Do You know

தீர்க்கதரிசி - எபிரேய மொழியில் மூன்று சொற்கள்

1. நபி (Nabi ) - இச்சொல் திருமறையில் முந்நூறு முறைக்கும் அதிகமாக வருகிறது. தமிழ் திருமறையில் தீர்க்கதரிசி என்று மொழிபெயர்த்திருக்கும் இச்சொல்லின் மூலப்பொருள் தெரிவிக்கிறவன் அல்லது கூறுகிறவனாக இருக்கலாம்.

2. ரோகே (Roeh) - இச்சொல் திருமறையில் ஒன்பது முறை வருகிறது. இதன் மூலப்பொருள் காண்கிறவன் என்பதாகும். இச்சொல் திருமறையில் தமிழ்மொழியில் ஞான திருட்டிக்காரன் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

3. கோசே (Chozeh) : இச்சொல் திருமறையில் இருபது முறை வருகிறது. இதற்கு உரைக்கிறவன் என்று பொருள். இச்சொல் தமிழ்த் திருமறையில் ஞானதிருட்டிக்காரன் என்றும், தரிசனம் பார்க்கிறவன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- - பழைய ஏற்பாடு ஓர் புத்தகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் )


70

இந்த எண் இஸ்ரவேலர் பாபிலோனில் செலவிடப்பட்ட சிறையிருப்பின் காலத்தைக் காட்டுகிறது. கி.மு.605இல் இருந்து கி.மு.536 வரை இஸ்ரவேலர் பாபிலோனில் கழித்தார்கள். தற்காலத்தின் ஈராக் நாடு இருக்கும் பகுதியில் தான் பாபிலோன் நாடு இருந்தது. இஸ்ரவேல் நாட்டிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் பாபிலோனிய நாடு இருந்தது. நாடு கடத்தப்பட்டு சிறையிருப்பின் கீழ் இஸ்ரவேலர் அனுப்பப்பட்டாலும், தேவனுடைய வார்த்தையின் படி அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினார்கள். இந்த சிறையிருப்புக் காலத்தில் தான் எசேக்கியேல், தானியேல் என்ற தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.
- - "தீர்க்கதரிசன புத்தகங்கள் ஓர் அறிமுகம்" ( எழுதியவர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலிருந்து


யோவானும், பத்மு தீவும்

இயேசுவுக்கு அன்பான சீஷனாகிய யோவான், எபேசுவில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது, ரோமா புரிக்கு இழுத்துச் செல்லப்பட்டு கொதிக்கிற எண்ணையில் தூக்கிப் போடப்பட்டார். எந்தவித சேதமுமின்றி கர்த்தர் அவரை காத்தார். இராஜாவான தோமித்தியன் இதைக் கேள்விப்பட்டு பயந்து போய் பத்மு தீவுக்கு நாடு கடத்தினான். ஐக்கேரியன் கடலிலுள்ள மிகச்சிறிய தீவுதான் இந்த பத்முதீவு. சாமோஸ்க்கு 20 மைல் தூரம் தெற்கேயும், ஆசியா மைனருக்கு 24 மைல் மேற்கேயும் இந்த தீவு அமைந்திருந்தது. இங்கே வைத்துதான் வெளிப்படுத்தின விசேஷத்தை யோவான் எழுதினார்.
- - புதிய வானம், புதிய பூமி 1000 வருட அரசாட்சி ( ஆக்கியோன் : பாஸ்டர் S.ஞானமுத்து)


18 யூத சட்ட பிரிவுகள் மீறப்பட்டன

இயேசுவானவரை கெத்சமேனே தோட்டத்தில் வைத்து பிடித்த பிறகு அதே இரவில் தானே அவரை ஐந்து நியாய சங்கங்களுக்கு முன்பாக இழுத்துக் கொண்டுபோய் நிறுத்தி ஆறு தடவைகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார் என்று யூத ஆசிரியர் ஜோசப் பின் கூறுகிறார். அது மாத்திரமல்ல. 18 யூத சட்ட பிரிவுகள் மீறப்பட்டன. ஆனபடியால் தான் அவர் சிலுவை மரணத்திற்கு ஒப்புகொடுக்கப்பட்டார். அவர் சிலுவையிலே மரிக்க வேண்டுமென்பது தேவனுடைய அநாதி தீர்மானங்களில் ஒன்றாய் இருந்தபடியினால் எப்படியாகிலும் அது நிறைவேற்றப்பட வேண்டுமே!.
- -"சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து