பிடித்தமான புடவை
திருமதி ஜேசுபாதம்
Reaching out people
என் பிறந்த நாளுக்குப் புடவை வாங்க துணிக்கடை ஒன்றிற்குச் சென்றேன். உள்ளே நுழையும் போது வெளியே கணவன் மனைவி நின்று கொண்டிருந்தனர். கணவன் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். அந்த பெண் அழுது கொண்டிருந்தாள்.
 
எனக்குப் பிடித்தமான புடவை அங்கு கிடைக்காததால் வேறு கடையில் வாங்கலாமென வெளியே வந்தேன். அந்த கணவன், மனைவி அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அந்தப் பெண் இன்னும் அழுது கொண்டிருந்தாள். மிகுந்த ஏழைபோல் தோன்றியதால் என்னவென்று விசாரித்தேன்.
 
தன் மகளுக்கு இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்றும், மணப்பெண்ணுக்குப் புடவை வாங்கக் கொண்டு வந்தப் பணத்தை அந்தபெண் தொலைத்து விட்டதாகவும், அதனால்தான் அவளைத் தான் திட்டுவதாகவும் சொன்னார் அந்த ஆள்.
 
“பையில் பணத்த வச்சிட்டு நின்னுட்டு வந்தேம்மா! கூட்டம் நிறைய இருந்திச்சி, இங்க எறங்கினதும் பையப்பாத்தா யாரோ வெட்டி எடுத்திட்டு இருக்காங்கம்மா” என்று கூறி அழுதாள். அதிக பணத்தை தொலைத்து விட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணி,
 
“எவ்வளவு பணம் கொண்டு வந்தீங்க” என்றான். “ஐந்நூறு ரூபாம்மா” என்றனர்.
 
“என்னது ஐந்நூறு ரூபாயில் பொண்ணுக்குப் புடவையா! என்றேன். ஆச்சரியம் தாங்காமல் ஆயிரம் ரூபாய்க்குப் புடவை எடுக்க இருந்தேன் எனக்கு. உடனே அதிலிருந்து ஐந்நூறு ரூபாயைக் கொடுத்தேன். முதலில் தயங்கினார்கள். பிறகு சந்தோஷமாக வாங்கிக் கொண்டனர்.
 
“இதவச்சி பொண்ணுக்குப் புடவை வாங்குங்க! கல்யாணத்துக்கு என் வாழ்த்து, இந்தப் பணத்தத் திருப்பித் தரவேண்டாம்” என்று சொல்லி விட்டு மீதி ஐந்நூறு ரூபாயில் எனக்குப் புடவை எடுத்துக் கொண்டு ஏழைப் பெண்ணுக்குக் கொடுத்ததை எண்ணிப் பெருமையோடு வந்தேன்.
 
பிறகுதான் யோசித்தேன் “ஐந்நூறு ரூபாய்க்கு புடவை வாங்கும்போது பிறந்த நாளுக்கு ஐந்நூறு ரூபாய் புடவை தேவையா! முழுவதையும் கொடுத்திருக்கலாமே என்று எண்ணி வருந்தினேன்.
 
அடுத்த வாரம் எனக்கு வந்த ஒரு கடிதத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு மூன்றாவது பரிசு கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்ட நாளில் வந்து பெற்றுக் கொள்ளும்படியும் எழுதியிருந்தது. ரூபாய் ஐயாயிரமும் சில புத்தகங்களும் கிடைத்தது. வாங்கி வரும்போது ஏழைகளுக்குக் கொடுப்பதை கடவுள் நமக்குத் திரும்பி தருவார் என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்தது. அதே சமயம் 500 ரூபாய்க்கு பதில் ஆயிரம் ரூபாயை ஒரு வேளை அந்த மணப்பெண்ணுக்காக கொடுத்திருந்தால் எனக்கு முதல் அல்லது இரண்டாம் பரிசு கிடைத்திருக்குமோ என்று எண்ணினேன்!
 
“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். (நீதி.19:17)

சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.