Do You know

மோவாபியப்பெண் ரூத்

சவக்கடலுக்கு கிழக்கிலுள்ள மலை நாட்டில் வாழ்ந்த மக்கள் மோவாபியர் எனப்பட்டனர். லோத்து என்பவன் மோவாபுக்குத் தகப்பன் ( ஆதி 19:37 ). பழங்கால மக்கள் இந்நாட்டை லோத்தான் என்று அழைத்தார்கள் ( ஆதி 26:20). இஸ்ரவேலர் அர்னோன் பள்ளத்தாக்கு வடக்கே இருந்த மோவாபிய ஊர்களைப் பிடித்தார்கள். ( 32:34, யோசுவா 13:15). மொவாபியர் கோமேஷ் கடவுளையும், அஸ்ரோத் தேவியையும் வணங்கினார்கள். இந்த இனத்தைச் சேர்ந்தவள் தான் ரூத்.
- - பழைய ஏற்பாடு ஓர் புத்தகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் )


1763 இல் திருச்சி

இந்திய திருச்சபை வரலாற்றில் 1750 முதல் 1798 வரை பணியாற்றி முத்திரை பதித்தவர் கிறிஸ்டியன் பிரெடெரிக் சுவார்ட்சு அவர்கள். 1763 இல் திருச்சி மலைக்கோட்டைக்கருகில் இராணுவ கிடங்கில் வெடி மருந்துகள் வெடித்து சிதறியதால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்தியரும், ஆங்கிலேயருமென பல நூறு பேர் மரணம் அடைந்தனர். பட்டர் வொர்த் தெரு முழுவதும் இராணுவக் கிடங்கின் கற்சுவற்கள் விழுந்து கிடந்தன. இந்தக் காட்சி சுவார்ட்சை மிகவும் துயருறச் செய்தது. பல சிறுவர், சிறுமியர் அனாதைகளாக்கப்பட்டனர். அவர்களுக்கென்று 300 வராகன் பணம் திரட்டி ஒரு விடுதியை ஆரம்பித்தார். அதுவே இன்று புகழ் பெற்று விளங்கும் தூய யோவான் ஆங்கிலோ இந்தியன் வெஸ்ட்ரி மேல் நிலைப்பள்ளி.
- - விழுதுகள் (திருச்சி கோட்டை கிறிஸ்துநாதர் ஆலய காலாண்டு செய்தி மலர், மே 2014 )


நான்கு பெண்கள்

யூத மதப் பின்னணியத்தில் தோன்றிய இயேசு பெருமான் எல்லா மனிதர்களையும் விரும்பி அன்பு செலுத்தவே வந்தார். அவருடைய முன்னோர்கள் வரலாற்று அட்டவணையில் (Genealogy) வருகின்ற தாமார், ராகாப், ரூத், பத்சேபாள் என்னும் நான்கு பெண்களும் யூதர்கள் அல்ல.முப்பத்து மூன்று ஆண்டுகள் அவர் வாழ்ந்த இடம் கலிலேயா. அது "புற இனத்தாருடைய கலிலேயா" ( மத்தேயு 4:14) என்றே அழைக்கப்பட்டது. யூதர்கள் விரும்பாத சமாரியர் நடுவிலும் அவர் சென்று தங்கினார்.
- - சிலுவை மாண்பு ( எழுத்தாக்கம் : பசுமலைப் புலவர் வீ.ப. நடராசன்)


பார்வோன்

எகிப்து சாம்ராஜ்யத்தின் ராஜாக்களுக்கு பார்வோன் என்ற பட்டப் பெயர் உண்டு. பார்வோன் என்பது பெயர் அல்ல. அது அவர்களின் பட்டம். இஸ்ரவேலரை கொடுமையாக நடத்தினவன் "ராமசேஸ்-" என்பவனாகும். இஸ்ரவேலர் விடுதலை பெற்று எகிப்தைவிட்டு வெளியேறியபிறகு இவனுடைய மகன் "மொநப்தா" என்பவன் ஆண்டான் ( யாத். 1:8). பார்வோன் என்பதற்கு - பெரியவன் என்பது பொருளாகும்.
- - கானான் யாத்திரை ( ஆசிரியர் :பாஸ்டர் மா.ஜான்ராஜ்)