மெய்யான தீப ஒளி
Bro. Mohan C. Lazarus
Reaching out people

“இறைவன் தீய சக்தியை அழித்தார்” என்ற விசுவாசத்தோடு அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த தீபம் ஏற்றி மகிழ்வதுதான் தீபாவளி. நம்மை உண்டாக்கின ஆண்டவர் ஒளியாயிருக்கிறார் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.
வெளிச்சம் இல்லாமல் நாம் வாழமுடியாது. ஆகவே, இறைவனை வெளிச்சத்திற்கு ஒப்பிடுகிறோம். தீய வல்லமைகளை “இருளின் வல்லமைகள்” என்று சொல்கிறோம். மனிதனுக்கு தீமையைக் கொடுக்கும் இந்த இருளின் சக்தியிலிருந்து மனிதனை காக்க இறைவன் ஒளியாயிருக்கிறார் என்பதே நம்முடைய நம்பிக்கை.

இந்த உலகத்தில் செயல்படுகிற தீய வல்லமைகள் மனிதனுடைய வாழ்கையில் பலவிதமான இருளைக்கொண்டு வந்து மனிதனைக் கலங்க பண்ணுகிறது.

பாவ இருள் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்கிறபடியால் மனிதன் இறைவனோடுள்ள ஜக்கியத்தை இழந்து சமாதானமற்று தவிக்கிறான். பக்தியோடு கூட தெய்வத்தை வழிபட்டு வந்தும் கூட உள்ளத்தில் மெய்யான சமாதானம் காணப்படவில்லை. பலவிதங்களில் இறைவழிபாடு செய்தும் நிரந்தரமான ஒரு ஆத்ம அமைதியை காணமுடியவில்லை.

பாவங்களிலிருந்து பாவப் பழக்க வழக்கங்களிலிருந்தும், பாவச் சுபாவங்களிலிருந்தும் விடுபடமுடியாமல் உள்ளம் தவிக்கிறது.
பிசாசின் இருள் மனிதனை பயப்படுத்தி கலங்கப்பண்னுகிறது. பில்லி-சூனியங்கள், மந்திரக் கிரிகைகள் என்ற இருளின் தீய வல்லமைகளினால் பாதிக்கப்பட்டு குடும்பங்கள் நிம்மதியற்று அங்கலாக்கிறது.

வீட்டில் வியாதிகள், வேதனைகள், காரணமில்லாத சண்டைகள், பிரிவினைகள், நஷ்டங்கள், இழப்புகள், என்று இருளின் வல்லமையினால் எற்படும் பாதிப்புகள்.

இறைவனை பக்தியோடு தேடியும், செலவுகள் செய்தும் வழிபட்டும் இந்த வேதனை மாறவில்லையே!

மரண இருள் மனிதனுக்குள் மரண பயத்தை கொண்டுவந்து கலங்க பண்ணுகிறது. மரித்தால் அடுத்து வாழ்வில் என்ன நடக்கும் என்று அறியாதபடியால் மரண பயத்தில் தினந்தோறும் செத்துக் கொண்டிருக்கிறவர்கள் அனேகர்!

மனுகுலத்தை இந்த இருளின் வல்லமையிலிருந்து விடுதலையாக்கி மனிதனுடைய வாழ்கையில் வெளிச்சத்தைக் கொண்டுவர ஒளியில் இருக்கிற இறைவன் இந்த உலகத்தில் வெளிப்பட்டார்.

“தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” 1 யோவான் 1:5

இந்த உலகத்தையும் நம்மையும், உண்டாக்கின இறைவன் ஒளியாகவே இருக்கிறார். தன்னுடைய வெளிச்சத்தின் மூலம் மனிதனுடைய இருளை மாற்றுவதற்காக இறைவனே இந்த உலகத்தில் நம்மைபோல் மனிதனாய் அவதரித்தார். மனிதனாய் அவதரித்த இறைவனுக்கு “இயேசு கிறிஸ்து” என்று பெயரிடப்பட்டது.

“நான் ... உலகத்தின் ஒளியாயிருக்கிறேன்.” (யோவான் 9:5) என்று இயேசு சொன்னார். சொன்னது மாத்திரமல்ல பாவ இருளில் சிக்கி தவித்த ஏராளமானவர்களுடைய இருளை தன்னுடைய வெளிச்சத்தை வீசி பாவ சாப இருளிலிருந்து விடுதலையாக்கினார்.

பிசாசின் வல்லமையில் இருந்து ஏராளமானவர்களை விடுதலையாக்கி, வாழ்கையை ஒளிவீசச் செய்தார். மரண இருளை போக்கி, நம்பிக்கை என்னும் வெளிச்சத்தை ஏராளமானவர்களுக்கு கொடுத்ததர்.

இந்த இயேசு என்னும் மெய்யான ஒளி உங்களுக்கு தேவை. உங்கள் வாழ்கையின் இருளை அவர் வெளிச்சமாக்குவார்.

“உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” (யோவான் 1:9) நீங்கள் யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும், என்ன இருள் உங்கள் வாழ்கையில் இருந்தாலும், உங்கள் இருளை வெளிச்சமாக்க இயேசு என்னும் மெய்யான ஒளி வல்லமையுள்ளதாயிருக்கிறது.

இயேசு உலகத்தில் உதித்தபோது, “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது”, (மத்தேயு 4:15) என்று சொல்லப்பட்டது.

மனிதனுடைய இருளை வெளிச்சமாக்க, இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகள் என்ற இருளின் வழியாக கடந்து சென்றார். பாவங்களையும் சாபங்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார்.(1 பேதுரு 2: 24,  கலா. 3:13) தான் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் பிசாசின் கிரிகைகளை அழித்தார். (1 யோவான் 3:8) மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தம் மரணத்தால் அழித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இன்று நீதியின் சூரியனாக பிராகாசித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஒளியாகிய இயேசு நம் உள்ளத்தில் வரும்போது, நம் வாழ்கையின் பாவ சபா, பிசாசின் இருளெல்லாம் தானாய் விலகி போய்விடும்.

இயேசு கிறிஸ்து ஒரு மதத்தை ஸ்தாபிக்கவோ, மதத்தை பரப்பவோ இந்த உலகதிற்கு வரவில்லை. இயேசுவை ஏற்றுக்கொள்வது மதம் மாறுவதல்ல. உலகத்திற்கு ஒளியாக இருக்கிற இயேசுவை நம் வாழ்கையில் எற்றுக்கொள்ளும் போது, உலகத்தை உண்டாக்கின இறைவனே நமக்குள் வந்து, நமக்குள் வாசம் பண்ணுகிறார். நம்முடைய வாழ்கையில் இருள் நீங்கி, வெளிச்சம் உண்டாகிறது. மெய்யான ஒளியாகிய இயேசுவை தீப ஒளியாக நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோமாக.

இயேசுவே,
உலகத்தில் உதித்த மெய்யான ஒளியே!
என் உள்ளத்தில் வாரும்!
பாவ, சாப இருளை போக்கும்!
பிசாசின் இருளை நீக்கும்!
மரண இருளை மாற்றும்!

இந்த இயேசு கிறிஸ்துவை குறித்து மேலும் நீங்கள் அறிந்து கொள்ளவும், உங்களுக்காக வேண்டுதல் செய்யவும் , கீழ்கண்ட வெப் லிங்க் (Web Link ) மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

Contact Link

 


 


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share