Do You know

தரங்கம்பாடியில் "புதிய எருசலேம்" ஆலயம்

1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் நாள் தமிழகத்தில் உள்ள தரங்கம்பாடிக்கு சீகன் பால்க் வந்த 10 மாதங்களில் 5 தமிழர்கள் ஞானஸ்தானம் பெற்றார்கள். சபை வளரத் தொடங்கியதால் தேவனைத் தொழுது கொள்ள ஆலயம் கட்டினார்கள். இரண்டே மாதங்களில் ஆலயம் கட்டி முடிக்கப் பட்டு 1707ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் நாள் "எருசலேம் ஆலயம்" என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1717ம் ஆண்டு மீண்டும் பெரியதொரு ஆலயத்தைக் கட்டி "புதிய எருசலேம்" என்ற பெயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்பேராலயம் இன்றும் தரங்கம்பாடியில் நினைவுச் சின்னமாக திகழ்கிறது.
- - நற்செய்தி மலர் ( தமிழ் நாடு சுவிசேஷக் குழுவின் மாதாந்திர இதழ்)


ஒலிவமரம்

இஸ்ரவேலர்களின் வாழ்வில் பிரதான இடம் வகிப்பது ஒலிவ எண்ணை. விளக்கெரிப்பதானாலும் சரி, தலைக்கு தேய்த்துக் கொள்வதானாலும் சரி, மருந்தாக பயன்படுத்துவதனாலும் சரி, அழகு சாதனப் பொருட்களாக பயன்படுத்துவதனாலும் சரி, இஸ்ரவேலருக்கு எல்லாம் ஒலிவமரம் தான். ஒரு ஒலிவ மரத்திலிருந்து சுமார் 20 லிட்டர் எண்னை எடுக்கக் கூடிய அளவிற்கு பழங்கள் கிடைக்குமானால் அந்த மரம் நல்ல விளைச்சலுள்ள மரம் என்று கருதப்படும்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


"நியாயாதிபதிகள்" என்ற வார்த்தை

"நியாயாதிபதிகள்" என்ற இந்த வார்த்தையின் பொருள் நியாயம் விசாரிக்கிறவர், இரட்சிக்கிறவர் என்று பல விதங்களில் வழங்கப்படுகிறது. இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் 13 நியாயாதிபதிகள் பெரும்பாலும் யுத்தங்களை செய்து இஸ்ரவேலரை விடுதலைக்குள் நடத்தினவர்களாகவே செயல்பட்டனர்.நியாயாதிபதிகள் 2:18 ஆம் வசனத்தை வாசித்துப் பாருங்கள். தற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்கிறோமே, அவர்களைப் போலத்தான் நியாயாதிபதிகளும் இருந்தனர். இவர்களுள் கிதியோன், தெபோராள், யெப்தா, சிம்சோன் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
- - சரித்திர புத்தகங்கள் ஒர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


பழைய ஏற்பாட்டில் பெந்தெகொஸ்தே பண்டிகை

பெந்தெகொஸ்தே என்கிற எபிரேய பதத்தின் சரியான அர்த்தம் 50வது நாள் என்பதாகும். பஸ்கா பண்டிகைக்கு மறுநாளான ஓய்வு நாளிலிருந்து அதாவது வாரத்தின் கடைசி நாளாகிய சனிக்கிழமையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணும் போது 7 X 7 = 49 ஆகிறது. சனியோடு 49 நாட்கள். ஞாயிறு 50 ஆவது நாள். இது தான் பெந்தெகொஸ்தே என்னும் நாள். இந்த நாளுக்கான பண்டிகைக்கு அறுப்பின் பண்டிகை என்கிற பெயரும் உண்டு.
- - "சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து