பிறருடைய புகழ்ச்சி
சகோ. சாம்சன் பால்
Volcano and Lady

உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது... லூக்கா-6:26
 
"ஜயா... உங்களைப் போன்ற நல்லவரை நான் பார்த்ததேயில்லை" என்றாராம் ஒருவர். அதைக்கேட்டவரோ "நீங்கள் வெகு சிலரையே பார்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்" என்றாராம். ஆம். அவர் அதிகமான நபர்களைச் சந்திக்காததின் விளைவாகவே தன்னைக் குறித்து அவ்விதம் நினைப்பாதாக அவர் கருதினார்.
 
சிலர் நம்மைக் குறித்துப் பிரமாதமாகச் சொன்னவுடன் நாம் எப்படியிருக்கின்றோம் என்று உணராமல் நம்மை மிக நல்லவர்களாக எண்ணிவிட வாய்ப்பு உண்டு. நான் வாலிபனாக இருந்த நாட்களில் சிலர் என்னை "மிக நல்ல பையன்" என்று சொல்லியிருக்கின்றார்கள். நானும் உடனே அதனை அப்படியே நம்பி என்னை ஒரு நல்லவனாக நினைத்த நாட்கள் உண்டு. ஆனால் அந்த நாட்களில் நான் அவ்வளவு நல்லவனாக இருந்ததில்லை.
 
பொதுவாக மனிதர்கள் தாங்கள் பிசாசுகளைப் போல இருந்தாலும் தெய்வங்கள் போல இருப்பதாகப் பாராட்டப்படுவதை விரும்பும் சுபாவம் உடையவர்கள். எனவே தான் சில அரசியல் தலைவர்கள் தாங்கள் அவ்வளவு மோசமாயிருந்தாலும் தங்களைத் தொண்டர்கள் தெய்வங்கள் போல சித்தரிப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்து விடுகிறார்கள்.
 
நம்மைக் குறித்த சரியான நிச்சயமும் புரிந்து கொள்ளுதலும் வேண்டும். உலகம் நம்மை எப்படிப் பார்க்கின்றது என்பதை விட நம்முடைய .இதயங்களைப் பார்க்கும் தேவனுடைய பார்வையில் நாம் எப்படியிருக்கிறோம் என்பதே முக்கியமானது. நம்முடைய உள்ளும் புற புரிந்துமும் எப்படியிருக்கிறது என்பதைப் எப்படிப் பார்க்க இயன்ற தேவன்தான் நமக்கு நல்ல சாட்சியைத் தர முடியும். மனிதர்களின் புகழ்ச்சியைக் கேட்டுத் தங்களை மேன்மையாக எண்ணி வீழ்ந்து போவோர் பலர். மனிதர்களின் சாட்சிகளை அசட்டை செய்யக் கூடாது. ஆனால் அவைகளைச் சார்ந்து விடவும் கூடாது. இன்று என் தேவன் எனக்கு என்ன சாட்சி தருவார் என்பதே முக்கியம்.

உன் வாழ்க்கையின் செயல்முறைகள் உனக்கு யாரோடு ஐக்கியம் என்பதை வெளிப்படுத்துகின்றது.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.