து மருவி வந்தது. ஓமெகா என்பது கிரேக்க மொழியின் கடைசி எழுத்து. முதலும் முடிவும் என்பதை குறிப்பிடவே அல்பா ஓமெகா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


எஸ்ரா என்றால்

எஸ்ரா என்றால் 'உதவியாளர்' என்று பொருள். பாரம்பரியத்தின் படி வேதாகம புத்தகத்தில் எஸ்ரா என்ற நூலின் தலைமை பாத்திரமாக (Chief Character of the book) விளங்குகின்றான் ( எஸ்ரா 7:1,11,25,28, 8:15,16,17,21) .இவன் ஆரோனின் வழி வந்தவன். செரெயா என்பவனின் மகன் ( 7:1). திருமறையை ஆராய்ந்தவன். போதகன். இவன் இறைவனுக்குக் கீழ்படிதலுள்ள ஒரு சிறந்த கடவுள் மனிதன் ( 7:10). யூதர்களின் தலைவன்.பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து, அர்த்தசஷ்டா மன்னனின் காலத்தில் கி.மு.458 - ஆண்டு யூத மக்களை தலைமை தாங்கி எருசலேமுக்கு திரும்பிக் கொண்டு வந்தவன். இவன் காலத்தில் யூதமக்கள் பாபிலோனிய மன்னனின் தயவு பெற்று விளங்கினார்கள்.
- - பழைய ஏற்பாடு ஓர் புத்தகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் )


கால்டுவெல்

தமிழ் வேதத்தை மொழிபெயர்த்த குழுவில் முக்கிய இடம் பெற்றவர் கால்டுவெல் ஆவார். 1814ல் அயர்லாந்து நாட்டில் பிறந்து பின்னர் மிஷினரியாக தமிழ்நாடு வந்து நெல்லை மாவட்டத்தில் தொண்டாற்றிய இவருடைய பணி சாதாரணமல்ல. வேதத்தை மொழி பெயர்ப்பதில் பெரும் பணியாற்றியது மட்டுமன்றி, தமிழில் ஜெபப்புத்தகத்தையும், சபையின் அஸ்திபாரம் என்ற ஞானப்பாட்டையும் மொழி பெயர்த்த பெருமை இவரியே சாரும். இது மட்டுமன்றி, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல், நெல்லை பொது சரித்திரம் மற்றும் எஸ்.பி.ஜி. மிஷன வரலாறு போன்ற சிறந்த நூல்களையும் படைத்தார்.இடையன்குடியிலுள்ள சுவின்மிகு ஆலயம் கட்டப்பட்டதும் இவரால்தான். கால்டுவெல் 1891ம் ஆண்டில் கொடைக்கானலில் மரித்தார்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.