சூடா ஒரு டீ
பொ.ம.ராசமணி
Leader-Stewardship

அதிகாலை, குளிர்நேரம், காபி குடிப்பதற்காக தர்மநாதன் டீக்கடைக்குள் நுழைந்தான். சூடான டீயை ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருந்தார் வேட்டைக்காரர் வீரையா.
 
“வாப்பா, தர்மம், நேற்று கேலிக் கூத்தைக் கேட்டியா? ஓரே தமாஷ்!”
 
“கேட்டியான்னா, என்ன அர்த்தம்? நீங்க சொன்னாத்தானே, தெரியும்!”
 
“நேற்று வேட்டையிலே ஒரு முயலடிச்சு, கோணிப்பைக்குள்;ளே போட்டுக் கட்டிக்கொண்டு வந்துக்கிட்டிருந்தேன். உன் மகன் முத்து எதிக்க வந்தான். பெரியய்யா, கோணிப்பைக்குள்ளே என்ன கிடக்குன்னு விசாரிச்சான். ஒரு முயல் அகப்பட்டுதுன்னு சொன்னேன். அப்படியா, பெரிய்யா, காது குறு குறுன்னு அரிக்குது, குடைவதற்கு இரண்டு இறகு புடுங்கித் தாருங்கன்னு கையை நீட்டினாhன். எப்படி இருக்கு பார்த்தியா, உன் மகன் அறிவு” என்று சொல்லிட்டு வீரையா கடகடவென்று சிரித்தார்.
 
பக்கத்திலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் சிரிக்கக் தொடங்கினார்கள்.
 
தன்னைக் கேலி செய்தாலும் தர்மநாதன் பொறுத்துக்கொள்வான் தம் மகனைக் கேலி செய்வதை அவனால் தாங்க முடியவில்லை.
 
“என்ன சிரிக்கிறீர்கள்? தெரியாத்தனமா உங்க வீடுகளிலே சின்னஞ் சிறுசுகள் ஒரு தப்புத்தண்டா பண்ணாதா?” என்று மற்றவர்களை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு தர்மநாதன் வேட்டைக்கார வீரையா பக்கம் திரும்பினான்.
 
“அண்ணே, அவன் கிடக்கிறான், முட்டாள். மூதி முன்னப்பின்னே காட்டுக்குப் போனவனா, முயலைப் பார்த்தவனா? ஏதோ நீங்க சொன்னது அவன் காதிலே அரைகுறையாய் விழுந்திருக்கும்போல இருக்கு. நீங்க ஆமையைத்தான் பிடிச்சுட்டுப் போறேகளோன்னு நெனைச்சு அவன் காது குடைய இறகு கேட்டிருப்பான்” என்று விளக்கமும் தந்தான்.
 
கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அடிவயிற்றிலிருந்து வரும் சிரிப்புக்கு அங்கேயே சமாதிகட்டிவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென்று விழித்தனர்.
 
வேட்டைக்கார வீரையாவும், “ அது சரிதான். அப்படித்தான் நினைச்சுருக்கணும். சரி, சரி, நீ வந்த சோலியைப் பாரு, என்று சொல்லி விட்டு, “தம்பிக்கு சூடா ஒரு டீ கொடு” என்று கடைக்காரனிடம் ஆர்டரும் கொடுத்தார்.

நீதிமொழிகள் 8:13 : தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்