சருவ லோகாதிபா, நமஸ்காரம்
Bro.A.Stanley Chellappa
Reaching out people

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்.
….

இந்த அருமையான துதிப் பாடலை எழுதிய அருள் திரு. வேதமாணிக்கம், 1864-ம் ஆண்டு கல்லுக் கூட்டத்தில், மதுரநாயகம். - தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். தனது 20-வது வயதில், வேதமாணிக்கம் மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார்.

வேதமாணிக்கம் தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன்;  இங்கு எப்படி வேலை செய்யலாம்?” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது.

ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார். பல பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார்.

தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த “சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். இந்நிகழ்ச்கிகளில் பாட, “சுவிசேஷப் படையெழுச்சிக் கீதங்கள்,” என்ற 16 பாடல்கள் அடங்கிய பாடல் புத்தகத்தை வெளியிட்டார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார்.

ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்களையும், கதாகாலட்சேபங்களையும் நடத்தி வந்தனர். வெள்ளி, மற்றும் ஞாயிறு இரவு ஜெபக் கூட்டங்கள் வாத்தியக்கருவிகளுடன் பாட்டுகள் முழங்க நடைபெற்றன.

1917-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில், 10-5-1917 அன்று, தனது 53-வது வயதில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ! இன்ப காலமல்லோ,” “ஜீவ வசனம் கூறுவோம்,”  என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

 


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com

Social Share